காசாவில் மக்கள் பட்டினியால் மடிகின்றனர். பட்டினியால் மடிபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. நாள்தோறும் பட்டினியால் மடிபவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம்.
போரின் தொடக்க நாட்களில் குண்டுவீச்சுத் தாக்குதலால் மடிபவர்களின் எண்ணிக்கையை எண்ணிக் கொண்டிருந்தோம். தற்போது, பட்டினி மரணத்தின் எண்ணிக்கையை.. போரின் இன்றைய பரிமாணம் இது.
மனது கனக்கிறது.
திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட பஞ்சத்தை இவ்வுலகு காசாவில் பார்த்து வருகிறது.
காசாவில் நடப்பது ஒரு பயங்கரம். பட்டினி ஒரு சமூகத்தைக் கவ்வும் போது, அங்கு இந்த பயங்கரத்தை நாம் பார்க்கிறோம். இது ஹிட்லரின் வதை முகாம்களை நினைவூட்டுகின்றன.
உணவை இழந்து இறுதியில் ஊட்டச்சத்தையும் இழந்து தனது குழந்தை மெல்லச் சாவதை கண்முன்னே கண்டு வதங்கும் தாய்மார்களின் மனக்குமுறல்கள் எத்தனை எத்தனை… மனிதம் செத்துக் கொண்டிருப்பதைக் கண்முன்னே காணும் கொடுமையே கொடுமை.
வறண்ட நிலம், இடிந்த நிலைகுலைந்த வீடுகள், சாலைகள். அங்கு பச்சையாக எதுவுமே இல்லை. நீரைக்கூட அங்கு காண முடியவில்லை.
உண்பதற்கு எதுவும் இல்லாமல், மண்ணை உண்ணும் கொடுமையைப் பார்க்கிறோம்.
***
இந்நிலையில், இரத்த வெறிபிடித்த கொலைகாரர்களின் மனிதாபிமானக் காவலர் வேடத்தை என்னவென்று சொல்வது?
இதோ, அமெரிக்க-இசுரேல் கைக்கூலி அமைப்பான காசா மனிதாபிமான அறக்கட்டளையை (ஜி.ஹெச்.எஃப்.) எடுத்துக்கொள்ளுங்கள். அது நாள்தோறும் உணவுப் பொட்டலங்களை வழங்கி பட்டினியால் மரணிக்கும் மக்களுக்கு உதவுவதைப் போல தோன்றத்தைக் காட்டுகிறது. இதுவரை 20 இலட்சம் பொட்டலங்களை வழங்கியிருப்பதாகக் கணக்குகளையும் காட்டுகிறது. ஆனால், அங்கு பதுங்கியிருக்கும் இசுரேல் இராணுவம் உணவு வாங்க வருவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களைப் படுகொலை செய்கிறது. உணவு மையங்களையே கொலைபொறியாக மாற்றியுள்ளது. இதுபோன்ற உணவு விநியோக முகாம்களைத்தான் இஸ்ரேல் “பாதுகாப்பான வினியோகப் பகுதி” என்று அழைக்கிறது!
***
ஒருபுறம், பசியால் வாடும் குழந்தைகளின் படங்களுடன், பசியால் சரிந்து விழும் பெண்களின் படங்களைப் பார்க்கிறோம்.
இவற்றைப் படமெடுத்து வெளியிடும் பாலஸ்தீன பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். ஏன்? காசாவின் அவலக்காட்சிகள் வெளி உலகத்திற்குச் சென்றுவிடக் கூடாது என இசுரேலின் ஓநாய்கள் அஞ்சுகின்றன.
ஆமாம், பஞ்சத்தையும் பட்டினியையும் உருவாக்கியவர்கள், அதன் கோரமுகத்தை வெளி உலகம் அறிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். நவீன உலகம் கட்டியமைத்துள்ள போரில் இதுவும் ஒரு பகுதியாகிவிட்டது.
இன்னொருபுறம், காசாவின் எல்லையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆயிரக்கணக்கான லாரிகள் உணவுகளைத் தாங்கி நிற்பதாகவும், அவை காசாவில் நுழைவதற்கான அனுமதியை இசுரேல் மறுப்பதாகவும் அன்றாடம் இசுரேல் தரப்பிலிருந்து உறுதியான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இது இந்த உண்மையின் ஒரு பக்கம்.
இனப்படுகொலைப் போரைத் தடுப்பதற்கல்ல, இஸ்ரேலை மீறி உணவு விநியோகம் செய்வதற்குக்கூட வலிமையில்லாத அமைப்புதான் ஐ.நா. என்பது மீண்டும் புலப்படுகிறது.
பஞ்சத்தில் மிகவும் கீழ்நிலையில் இருப்பவர்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர். கணவரை இழந்த தாய்மார்கள், இளம் ஆண்களின் துணை இல்லாத முதியவர்கள், தந்தை இல்லாத குழந்தைகள். இவை அனைத்தும் ஒரே குடும்பத்தில் சேர்ந்திருப்பதுதான் காசாவின் குடும்பங்களின் நிலைமை.
உணவு முகாம்களில் எப்போது உணவு வழங்கத் தொடங்குவார்கள் என்று தெரியாது. திடீரென சைரன் ஒலி ஒலிக்கும். மக்கள் முண்டி அடித்துக் கொண்டு உணவு முகாம்களை நோக்கி ஓடுவார்கள். அடித்துப் பிடித்துக்கொண்டு உணவுகளை வாங்குவார்கள். இதுதான், இவர்கள் உணவு வழங்கும் காட்சி!
பசியுள்ள குழந்தை, பசியால் வாடும் வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், மன அழுத்தத்திலிருக்கும் தாய்மார்கள் இங்கே எப்படி வருவார்கள்? இங்கு வருபவர்கள் தனது குடும்பத்திற்காக உணவைச் சேகரிக்க வரும் சிறுவர்கள், இளைஞர்கள்.
ஒரு சிறுவன் உணவுப் பொட்டலத்தை எடுத்து ஓடும் போது, அவனைக் குறிவைத்துச் சுட்ட கொடூரத்தை நாம் பார்த்தோம். உணவு வாங்க வந்தவர்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதையும் நாம் பார்த்தோம். இதையெல்லாம் கடந்துதான் உணவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதனை, அமெரிக்க எதிர்ப்பு ஏகாதிபத்திய ஊடகங்கள் கூட அம்பலப்படுத்தியுள்ளன. இது ஓரிருமுறை தப்பித்தவறி நடந்த நிகழ்வல்ல. இதுதான் தொடர் கதை!
இந்த அணுகுமுறையின் மூலம் பாலஸ்தீன மக்களின் மனிதத்தை இழக்கச் செய்ய முயல்கின்றனர்.
பட்டினியால் சாவதா, குண்டடிபட்டுச் சாவதா? இது காசா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கேள்வி.
பட்டினியும் துப்பாக்கிச் சூடும் அக்கம்பக்கமாக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கைக்குப் பெயர்தான் மனிதாபிமான நடவடிக்கையா?
தன்மானம் கெட்ட அமெரிக்க, இசுரேல் ஆதரவு ஊடகங்கள் இதுகுறித்து பேசுவதில்லை. அவர்களுக்குக் கொஞ்சம் கூட வெட்கமில்லை, மனதில் ஈரமில்லை, காசுக்காக அமெரிக்க விசுவாசத்திற்காக எதையும் திண்பார்கள். இந்த மானங்கெட்டவர்களில் கோதி மீடியாக்களும் அடக்கம்!
இவர்கள் எல்லாம் மனிதாபிமான காவலர்களா? ஓநாய்கள்… பஞ்சத்திலும் பட்டினியிலும் வாடும் மக்களை இப்படி அலைக்கழித்து இன்புறுகின்ற கொடூரர்கள்!
இதுதான், பஞ்சத்தில் வாடும் ஏழைகளுக்கு உணவளிக்கும் வழிமுறையா? இல்லை, காடுகளில் விலங்குகளுக்கு உணவுகளை வழங்கும் வழிமுறையைக் காட்டிலும் இழிவானது, கொடூரமானது. இதனை மனிதர்களுக்குப் பயன்படுத்துகிறார்களே, இவர்கள் யார்?
பட்டினியால் வாடும் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற செவிலியர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் யாரும் இல்லை.
அங்கு குடிநீர் இல்லை. சமைப்பதற்கான நீர் எங்கிருந்து வரும்? சுத்தமான நீருக்கு ஒரு தாய் என்ன செய்வார்? எங்கு செல்வார்.
கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. மின்சாரமும் இல்லை, சமையல் எரிவாயுவும் இல்லை. அந்த தாய் எதைக் கொண்டு சமைப்பார்?
ஐயோ! இது கொடுமையில்லையா, கையில் உணவுப் பொருள் இருக்கிறது, பசியில் குழந்தைகள் தவிக்கின்றனர், சமைப்பதற்கு முடியவில்லையே என்று, பஞ்சத்தில் கணவனை இழந்த, வாடிக்கொண்டிருக்கும் தாயின் உள்ளக்குமுறல் எந்த அளவிற்கு அதிகரித்திருக்கும்.
ஆனால், இன்னொரு கொடுமையும் இங்கே நடந்தது. இந்த அமெரிக்க ஓநாய்கள் வீசியெறிந்த உணவுப் பொருட்களில் போதை மருந்துகளைக் கலந்துவிட்டிருந்தார்கள். இந்த உணவை உட்கொண்ட குழந்தைகளும் மக்களும் போதையினால் பலவிதமான துன்பங்களுக்கு ஆளானார்கள்.
ஏய், அயோக்கியர்களே, போர் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொன்றீர்கள்; மின்சாரம், குடிநீர் வசதிகளை அழித்தீர்கள்; மருத்துவமனைகளைக் குண்டுகள் வீசி தகர்த்தீர்கள்; உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளைத் தடுத்தீர்கள்; பஞ்சத்திலும் பட்டினியிலும் மக்களை வாட்டி நடைப்பிணங்களாக்கினீர்கள்…
இத்தனையும் போதாது என்று மனிதாபிமான உதவி என்ற பெயரில் சைக்கோ – சேடிஸ்ட்டுகளாக நடந்து கொண்டிருக்கிறீர்களே, அதிகாரமும் ஆதிக்கமும் கையிலிருக்கும் எகத்தாளமா?
இந்த கொடூரங்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு நாள் பதிலளிக்க வேண்டிவரும்.
ஓ உலக மக்களே, புரிந்து கொள்ளுங்கள், இதுதான் அமெரிக்கா, இதுதான் இசுரேல். இதுதான், ஏகாதிபத்திய நிதிமூலனத்தின் கோரமுகம். இதுதான், பாசிசத்தின் உண்மை முகம்!
ஓ எனதருமை இந்திய நாட்டு மக்களே, இந்த கொடூரர்களுக்குத்தான் நமது நாட்டின் பிரதமர் மோடி ஆதரவு அளிக்கிறார். இந்த கொடூரங்களைப் பற்றி அவர் பேச மறுக்கிறார்.
***
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான மனிதாபிமான நடவடிக்கைகள் தேவை; அவர்களது கண்ணியத்தை மதித்து அவர்களது தேவைகளை உணர்ந்து அந்த சமூகத்துடன் இணைந்து மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும். காசா மனிதாபிமான அறக்கட்டளை இதற்கு நேரெதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது, அம்மக்களை அவமானப்படுத்துகிறது. இன்னொரு இசுரேலிய இராணுவமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பஞ்சம், பட்டினியால் காசாவின் சமூகம் நிலைகுலைந்து இருக்கிறது, மனித இயல்புகள் குறைந்து வருகின்றன, இவை இசுரேல் நடத்தும் போரின் துணை விளைவுகள் அல்ல. இதுதான், இசுரேலின் நோக்கத்தின் (குற்றத்தின்) மையமான பகுதி. அது, பாலஸ்தீன சமூகத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற நோக்கமாகும், குற்றமாகும்.
பாலஸ்தீனர்கள் வாழ்கிறார்களா அல்லது சாகிறார்களா என்று இசுரேல் அரசுக்கு சிறிதும் கவலையில்லை. பட்டினி மற்றும் இனப்படுகொலையாளன் என்ற களங்கத்தை அது தவிர்க்க விரும்புகிறது. அதற்கான ஏற்பாடுதான் காசா மனிதாபிமான அறக்கட்டளை. இதுதான், அமெரிக்கா-இசுரேலின் அயலுறவுக் கொள்கை.
நாம் ஏமாற வேண்டாம்!
***
ஹமாஸ் அந்த மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஹமாஸ் அழியவில்லை. தற்போது மக்களுடன் மக்களாக ஹமாஸும் இருக்கிறது. மக்களுக்கு என்னவோ அதுதான் ஹமாஸுக்கும்.
ஹமாஸுக்கு வெளிநாட்டில் தூதுவர்கள் இருக்கிறார்கள்; அதற்காக வாதிடுவோர் இருக்கிறார்கள். ஆனால், காசாவில் ஹமாஸ் போரிடும் நிலையில் இல்லை.
இன்றைய ஹமாஸும் 2009-இன் ஈழப் போராளிகளின் நிலையை அடைந்துள்ளது.
காசா மக்கள் ஒருமுனைக்கு தள்ளிச் செல்லப்பட்டு, பட்டினியால் எதிர்த்து நிற்பதற்குக் கூட வாய்ப்பில்லாத அவர்கள் மீது போர் நடக்கிறது.
மனது கனக்கிறது.
இந்த சூழலைச் சகித்துக்கொள்ள முடியவில்லை.
முள்ளிவாய்க்காலின் கடைசி நாட்கள் மனதில் வந்து சென்று கொண்டிருக்கிறது.
***
காசாவுக்காக குரல் கொடுத்த ஈரானும் ஹிஸ்புல்லாவும் அடக்கப்பட்டுள்ளன.
மேற்கத்திய நாடுகளின் அரசுகள் எவையும் காசாவுக்காக இறங்கி வரவில்லை; இசுரேலைத் தடுக்கத் துணியவில்லை. இவர்களில் பாதி பேர் இசுரேலின் பங்காளிகள். பாலஸ்தீனத்திற்கு சுதந்திரத்தை அங்கீகரிக்கிறோம் என்று இந்த ஐரோப்பியக் கனவான்கள் சொல்வதால் பாலஸ்தீனத்தில் நடக்கும் எவையும் தடுக்கப்படப் போவதில்லை.
வெற்று வாய்ச் சவடால் அடிக்கும் இக்கனவான்கள் இஸ்ரேலுடனான பொருளாதார, இராணுவ உறவுகளை முறித்துக்கொள்ளத் துளியும் தயாராக இல்லை.
ஐ.நா-வை மீறி இசுரேல் போர் தொடுத்து வருகிறது. ஐ.நா-வை மீறி இசுரேலின் போரைத் தடுக்கத் துணிபவர்களால் மட்டுமே காசா மக்களுக்கு உதவ முடியும்.
திணிக்கப்பட்ட பட்டினி, இனப்படுகொலை தொடரும் இந்நிலையில், உலக மக்கள் காசாவுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள். போராடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய சிட்னி மக்களின் எழுச்சிமிக்க ஊர்வலத்தைப் பார்த்தோம். துருக்கியில் மக்கள் பத்து லட்சக்கணக்கில் திரண்டு போராடுவதைப் பார்த்தோம். மக்களின் போராட்டங்கள் தொடர்கின்றன.
காசா மீதான போரை நிறுத்து, மக்களுக்கு உணவுகளை வழங்கு… லட்சக்கணக்கான மக்களின் இம்முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன.
நாள்தோறும் காசாவுக்காக நடக்கும் இந்த மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
“காசாவை நோக்கிய உலகப் பயணத்தை” மேற்கொண்ட கிரேட்டா தன்பர்க் மற்றும் பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள் ஜூனில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மீண்டும் ஆகஸ்டு 31-ஆம் தேதி காசாவை அடையும் வகையில் அவர்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஸ்பெயினில் இருந்து கடல்களின் தடைகளைக் கடந்து, எகிப்தில் இருந்து காசாவை நோக்கி நடந்து செல்வதற்காக ஆயிரக்கணக்கான சமூக செயல்பாட்டாளர்கள் பயணிக்க இருக்கின்றனர்.
அவர்கள் எடுத்துச் செல்லும் உணவு மிகச் சொற்பமே. ஆனால், அவர்கள் சுமந்து செல்லும் நம்பிக்கை மிகப்பெரியது!
ஆம், உலக மக்களின் போராட்டங்கள், சமூக செயல்பாட்டாளர்கள் போராட்டங்கள் மட்டுமே நமது நம்பிக்கை.
***
இறுதியாக,
நம்பிக்கை, அது ஒரு நடைமுறை. அதை நீங்கள் பராமரிக்காவிட்டால், அது இறந்துவிடும்.
நமது போராட்டங்களால், காசா மீதான போரைத் தடுக்க வேண்டும். அது, நம்பிக்கை!
இந்த நம்பிக்கையை நீங்கள் இழந்துவிட்டால், உங்களுக்கு எதிரான போரையும் தடுக்க இயலாமல் போவீர்கள், எச்சரிக்கை!
மகேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram