கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதியன்று இனவெறி இஸ்ரேல் காசாவின் நாசர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி ஐந்து பத்திரிகையாளர்களை அநியாயமாகப் படுகொலை செய்துள்ளது.
யூத இனவெறி இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இன அழப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இப்போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களின் அன்புக்குரியவர்களையும் குடியிருந்த வீட்டையும் இழந்து சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காசா மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை காசாவிற்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, உணவு பஞ்சத்தாலும் ஊட்டச்சத்து குறைப்பாட்டாலும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோரை இஸ்ரேல் கொன்று கொண்டிருக்கிறது. அமெரிக்க-இஸ்ரேல் ஆதரவுபெற்ற ‘காசா மனிதாபிமான அறக்கட்டளை’ (GHF) மூலம் நூற்றுக்கணக்கான மக்களை உணவு வாங்குவதற்காக திறந்தவெளிக்கு வரவழைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்து வருகிறது. மக்களை சோற்றுக்கு திண்டாட வைத்து அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளச் செய்கிறது.
மறுபுறம், இத்தகைய கொடூரத் தாக்குதல்களில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனைகள், ஹமாஸின் மையங்களாக செயல்படுவதாக பொய் குற்றஞ்சாட்டி மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது இனவெறி இஸ்ரேல்.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் நாசர் மருத்துவமனை (Nasser Hospital) மட்டுமே இஸ்ரேலின் தாக்குதலிலிருந்து தப்பித்து செயல்பட்டு வந்தது. தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கும் மையமாக இம்மருத்துவமனை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதியன்று நாசர் மருத்துவமனையின் நான்காவது தளத்தின் மீது இனவெறி இஸ்ரேல் ஆளில்லா டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இக்கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்பதற்குச் சென்ற மீட்புக் குழுவினரையும் தாக்குதல் குறித்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும் குறிவைத்து மீண்டுமொரு தாக்குதல் நடத்தி படுகொலை செய்துள்ளது.
இவ்விரண்டு தாக்குதல்களில் ஐந்து பத்திரிகையாளர்கள், மருத்துவ மீட்புக் குழுவினர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அரசாங்க ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் இத்தாக்குதல் அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் பாதித்துள்ளது. இது “சுகாதார அமைப்பை அழிப்பதன் ஒரு பகுதியாகும்” என்று காசா சுகாதார அமைச்சகம் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில், “ராய்ட்டர்ஸ்” (Reuters) செய்தி நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளர் ஹுசாம் அல்-மஸ்ரி, “அல் ஜசீரா”வின் (Al Jazeera) புகைப்பட பத்திரிகையாளர் முகமது சலாமா, “என்.பி.சி. நியூஸ்-இன் (NBC News) பத்திரிகையாளர் மோத் அபு தாஹா, “இன்டிபென்டன்ட் அரேபியா” (Independent Arabia) மற்றும் “அசோசியேட்டட் பிரஸ்” (Associated Press) உள்ளிட்ட பல ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர் மரியம் அபு டாக்கா மற்றும் “குட்ஸ் ஃபீட் நெட்வொர்க்” (Goods Speed Network) மற்றும் “மிடில் ஈஸ்ட் ஐ” (Middle East Eye) உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய அகமது அபு அஜீஸ் ஆகிய ஐந்து பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அல்ஜசீரா, “காசாவில் தியாகம் செய்த நமது பத்திரிகையாளர்களின் இரத்தம் இன்னும் காய்ந்து போகவில்லை. அதற்குள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் அல் ஜசீரா ஒளிப்பதிவாளர் முகமது சலாமா மற்றும் மூன்று புகைப்பட பத்திரிகையாளைப் படுகொலை செய்துள்ளன. இடைவிடாத தொடர்ச்சியான தாக்குதல் நடத்தினாலும், கடந்த 23 மாதங்களாக காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை நேரடி ஒளிபரப்பு செய்வதில் அல் ஜசீரா உறுதியாக உள்ளது” என்று தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்டிபென்டன்ட் அரேபியா ஊடகமானது, “33 வயதான மரியம் அபு டாக்கா அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. அவர் எங்களது புகைப்படக் கருவியை களத்தின் மையப்பகுதிக்குள் கொண்டு சென்று, பொதுமக்களின் துன்பங்களையும் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும் நேர்மையாக துணிச்சலாக உலகிற்கு வெளிப்படுத்தினார்” என்று அவரது தியாக உணர்வை போற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் ஆசிரியர் அப்பி செவெல், “அபு டாக்கா தனது 12 வயது மகனை விட்டுச் செல்கிறார், அவர் தொடக்கத்தில் காசாவில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தாலும் காசாவில் உள்ள எங்கள் பாலஸ்தீன சகாக்கள் அனைவரையும் போலவே அவர் ஒரு உண்மையான ஹீரோ” என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.
படிக்க: இஸ்ரேலின் வதை முகாமாக்கப்படும் காசா!
காசா நகரை கைப்பற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதியிலிருந்து காசா மீதான தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இத்தாக்குதல்களில் மக்கள் கொடூரமாக கொல்லப்படுவது, படுகாயமடைவது, இஸ்ரேலின் கோரமுகம் போன்றவற்றை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் இஸ்ரேலால் குறிவைத்து கொல்லப்படுகின்றனர். இது சமீப நாட்களாக மேலும் தீவிரமடைந்துள்ளது.
சான்றாக, கடந்த ஆகஸ்ட் 10 அன்றிரவு காசாவின் அல்-ஷிபா மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் கூடாரத்தின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி, ஏழு பத்திரிகையாளர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது. இதில் கொல்லப்பட்ட அல்ஜசீரா பத்திரிகையாளர் அல்-ஷெரீப் ஹமாஸ் ராணுவப் படைக்கு தலைமை தாங்கியதாக அபாண்டமான பொய்யை சுமத்தியது.
தற்போதுவரை காசா மக்களின் குரலாய் ஒலித்துவந்த 244 பத்திரிகையாளர்கள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் தங்கள் மீதான தாக்குதல்களை துச்சமென மதித்து, தங்களின் உயிரை பணயம் வைத்து, காசாவில் பத்திரிகையாளர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் போற்றுதலுக்குரியதாகும்.
காசாவை பாலஸ்தீன மக்களற்ற, அவர்களது கட்டடங்களற்ற கல்லறையாக மாற்றுகின்ற இஸ்ரேலின் பேரழிவுத் திட்டத்திற்கு எதிராக உலகம் முழுவதுமுள்ள மக்கள் குரலெழுப்ப வேண்டும். அவை தேசம் கடந்த எல்லை கடந்த மாபெரும் மக்கள் போராட்டங்களாக மாற வேண்டும். இதன் மூலமே பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவதையும் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் கொல்லப்படுவதையும் தடுக்க முடியும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram