மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மருத்துவக் குழு, மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய மரியாதையை வழங்காததைக் கண்டித்தும் அவ்வாரியத்தை ஒழுங்குபடுத்தக் கோரியும் கடந்த செப்டம்பர் 2 அன்று நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். “தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்” (TARATDAC) சார்பில் இப்போராட்டம் நடத்தப்பட்டது.
இச்சங்கத்தை சார்ந்த ஏ.பாலமுருகன் கூறுகையில், “அரசு ராஜாஜி மருத்துவமனையின் மருத்துவக் குழு மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளின் அவலநிலை குறித்து உணர்ச்சியற்ற அணுகுமுறையைக் காட்டுகின்றனர். மாற்றுத்திறனாளி சான்றிதழ்களைக் கோரிவரும் மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இவ்வாறு மருத்துவக் குழுவால் வழங்கப்படும் சான்றிதழில் இயலாமையின் சதவிகிதம் குறைத்து மதிப்பிடப்படும்போது, அந்த மாற்றுத்திறனாளி அரசாங்கத்திடமிருந்து உண்மையான இழப்பீட்டைப் பெறுவதற்கான உரிமையை இழக்கிறார்” என்று மாற்றுத்திறனாளிகளின் அவல நிலையையும் இந்த அரசுக் கட்டமைப்பின் அலட்சியப் போக்கையும் அம்பலப்படுத்தினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் உயரதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டுள்ள போதிலும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதனையடுத்தே, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கில் திரண்ட மாற்றுத்திறனாளிகள், சாலையில் அமர்ந்து பேருந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளின் நிரந்தர இயலாமையை “தற்காலிகமானது” எனக் குறிப்பிட்டு சான்றிதழ் தருவது போன்ற இழிச்செயல்களில் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக் குழு ஈடுபடுவதை மாற்றுத்திறனாளிகள் அப்போராட்டத்தில் அம்பலப்படுத்தினர்.
மேலும், “மாதாந்திர நிதி உதவியை தற்போதைய தொகையிலிருந்து ரூ.6,000, ரூ.10,000 மற்றும் ரூ.15,000-ஆக உயர்த்த வேண்டும். அரசாங்கத்திடமிருந்து நாங்கள் கோரும் மாதாந்திர உதவி கார் வாங்குவதற்கோ அல்லது ஆடம்பரமாக வாழ்வதற்கோ அல்ல. மாறாக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதற்கே” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.
படிக்க: மதுரை தே.கல்லுப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!
அதேபோல், “மதுரையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அரசு நடத்தும் பள்ளி இல்லை. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார்ப் பள்ளிகளில் சேர்க்க வேண்டியுள்ளது. எனவே, மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளிகள் நடத்த வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தனர்.
மாநகராட்சி கடைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஐந்து சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவது; ஆணை பெற்றவுடனே மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர்.
இவை அனைத்தும் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளாகும். அதனை நிறைவேற்றித் தருவதற்கு மாறாக, அனைவரும் கலைந்து செல்லும்படி போராட்டக் குழுவினரிடம் போலீசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தில் உறுதியுடன் இருந்ததையடுத்து, மாற்றுத்திறனாளிகள் என்றும் பாராமல் 150 பேரை போலீசு கைது செய்தது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் தங்கள் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடுவது இது முதன்முறை அல்ல. தங்களின் அன்றாட வேலைகளை மேற்கொள்வதிலேயே பல்வேறு சிரமங்களையும் அன்றாடம் பல இன்னல்களையும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த அரசு அவர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை வசதியையும் தேவையையும் பூர்த்தி செய்வதில் எந்த அக்கறையும் காட்டாமல் தொடர்ந்து அலட்சியப் போக்கையே கையாண்டு வருகிறது. பல மாதங்களாக உதவித்தொகை முறையாகக் கிடைக்காமல் மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். அரசு இதனைத் துளியும் கணக்கில் கொள்வதில்லை.
கடந்த ஆகஸ்ட் 26 அன்று மதுரை தே.கல்லுப்பட்டியில் 100 நாள் வேலையில் தங்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டியும் தங்களுக்கான ஊதா அட்டையை வழங்கக் கோரியும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். சமூக நீதி அரசு என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க. அரசு அதற்கும் இன்றுவரை தக்க பதில் ஏதும் அளிக்கவில்லை.
படிக்க: தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் தி.மு.க அரசு!
“மாற்றுத்திறனாளிகள் நல வாரியம்” என்ற ஒன்று பெயரளவில் நிறுவப்பட்டிருந்தாலும், இன்று வரை மாற்றுத்திறனாளிகள் தங்களின் உரிமைகளைக் கோரி சாலையில் இறங்கி போராட வேண்டிய அவலம் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்தப்பட்டாலும் அதிலும் பல முறைகேடுகளைச் செய்து மாற்றுத்திறனாளிகளை மேலும் பல்வேறு நெருக்கடிக்குள் அரசு தள்ளுகிறது.
சாமானிய மக்கள் தங்களின் தேவைக்காகவும் தங்களின் உரிமைக்காகவும் அன்றாடம் இந்த அரசை கேள்வியெழுப்பிக் கொண்டே இருக்க வேண்டிய நிலையே உள்ளது. அப்படி வீதிகளில் இறங்கி தங்களின் அடிப்படை உரிமைகளைக் கோருவோரை போலீசு படையை கொண்டு ஒடுக்குவதிலும் அவர்களைக் கைது செய்து அவர்களின் போராட்டத்தைக் கலைப்பதிலுமே தி.மு.க. அரசு தொடர்ந்து முனைப்புக்காட்டி வருகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வலி மிகுந்த போராட்டக் குரல்கள் தமிழ்நாடு முதல்வரும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் செவிகளில் விழுவதில்லை.
மக்கள் நல அரசு என்று தன்னைக் காட்டிக்கொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு கவனம் கொடுக்காமல் இருந்துவரும் தி.மு.க. அரசின் இப்போக்கு கண்டிக்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக நடக்கும் இப்போராட்டங்களுக்கு மக்களும் ஜனநாயக சக்திகளும் துணைநிற்க வேண்டும்.
தோழர் சிவகாமு,
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மேற்கு மாவட்டம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram