இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு
50 சதவிகித வரி:
அமெரிக்காவுக்கு நாட்டை
அடிமையாக்காதே!
வேண்டும் ஜனநாயகம்
செப்டம்பர் 5 – வ.உ.சி. பிறந்த நாளில்
தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும்
ஆர்ப்பாட்டம் – தெருமுனைக் கூட்டங்கள்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
உலக மேலாதிக்க பயங்கரவாதியும் பாசிஸ்டுமான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நமது நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது 50 சதவிகித வரி விதித்துள்ளார். ஆக்ஸ்ட் 7 முதல் 25 சதவிகித வரி அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 27 முதல் கூடுதல் 25 சதவிகித வரி அமலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் இந்த வரிவிதிப்பால் ஜவுளி, ஆயத்த ஆடை, இறால், தோல், காலணி உற்பத்தி செய்யும் தொழில்கள் அதிகமான பாதிப்புக்குள்ளாக போகின்றன. தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஆயத்த ஆடை மற்றும் ஜவுளித் துறையில் ஈடுபடும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, பாசிச மோடி அரசின் ஜி.எஸ்.டி உள்ளிட்ட பொருளாதார பயங்கரவாதத் தாக்குதல்களால் நலிவடைந்து போயிருக்கும் இத்தொழில்கள் ட்ரம்பின் வரி விதிப்பால் ஒட்டுமொத்தமாக நொடிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், ட்ரம்ப் அரசு இந்த வரிவிதிப்பை ஆயுதமாக பயன்படுத்தி மோடி அரசை பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட நிர்பந்தித்து வருகிறது. குறிப்பாக, காம்பாக்ட் எனப்படும் இராணுவக் கூட்டணி, துரித வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்தங்களில் மோடி அரசு கையெழுத்திட்டு வருகிறது.
இதனால், விவசாயத்துறை, பால் உறுப்பத்தித் துறை, அணுசக்தித் துறை, கல்வித் துறை, இராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட்டு ஒட்டுமொத்த நாட்டையும் அடகுவைப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது பாசிச மோடி அரசு .
1990-களில் காங்கிரசும் வாஜ்பாய் அரசும் மறுகாலனியாக்கத்திற்கு நமது நாட்டை திறந்துவிட்டதுபோல, தற்போது நாட்டை அமெரிக்காவின் காலனியாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது பாசிச மோடி அரசு.
உலகில் எந்தவொரு நாட்டிற்கும் அமெரிக்கா 50 சதவிகித வரி விதிக்கவில்லை என சர்வதேச ஊடகங்களே கேள்வியெழுப்பிவரும் நிலையில் ‘56 இன்ச் மார்பு’ கொண்ட மோடி தலைமையிலான பா.ஜ.க அரசோ வாய்மூடிக் கிடக்கிறது.
ட்ரம்பின் அடாவடித்தனமான வரிவிதிப்பிற்கு பதிலடிக்கொடுக்கும் வகையில் கனடா, மெக்சிகோ, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம், சீனா போன்ற நாடுகள் அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதிப்பது போன்று நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு என மார்த்தட்டிக்கொள்ளும் மோடி அரசோ ட்ரம்பிற்கு எதிராக சிறு துரும்பைக் கூட அசைக்க மறுக்கிறது.
தற்போது மட்டுமல்ல, இதற்குமுன்னர் நடந்த பல சம்பவங்களிலும் மோடி அரசு அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிக்காட்டியிருக்கிறது.
அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை கைவிலங்கிட்டு இராணுவ விமானத்தில் விலங்குகளைப் போல அடைத்து நாடு கடத்தியது. இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் கொதிப்படைய செய்தது. ஆனால், மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது அமெரிக்காவின் சட்ட விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற இழிசெயலுக்கு வக்கலாத்து வாங்கிக் கொண்டிருந்தார். பிரதமர் மோடியோ பெயரளவிற்குக் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.
அதேபோல், காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட இருந்த சூழலில், “பொருளாதார தடை போடுவேன் என்று மிரட்டினேன், போரை நிறுத்திவிட்டார்கள்” என்று மோடி அரசை கேலி செய்து பேசினார் டிரம்ப். தொடர்ந்து பேசிக்கொண்டும் வருகிறார். நமது நாட்டின் சொல்லிக்கொள்ளப்படும் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாகும் ட்ரம்பின் இந்நடவடிக்கையை எதிர்த்து தேசபக்த வேடம் போடும் மோடி அரசு வாய் திறக்கவில்லை.
பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் இன அழிப்புப் போரைக் கண்டிக்காமல் இஸ்ரேலுக்கு மறைமுகமாக இராணுவ உதவிகளைச் செய்தது. ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் அடவடித்தனமான போரைக் கண்டிக்காமல் தன்னுடைய அமெரிக்க அடிமை விசுவாசவத்தைக் காட்டியது. இவ்வாறு நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை அமெரிக்கா மற்றும் அம்பானி- அதானி கார்ப்பரேட்டுகளின் நலனிலிருந்தே பாசிச மோடி அரசு தீர்மானித்து வருகிறது.
ஒட்டுமொத்த நாட்டையும் அமெரிக்காவிற்கு அடகு வைப்பதற்கும் அம்பானி-அதானி கும்பலுக்கு படையிலிடுவதற்குமே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் வேலை செய்து வருகிறது.
ஆகையால், பாசிசக் கும்பலின் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட நாம் மீண்டுமொரு சுதந்திர போரைத் தொடங்க வேண்டியுள்ளது.
தற்போது நாம் வாழ்ந்துக்கொண்டிருப்பது சுதந்திர நாடு அல்ல. தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது, விவசாயிகள், பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன. போராடும் மக்கள், செயற்பாட்டாளர்கள் மீது ஊபா போன்ற கருப்புச் சட்டங்கள் பாய்ச்சப்படுகிறது, ஊடகங்களின் குரல்வளை நசுக்கப்படுகிறது, கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது, இலட்சக்கணக்கான மக்களின் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு கொஞ்ச நஞ்ச உரிமைகளும் பறிக்கப்பட்டு நமது நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
இந்த இழிநிலைமை குறித்து சிந்திக்கவிடாமல் மக்களைப் பிளவுப்படுத்துவதற்கு இசுலாமியர்களுக்கு மதவெறியைத் தூண்டி கலவரங்களை நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல். இக்கும்பலின் தலைமையிலான மோடி அரசு கொஞ்சம் கொஞ்சமாக பாசிச சர்வாதிகாரத்தை அரங்கேறி வருகிறது.
இத்தகைய பாசிச சூழலில், இது ஜனநாயக நாடு என்று நம்பி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டுமா? “என்னவோ நடப்பது நடக்கட்டும்” என அடிமைத்தனமாக இருக்க வேண்டுமா? இன்று குரல் கொடுக்கவில்லை எனில், என்றுமே குரல் கொடுக்க முடியாதவர்களாவோம்.
விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும் காடுகளும் மலைகளும் கொள்ளைப் போவது தடுக்கப்பட வேண்டும் இழந்த உரிமைகள் மீட்கப்பட வேண்டும். நமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் நமது நாட்டிற்கான தற்சார்புக் கொள்கைகளை உருவாக்கவும் உண்மையான ஜனநாயகக் குடியரசு உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காக, நாட்டுப்பற்றுக் கொண்ட நாம் வீதியில் இறங்க வேண்டிய தருணமிது!
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிச கும்பலுக்கு எதிராக ஓரணியில் ஒன்றிணைந்து மீண்டுமொரு விடுதலை போராட்டத்திற்கு தயாராவோம். பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
- வேண்டும் ஜனநாயகம் என்று முழங்குவோம்!
- வருகின்ற செப்டம்பர் 5 கப்பலோட்டிய தமிழன், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி வ.உ.சி. பிறந்த நாளில் தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை நடத்துகிறோம்!
- நாட்டுப்பற்றுடன் அணிதிரண்டு வாருங்கள் என்று அறைகூவி அழைக்கிறோம்!
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு-புதுச்சேரி.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram