மேட்டுப்பாளையம் நகராட்சி: வேண்டும் ஜனநாயகம் | கையெழுத்து இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நமது மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் மக்களாகிய நம்மிடம் சொத்துவரி, குடிநீர் வரி, கழிவுநீர் அகற்று வரி, குப்பை வரி, கல்வி வரி, நூலக செஸ் வரி, விளக்கு வசதி வரி, விளம்பர வரி, தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், பாதாள சாக்கடை வரி என பல வரிகளை வசூலித்து வருகிறது. இந்த வரிகள் மூலம் வருவாயை ஈட்டி வரும் நகராட்சி நிர்வாகம் மக்களுக்கான சாலைவசதி, பாதாள சாக்கடை, தரமான பாதுகாப்பான குடிநீர் போன்ற பல வசதிகளை முறையாக செய்து தருவதில்லை. இதனை நகராட்சி நிர்வாகம் செய்துதர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கையெழுத்து இயக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக முன்னெடுத்துள்ளோம்.
குடிநீர் வழங்குதல் மற்றும் பராமரித்தல்:
பவானி ஆற்றுநீர் மேட்டுப்பாளையம் நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆற்றின் கரையிலுள்ள சாரதா டெர்ரி பிரைவேட் லிமிடெட் மற்றும் UBL (United Bleachers Limited) ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுநீர் நேரடியாக பவானி ஆற்றில் கலந்து வருகின்றது. இதனை நகராட்சி நிர்வாகம் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் மக்களுக்கு வழங்குவதனால் மக்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர் மற்றும் எதிர்வரும் தலைமுறைகளும் பாதிப்படையும் அபாயம் உள்ளது.
பொதுக் குடிநீர் குழாய்கள் அமைத்தல்:
நகராட்சியில் நேரடியாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் இருந்தாலும் பொதுவெளியில் பொது குடிநீர் குழாய்கள் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியில் செல்லும் மக்கள், தொழிலாளர்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்டு தனியார் குடிநீர் விற்பனை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. இந்த போக்கு கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை ‘சூயஸ்’ (SUEZ) என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதை போல இங்கும் செயல்படுத்தப்படும் என்கின்ற அபாயம் உள்ளது.
நகராட்சியில் தூய்மைப் பணிகள்:
பொதுவெளியில் இருந்த குப்பை தொட்டிகளை எடுத்துவிட்டு வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்தல் என்கிற முறையில் தற்போது தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. இதனால் குப்பை வண்டி வரும் நேரங்களில் மக்கள் வீடுகளில் இல்லை என்றாலோ அல்லது மக்கள் குப்பைகளை கொட்ட தவறினாலோ பொதுவெளியில் குப்பைகளை மக்கள் கொட்ட நேருகின்றது. இதனால் சுகாதாரமற்ற நிலை உருவாகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் உணர்ந்து தற்போது பின்பற்றும் முறையுடன் கூடுதலாக பொது இடங்களில் குப்பை தொட்டிகளையும் வைக்க வேண்டும்.
மேலும், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களது எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ளவையும் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை கொண்டும் நகராட்சி முழுவதும் தூய்மைப் பணிகளை கொண்டு செல்ல முடியவில்லை. அரசு தூய்மைப் பணி துறையை கான்ட்ராக்ட் மயமாக்கப்பட்டு வரும் போக்கு தீவிரமாகி வருகிறது.
இதனடிப்படையில் தான் நகராட்சியில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது; ஒப்பந்த அடிப்படையில் மட்டும் ஊழியர்களை எடுப்பது; உரிய உபகரணங்கள் வாங்காமல் இருப்பது என்ற போக்கில் நகராட்சிகள் செயல்படுகின்றன.
பொது கழிவறைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்:
நகராட்சிக்குட்பட்ட உழைக்கும் மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் பொதுக் கழிப்பறைகள் இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வரும் அவலநிலைகள் தொடர்கின்றது.
இதுமட்டுமின்றி ஏற்கனவே உள்ள பொதுக் கழிவறைகளில் உள்ள பைப் லைன்கள், தண்ணீர் தொட்டிகள் சேதம் அடைந்தும், தண்ணீர் வசதி இல்லாததும், இரவு நேரங்களில் மின்விளக்கு வசதிகள் இல்லாததாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஜவகர் பேருந்து நிலையத்தின் அவல நிலை:
பிரபல சுற்றுலா தளமாக விளங்கும் உதகைக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக மேட்டுப்பாளையம் ஜவகர் பேருந்து நிலையம் உள்ளது. இதனை பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்திலுள்ள இலவச சிறுநீர் கழிப்பிடம் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சுகாதாரமற்ற முறையில் பராமரிக்காமல் உள்ளது. இதனால் மக்கள் காசு கொடுத்து நவீன கட்டண கழிப்பிடத்திற்கு செல்கின்றனர்.அங்கும் ஒப்பந்தம் செய்துள்ள ஒப்பந்ததாரர் மக்களிடம் பணம் மட்டும் வாங்கிக்கொண்டு முறையாக பராமரிப்பதில்லை.
பேருந்து நிலையத்தின் உள்ளே இருக்கும் இலவச குடிநீர் தொட்டிகள் சுத்தம் இல்லாமலும் முறையாக தண்ணீர் குழாய்கள் பொருத்தாமலும் மக்கள் சுகாதாரமற்ற குடிநீரை குடித்துவரும் அவல நிலையில் தொட்டிகள் உள்ளது. மேலும் பேருந்து நிலையத்திலுள்ள சாக்கடை கால்வாய்களும், குப்பைகளும் முறையான பராமரிப்பு இல்லாமலும், பயணிகள் குப்பை போடுவதற்கு ஏற்ப குப்பை தொட்டிகள் இல்லாமல் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் தூய்மையற்ற நிலையில் வைத்திருக்கின்றது.
காந்தி மைதானம் கிழங்கு மற்றும் பூண்டு மண்டி:
உதகை சாலையில் உள்ள கிழங்கு மற்றும் பூண்டு மண்டியில் தினந்தோறும் டன் கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மண்டி பகுதியில் உள்ள குப்பைகளை, சாக்கடை கால்வாய்களை நகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இப்பகுதி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் பணி செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படுகிறது.
இவ்வாறான நமது பிரச்சனைகளை நிறைவேற்றும் வகையில், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு இந்த பிரச்சனைகளின் தீவிரத்தை கொண்டு செல்லும் விதமாக, மேட்டுப்பாளையம் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக இந்த கையெழுத்து இயக்கத்தை மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக மேற்கொள்கிறோம். அதற்கு அனைத்து உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நகராட்சி நிர்வாகமே!
- பவானி ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்து!
- மக்களுக்கு குடிநீரை முறையாக சுத்திகரித்து வழங்கு!
- பொது இடங்களில் பொது குடிநீர் குழாய்களை அமைத்து கொடு!
- பொது இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்திடு!
- தூய்மை பணியாளர்களை தனியார்மயமாக்காதே!
- ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்கு!
- காலி பணியிடங்களை நிரப்பிடு!
- தூய்மைப் பணியார்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கு!
- பொது கழிவறைகள் இல்லாத பகுதிகளில் கழிவறைகளை அமைத்துக் கொடு!
- நகராட்சிகளிலுள்ள பொதுக் கழிவறைகளை முறையாக பராமரி!
- ஜவகர் பேருந்து நிலையத்திலுள்ள இலவச கழிப்பிடத்தை சுகாதாரமாக வைத்திடு!
- பேருந்து நிலையத்தில் இருக்கும் இலவச குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து, தூய்மையான குடிநீரை மக்களுக்கு வழங்கு!
- காந்தி மைதானம் கிழங்கு மற்றும் பூண்டு மண்டி பகுதிகளை சுகாதாரமான முறையில் பராமரித்திடு!
உழைக்கும் மக்களே! கையெழுத்து இயக்கத்தை வெற்றிபெற செய்வோம்! நமது கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து போராடுவோம்!
மக்கள் அதிகாரக் கழகம்
கோவை மாவட்டம் – 94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram