அழுவதற்குக் கூட தெம்பின்றி பசியால் மடியும் காசா குழந்தைகள்

“காசா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு அழுவதற்குக் கூட வலிமை இல்லை. பசியிலிருந்தாலும் பெரும்பாலான குழந்தைகள் அழுவதில்லை. பேசுவதும் இல்லை”

0

காசாவில் உணவின்றி பசியால் வாடும் குழந்தைகளுக்கு பேசுவதற்கும் அழுவதற்கும் கூட வலிமையில்லை என்கிற மனதை உலுக்கும் செய்தியினை “சேவ் தி சில்ட்ரன்” (Save The Children) என்கிற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆஷிங், ஐ.நா-வில் தெரிவித்துள்ளார்.

யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் கடந்த 22 மாதங்களுக்கும் மேலாக காசா மீது இனவெறிப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகள், நிவாரண முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி குழந்தை, பெண்களை அதிகளவில் படுகொலை செய்து வருகிறது. இக்கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

மறுபுறம், இனவெறி இஸ்ரேல் காசா மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தடுத்து வருகிறது. இதனால் ஏற்பட்ட உணவு நெருக்கடியால் உடல் மெலிந்தும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டும் பச்சிளம் குழந்தைகள் முதல் பலரும் செத்துக் கொண்டிருக்கின்றனர். காசாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்பதை சமீபத்தில் ஐ.நா. தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், “காசாவில் நிலவும் பஞ்சம் இயற்கைப் பேரிடரால் உருவானதல்ல. முழுக்க முழுக்க மனிதர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உடனடியாக நிறுத்த முடியும்” என்றும் ஐ.நா. தெரிவித்திருந்தது.

இந்நிலையில், காசாவில் பசியால் வாடும் குழந்தைகளின் குரலாக ஐ.நா-வில் பேசிய “சேவ் தி சில்ட்ரன்” நிறுவனத்தின் தலைவர் ஆஷிங், “காசா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு அழுவதற்குக் கூட வலிமை இல்லை. பசியிலிருந்தாலும் பெரும்பாலான குழந்தைகள் அழுவதில்லை. பேசுவதும் இல்லை” என்று பேசியிருப்பது நம் மனிதாபிமானத்தை உலுக்குவதாக அமைந்துள்ளது.

மேலும், “போதுமான உணவு இல்லாதபோது குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக மாறுகிறார்கள். உணவு இல்லாதபோது உடல், உயிர் வாழ்வதற்கு உடலில் உள்ள கொழுப்பையே உட்கொள்கிறது. கொழுப்பு கரையும் பட்சத்தில் அடுத்து தசைகள் மற்றும் முக்கிய உறுப்புகளைச் சாப்பிட ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவர்கள் உடல் வலிமை இழந்து வலியுடன் இறக்கிறார்கள்” என்றார்.

“ஆனால், அதனை ‘பஞ்சம்’ என்று சாதாரணமாகச் சொல்கிறோம். அங்கு மருத்துவமனைகளும் அமைதியாக இருக்கின்றன. குழந்தைகளுக்குப் பேசவோ அல்லது வேதனையில் அழவோ கூட வலிமை இல்லை. அவர்கள் மெலிந்து படுத்தே கிடந்து உயிரிழக்கின்றனர். இந்த அறையில் உள்ள அனைவருக்கும் இந்தக் கொடுமையைத் தடுக்க வேண்டிய சட்டப்பூர்வ மற்றும் தார்மீகப் பொறுப்பு உள்ளது” என்று ஆஷிங் காசா குழந்தைகள் குறித்து உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.


படிக்க: இஸ்ரேலின் வதை முகாமாக்கப்படும் காசா!


காசாவின் குழந்தைகள் தான் விரைவாக இறந்து சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமென்றும் சொர்க்கத்தில் தனக்கு உணவு கிடைக்கும் என்றும் பிரார்த்தனை செய்யும் கொடூரம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தன் குழந்தை இறக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்வதையும் உடல் மெலிந்து செத்துப் போவதையும் காண வேண்டிய அவல நிலைக்கு காசாவின் தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் பட்டினியைப் போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவற்றையெல்லாம் மீறி நம் கண் முன்னேயே காசா மக்களை பட்டினி போட்டு படுகொலை செய்து கொண்டிருக்கிறது இனவெறி இஸ்ரேல்.

ஆனால், இஸ்ரேலை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள்கின்ற பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி போன்ற உலக நாடுகள் இஸ்ரேல் மீது எந்தவித பொருளாதாரத் தடையையும் விதிக்கவில்லை. இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டன அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு, காசாவில் குழந்தைகள் செத்து மடிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இந்திய அரசோ இஸ்ரேலை நேரடியாகக் கண்டிக்கக்கூட இல்லை; இஸ்ரேல் எதிர்ப்பு, பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களைத் தடுத்து நிறுத்தி வருகிறது.

எனவே, உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும், “இனவெறி இஸ்ரேலே! காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்து. காசாவின் குழந்தைகளைக் கொன்று குவிக்காதே” என்று இனவெறி இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அவை இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதை நோக்கி வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இவற்றின் மூலமாகவே காசாவை பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

காசா குழந்தைகள் மீதான நம் அக்கறை வீதிப் போராட்டங்களாகச் செயல் வடிவம் பெற வேண்டும்!


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க