மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் நூறு நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஊதா நிற அட்டை வழங்கக்கோரி, மாற்றுத்திறனாளிகள் ஆகஸ்ட் 26 அன்று போராட்டம் நடத்தினர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) என்பது 2005-ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமாகும். இதன்மூலம் நூறு நாள் வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இச்சட்டம் அமலுக்கு வந்து 20 ஆண்டுகளாகிறது. ஆனால், இன்று வரை, மதுரை தே.கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள 42 ஊராட்சிகளில் வாழும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலையில் அவர்களுக்குரிய ஊதா நிற வேலை அட்டை வழங்கப்படவில்லை. தற்போதும் கூட வேலை அட்டை கையிருப்பு இல்லை என மாற்றுத்திறனாளிகளிடம் கைவிரிக்கின்றனர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள்.
2025-26-ஆம் நிதி ஆண்டில் ஐந்து மாதங்கள் நிறைவுற்றுள்ள போதிலும், வேலை அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்கப்படவில்லை. ஒரு சில ஊராட்சிகளில் மட்டும் இதுவரை அதிகபட்சமாக 10 முதல் 12 நாட்கள் வரை மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க் கிழமையில், நூறு நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய பிரச்சினைகளைக் கலைவதற்கான சிறப்பு குறைத்தீர் கூட்டம் நடத்த வேண்டும் என்ற ஊரக வளர்ச்சித்துறை ஆணையரின் உத்தரவும் அமலாவதில்லை. மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தியும் பெரும்பாலும் வாக்குறுதிகள் எதுவும் மதிக்கப்படுவதில்லை.
இந்தாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கக்கோரி, “தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான சங்கம்” (Tamil Nadu Association for the Rights of All Types of Differently-Abled and Caregivers TARATDAC) சார்பில் கடந்த மார்ச் 12 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன. அவை எங்கே என மாற்றுத்திறனாளிகள் கேட்டால், நாங்கள் எல்லாம் புது அதிகாரிகள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நூறு நாள் வேலை, வேலை அட்டைக் கோரி கொடுக்கப்படும் மனுக்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
படிக்க: தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் தி.மு.க அரசு!
இந்நிலையில்தான், தே.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு 25 பெண்கள் உட்பட 60 மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற நல சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் வி.முருகன் உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தில், நூறு நாள் வேலைத்திட்டம் முறையாக வழங்க வேண்டும்; நூறு நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய ஊதா நிற அட்டை வழங்க வேண்டும்; இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்; கலைஞர் கனவு இல்லம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதனையடுத்து, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதாலட்சுமி மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேரையூர் வட்டாட்சியர் செல்ல பாண்டியன், கல்லுப்பட்டி போலீசுதுறை ஆய்வாளர் குருநாதன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
இதனையடுத்து, செப்டம்பர் 1-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மீண்டும் மனுக்கள் கொடுப்பது; செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் வேலை அட்டை இல்லாதவர்களுக்கு புதிய வேலை அட்டை வழங்குவது; செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் அனைத்து ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவது என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக முடித்துக்கொள்ளப்பட்டது.
தோழர்களே, ஜனநாயக சக்திகளே,
அரசு எப்படிப்பட்டதாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளும் போராட்டமும் நமக்கு நேரடியாக உணர்த்துகிறது.
தூய்மைப் பணியாளர்களை எப்படி இந்த அரசு நடத்தி வருகிறது என்பதைச் சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம்.
அதேபோல், தங்களைப் பராமரித்துக் கொள்வதே பெரும் போராட்டமாக இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளை, இந்த அரசு சாலைக்கு வந்து போராட வைத்திருப்பது மனவேதனை கொள்ளச் செய்கிறது.
மாற்றுத்திறனாளிகளின் நியாயமான, சட்டப்படியான, வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளை அனைத்துத் தரப்பு மக்களும் முன்வைக்க வேண்டும். இக்கோரிக்கைகள் நிறைவேற மக்கள் அதிகாரக் கழகம் துணைநிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் சிவகாமு,
மாவட்டச் செயலாளர்,
மதுரை மேற்கு மாவட்டம்,
மக்கள் அதிகாரக் கழகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram