28.08.2025
சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் 20 இடங்களில்
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நாசகார திட்டத்தை அனுமதியோம்!
கண்டன அறிக்கை
சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் 20 இடங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி (ONGC) நிறுவனத்திற்கு அனுமதி அளித்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு எமது மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக கண்டனங்களை தெரிவிக்கிறோம்.
ஒன்றிய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப் (HELP) அடிப்படையில், மூன்றாவது சுற்று திறந்த வெளி ஏலம் (OALP) மூலம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403.41 சதுர கிலோமீட்டர் பகுதியில் (இதில் தரைபகுதி – 1,259.44 மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில் 143.97 ச.கிமீ.) ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.
தற்போது அந்த பகுதியில் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி அவசியமில்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை. இதனடிப்படையில்தான் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு 11.03.2025 அன்று இச்சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது.
ஒன்றிய மோடி அரசோ தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதையும் விவசாயத்தை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டுதான் வேதாந்தா கம்பெனியின் ஆணைக்கிணங்க சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தையும் திருத்தியுள்ளது. இயற்கை வளங்களையும் விவசாயத்தையும் அழித்தொழிக்கும் இது போன்ற பாசிச சட்டங்களை ரத்து செய்ய நாம் அனைவரும் போராட வேண்டும்.
மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அதிகாரிகள் மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், இந்த ஆணையத்திடம் 2023 லேயே ஓஎன்ஜிசி நிறுவனம் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த போதும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்பது போல, தற்போது இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தி.மு.க அரசு பேசுவதை ஏற்க முடியாது. மேலும் இத்திட்டத்தை அனுமதித்த மாநில சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பிட்டு ஆணையத்தின் அதிகாரிகள் அனைவருக்கும் எமது மக்கள் அதிகாரக் கழகம் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.
ஆகவே தமிழ்நாட்டில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களை அனுமதிக்க கூடாது. தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என எமது மக்கள் அதிகாரக் கழகம் கோருகிறது. இந்த கோரிக்கைகள் நிறைவேற அனைத்து ஜனநாயக சக்திகளும் இயக்கங்களும் விவசாய சங்கங்களும் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எமது மக்கள் அதிகாரக் கழகமும் துணை நிற்கும்.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram