நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் தன் உயிரையே விலையாகக் கொடுத்து, “ஏழை மாணவர்கள் மருத்துவராகக் கூடாதா?” என்ற கேள்வியை இந்திய அளவில் பேசவைத்து மாணவர்களை போராடவைத்த, நீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின் எட்டாவது ஆண்டு நினைவு தினம் இன்று.
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தினைச் சேர்ந்தவர் மாணவி அனிதா. குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த அனிதாவை அவரது தந்தைதான் சுமை தூக்கம் தொழில் செய்து படிக்க வைத்தார்.
சிறு வயதிலிருந்தே மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை தனது கனவாக சுமந்து அதற்காக கடுமையாக படித்து வந்தார். அந்த உழைப்பின் பலனாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176/1200 மதிப்பெண்கள் பெற்று 196.75 என்ற மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணையும் பெற்றிருந்தார்.
பாசிச மோடி அரசு பணம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்கிற கார்ப்பரேட் திட்டத்தின் அடிப்படையில் 2017-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (National Eligibility Cum Entrance Test) கட்டாயமாக்கியது. இதனால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் போதிய மதிப்பெண் பெற்றிருந்தும், மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படாத நீட் தேர்வில் அனிதாவால் போதுமான மதிப்பெண் பெறமுடியவில்லை. நீட் தேர்வு அவரது மருத்துவக் கனவினை குழித்தோண்டிப் புதைத்தது.
ஆனால், தன்னுடைய மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டாலும் தன்னைப் போன்ற ஏழை மாணவர்கள் மருத்துவராக வேண்டும், அதற்கு தடையாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தனி ஓர் ஆளாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிராகப் போராடினார். ஆனால், உச்சநீதிமன்றம் பாசிசக் கும்பலுக்கு ஆதரவாகவே செயல்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிராக இறுதிவரை போராடிய அனிதா தன்னுடைய மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்வாறு சொல்வதை விட பாசிச கும்பலினால் படுகொலை செய்யப்பட்டார் என்று சொல்லுவதே எதார்த்த உண்மையாகும்.
படிக்க: நீட் தேர்வு: மாணவர்கள் பலியும், தி.மு.க அரசின் துரோகமும்!
”நீட் தேர்வை ரத்து செய்!” என்ற அனிதா பற்ற வைத்த நெருப்பு காட்டுத் தீ போல் தமிழ்நாடு முழுவதும் பரவியது. மிகப்பெரிய அளவில் மாணவர் போராட்டங்கள் நடைபெற்றன.
மாணவர் போராட்டங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தி.மு.க., 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்” அன்று வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்பு சட்டப் போராட்டத்தின் மூலமாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மாணவர்களின் போராட்டத்தினை மழுங்கடிக்கும் வேலையினை செய்து வந்தது. பின்னர், நீட் தேர்வுக்கு எதிரான பெருமளவிலான மாணவர் போராட்டங்களால் நெருக்கடிக்கு உள்ளாகி, ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று தனது ‘நீட் இரகசியத்தை’ வெளியிட்டு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு துரோகம் இழைத்தது.
இந்திய அளவில் நீட் தேர்வு மோசடிகள் அம்பலமாகி வந்த நிலையில், கடந்தாண்டில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நாளில் நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. அச்சமயத்தில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெற்றிருப்பது அம்பலமானது. மறுதேர்வு நடத்தக் கோரி நாடு முழுவதும், குறிப்பாக வட மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. டெல்லி ஜந்தர் மந்தர் முக்கியப் போராட்டக்களமாக மாறியது.
தகுதியான மருத்துவர்களை உருவாக்கப் போவதாக மார்தட்டிக் கொண்ட மோடி அரசு, மருத்துவத்துறையை கார்ப்பரேட் கும்பலின் வணிக வேட்டைக்காடாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் அனிதா போன்று சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்த ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவினை சிதைத்து, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவர்களை படுகொலை செய்து வருகிறது.
நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நினைவு நாளில் நீட் தேர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு உறுதியேற்க வேண்டியது அவசியமாக உள்ளது. நாடு முழுவதும் மாணவர் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது.
“வேண்டாம் நீட்; வேண்டும் ஜனநாயகம்!” என்று முழங்குவோம்!
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram