கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசுப் பள்ளியில், ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக மூன்று மாணவிகள் சமூக வலைதளங்களில் காணொளி வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியையும் மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் இசை மற்றும் தாவரவியல் ஆசிரியர்களாக பணியாற்றிவரும் காமவெறிப்பிடித்த மிருகங்கள் மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளன.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதியன்று அப்பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவிகள் மூவர் தங்களது முகத்தினை துணியால் மறைத்துத் கொண்டு தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை விளக்கி காணொளி வெளியிட்டது நெஞ்சை பதைபதைக்கச் செய்தது. அக்காணொளியை சமூக ஆர்வலர் ஒருவர் மூலமாக பள்ளிக்கல்வித்துறைக்கு மாணவிகள் அனுப்பியதையடுத்து இச்சம்பவம் ஊடக வெளிச்சம் பெற்றது.
அக்காணொளியில் மாணவிகள் கூறியதாவது:
இசை ஆசிரியர் கலைச்செல்வன் நடனம் கற்றுக் கொடுக்கும்போது எங்களின் இடுப்பு மற்றும் அந்தரங்க இடங்களில் அத்துமீறி கை வைப்பார். நாங்கள் நடனம் ஆடும்போது அவர் பார்க்கின்ற பார்வையே வேறு மாதிரியாக இருக்கும். அதே போன்று நிர்வாக பொறுப்பில் இருக்கும் தாவரவியல் ஆசிரியர் பாலன் ஊக்கப்படுத்துவது போன்று எங்களின் தோள்பட்டையில் தட்டிக் கொடுத்தும், பிற இடங்களில் அத்துமீறி கை வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவார்.
இசை மற்றும் தாவரவியல் ஆசிரியர் பள்ளிக்கு வரும்போது மதுபோதையில்தான் வருகின்றனர். இதனால் பள்ளிக்கு வருவதற்கே அச்சமாக உள்ளது. ஆசிரியர்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தால் எங்களை தண்டித்து விடுவார் என்ற பயத்தில் சொல்லவில்லை. வீட்டில் சொன்னால் எங்கள் படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்று பெற்றோர்களிடமும் சொல்லவில்லை. இவ்விரு ஆசிரியர்களும் எங்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வருகின்றனர். இதனால் அவர்களுடன் விளையாட்டு போட்டிகளுக்கு வெளியே செல்வதற்கு அருவருப்பாக உள்ளது. ஆசிரியர்களை மாற்ற வேண்டும்.
இத்தனை நாட்களாக வெளியே சொல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்தோம். தற்போது எங்களின் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்து நிறுத்தவும், எங்களின் சகோதரிகளுக்கு இதுபோன்று நடப்பதை தடுப்பதற்காகவும் அரசின் மீது நம்பிக்கை வைத்து தெரிவித்துள்ளோம்.
இதுகுறித்து மாணவி ஒருவரின் தாய் கூறும்போது, ‘’கலைச்செல்வன் என்ற ஆசிரியர் குடிபோதையில் பள்ளிக்கு வருகிறார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தி.மு.க., அ.தி.மு.க-வை சேர்ந்த பிரமுகர்கள் பள்ளியின் உள்ளே வந்து மிரட்டுகிறார்கள். தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து குழந்தைகளின் நலன் கருதி பாதுகாப்பு தர வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: ஒடிசா: தொடரும் பெண்களின் மீதான பாலியல் கொடூரங்கள்!
ஆனால், பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழியோ, “பள்ளி மாணவிகள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டு குறித்து தனக்கு எதுவும் தெரியாது” என்று அயோக்கியத்தனமாக பதிலளித்துள்ளார். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் இருவரும் அரசு பதவி மற்றும் அதிகார வர்க்கத்தின் துணையுடன் மாணவிகளிடம் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதை அப்பள்ளியின் முன்னாள் மாணவிகளின் சமூக வலைத்தளப் பதிவுகள் அம்பலப்படுத்துகின்றன. மேலும், ஆசிரியர்கள் குடிபோதையில் பள்ளிக்கு வருவது குறித்து பலமுறை புகாரளிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தாய் தெரிவிக்கிறார். ஆனால், தனக்கு எதுவுமே தெரியாது என நாடகமாடி குற்றத்திற்கு துணைபோகிறார் தலைமை ஆசிரியர்.
இந்நிலையில், கோவை மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் பேரூர், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசு நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்குச் சென்று இரு ஆசிரியர்கள் மற்றும் 585-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர். காணொளி வெளியிட்ட மாணவியின் அம்மாவிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 24 அன்று பாலியல் பொறுக்கிகள் இருவர் மீதும் போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், அப்பொறுக்கிகளை கைது செய்யாமல், வேறு பள்ளிகளுக்கு பணி மாற்றம் செய்து பாதுகாத்துள்ளது தி.மு.க. அரசு. இதன் மூலம், அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
இச்சம்பவமானது மாணவிகளை பாதுகாப்பதற்கும், அவர்கள் தங்களுக்கொரு பிரச்சினையெனில் முறையிட்டு தீர்வு காண்பதற்கும், அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பும் ஏற்பாடுகளும் இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அரசு பள்ளிகளிலேயே இதுதான் நிலைமை எனில், தனியார் பள்ளிகளின் நிலையை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
குறிப்பாக, சமீப காலமாகவே பள்ளிகளில் ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் கொடூரங்கள் அதிகரித்துவருகிறது. அதில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே ஊடக வெளிச்சம் பெறுகின்றன. ஆனால், அவற்றின் மீதும் முறையான நடவடிக்கைகள் எடுக்காமல் அவற்றை மூடிமறைப்பதிலேயே தி.மு.க. அரசு முனைப்பு காட்டுகிறது. பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன என்ற உண்மையை நேர்மையாக அணுகி அதனை தடுப்பதற்கு பதிலாக, இவ்வன்கொடுமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதாக இருட்டடிப்பு செய்கிறது, தி.மு.க. அரசு.
படிக்க: பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதி கிடைத்துவிட்டதா?
குறிப்பாக, இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், கல்வி நிறுவனங்களில் புதியதாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை (தற்காலிக மற்றும் நிரந்தர) பணி நியமனம் செய்யும் முன் போலீசுதுறை சரிப்பார்ப்பு சான்று (Police verification certificate) பெறுவது கட்டாயமாக்கப்படும்; போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் உயர்கல்வி சான்றிதழ்கள் தகுந்த விதிமுறைகளைப் பின்பற்றி இரத்து செய்யப்படும்; குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு கல்வி வழங்கப்படும் என பல அறிவிப்புகள் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டன.
இந்த அறிவிப்புகளை சுட்டிக்காட்டி தி.மு.க. அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பதுபோல ஊடகங்கள் ஊதிப் பெருக்கினாலும், பள்ளிகளில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
மேலும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை முதல் சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வல்லுறவு வரை தமிழ்நாடு போலீசுதுறை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரோதமாகவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவுமே செயல்பட்டு வருகிறது.
இவற்றின் விளைவாகவே, பொள்ளாச்சி பள்ளி மாணவிகள் தங்களின் முகத்தை மறைத்துக்கொண்டு காணொளி வெளியிட வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதை விடுத்து பள்ளிகளை கார்ப்பரேட்மயமாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது தி.மு.க. அரசு. இதுதான் தி.மு.க. அரசின் சமூக நீதியா?
எனவே, மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுவந்த ஆசிரியர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைப்பதுடன், காமவெறிபிடித்த இம்மிருகங்களுக்கு ஆதாரவாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பெறப்படுகின்ற புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலமே பள்ளிகள் பாலியல் கூடாங்களாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியும். இதனை பெண்கள் உரிமை அமைப்புகளும் கல்வியாளர்களும் வலியுறுத்த வேண்டும்.
மேலும், சமூகத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு அடிப்படையாக உள்ள போதைக் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். ஆபாச இணையதளங்கள், படங்கள் தடை செய்யப்பட வேண்டும். பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை உள்ளடக்கிய மாணவர் சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். மேலும். பாலின சமத்துவத்தை வழங்குகின்ற, சமத்துவ பண்பாட்டை கொண்ட மாற்றுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram