50% வரிவிதிப்பு: திருப்பூர் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

திருப்பூரில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் 20,000-ற்கும் மேற்பட்ட பின்னலாடை சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லகளவில் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 26 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவிகித வரி அமலுக்கு வந்துள்ளது.

இதனால், திருப்பூர், சூரத், நொய்டா உள்ளிட்ட நகரங்களில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தித் துறையில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியை சற்று விரிவாக பார்க்கலாம்.

பாசிஸ்ட் ட்ரம்பின் அடாவடித்தனம்

இந்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபராக பாசிஸ்ட் டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்றதிலிருந்து பல்வேறு அடாவடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஓர் அங்கம்தான் “பரஸ்பர வரிவிதிப்பு” (Reciprocal Tariff) என்ற பெயரில் உலக நாடுகள் மீது நடத்தப்பட்டுவரும் வர்த்தகப் போராகும்.

அமெரிக்காவிற்கு பிற நாடுகள் ஏற்றுமதி செய்வது அதிகமாக உள்ளது; ஆனால் அமெரிக்காவிடமிருந்து அந்நாடுகள் இறக்குமதி செய்வது குறைவாக உள்ளது என்று கூறி உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்தார். அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான இந்த வர்த்தகப் பற்றாக்குறை விகிதத்திற்கேற்ப இவ்வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடு செய்வதாகவும், வர்த்தகப் பற்றாக்குறை தொடரும் வரை வரியும் தொடரும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

அதனடிப்படையில் இந்தியா மீது 25 சதவிகித பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, அது கடந்த ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த 25 சதவிகித வரி விதிப்பே இந்தியாவின் பொருளாதாரத்தை பதம் பார்த்துவரும் நிலையில், “ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு துணைப்போகிறது” என்று குற்றஞ்சாட்டி, அபராத வரியாக மேலும் 25 சதவிகித வரியை ட்ரம்ப் விதித்தார்.


படிக்க: இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50% வரி: அமெரிக்காவுக்கு நாட்டை அடிமையாக்காதே! | துண்டறிக்கை


மொத்தமாக இந்தியப் பொருட்களுக்கு 50 சதவிகித வரியை நிர்ணயித்துள்ள அமெரிக்காவின் இந்த அறிவிப்பானது, இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதில் வேளாண் துறைக்கு அடுத்தபடியாக உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தித் துறையானது ட்ரம்பின் இவ்வரி விதிப்பால் பெருத்த சரிவை சந்தித்துள்ளதை காண முடிகிறது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளில் மூன்றில் ஒரு பங்கு திருப்பூரில் இருந்துதான் செல்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி பொருட்கள் திருப்பூரில் இருந்து மட்டும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருப்பூர் ஜவுளி துறையின் உற்பத்தியாளர்கள் தற்போது கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

10 திருப்பூர் தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம்

ஜவுளி, ஆடைகள் மட்டுமல்லாது தோல் பொருட்கள், இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்கள், இரசாயனங்கள், ஆட்டோ மொபைல்ஸ், நவரத்தினங்கள் மற்றும் நகைகள், பொறியியல் பொருட்கள், எஃகு, அலுமினியம், தாமிரம் மற்றும் வாகனப் பாகங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஒரு நாட்டில் சில பொருட்களின் தேவை அதிகமாக உள்ளதாலும் பல பொருட்கள் அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதாலும்தான் அந்நாடு பொருட்களை இறக்குமதி செய்கிறது. அந்தவகையில், மேற்குறிப்பிட்ட பொருட்களைப் பெறுவதற்கு அமெரிக்காவில் உள்ள வணிகர்கள் இங்குள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களுக்கு பெரியளவில் ஆர்டர் கொடுப்பார்கள்.

அமெரிக்காவில் உள்ள வர்த்தகர்கள்தான் இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை செலுத்தி பொருட்களை வாங்குவர். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வரி விதிப்பானது அமெரிக்க வர்த்தகர்களின் மீதுதான் சுமையாகியுள்ளது.

எனவே, தற்போதைய சூழலில் அதிக வரி செலுத்தி இந்தியாவிடமிருந்து வாங்குவதற்கு பதிலாக, பின்னலாடையில் இந்தியாவிற்கு போட்டியாக உள்ள வங்கதேசம், வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளிடமிருந்து பொருட்களை வாங்கிக்கொள்ள முனைகின்றனர். ஏனெனில், இந்நாடுகளுக்கு 20 சதவிகித வரிதான் விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இந்தியாவிற்கு மட்டும்தான் 50 சதவிகித வரி எனும் அதிகபட்சமான வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜவுளி துறையில் இந்திய – அமெரிக்க வர்த்தக உறவுகள் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இதனால், அங்குள்ள அமெரிக்க வர்த்தகர்கள் இந்திய ஏற்றுமதியாளர்களிடம் இந்த வரி விதிப்பில் ஒரு பகுதியை செலுத்துமாறு கேட்கிறார்களாம். ஏற்கனவே, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை மட்டுமே லாபம் வரும் நிலையில், அதையும் வரிக்காக கொடுத்துவிட்டால் நட்டம்தான் ஏற்படும். எனவே, இவ்வர்த்தகத்தை தொடர முடியாத நெருக்கடிக்கு இந்திய வணிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

“ட்ரம்பின் இந்த வரி விதிப்பிற்கு பிறகு அமெரிக்க வர்த்தகர்கள் எங்களிடம் ஆர்டர் கொடுப்பதை நிறுத்திவிட்டனர்” என்று திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்களின் உற்பத்தியாளர்கள் தங்கள் கவலையை தெரிவிக்கின்றனர். தற்போது பெரும்பாலான ஆடை உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் திருப்பூரில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் 20,000-ற்கும் மேற்பட்ட பின்னலாடை சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டால் தொழிலாளர்களுக்கு வேலை இருக்காது; இதனால் அவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும்.

மேலும், எந்த ஒரு ஆர்டரும் இல்லாததால் நிறுவனங்கள் இயங்காமல் நட்டம் ஏற்பட்டு, அனைத்து தொழிற்சாலைகளையும் இழுத்து மூட வேண்டிய நெருக்கடி உண்டாகும். இச்சூழலில் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இந்திய பொருளாதாரம் எதிர்பாராத வகையில் மாபெரும் சரிவை சந்திக்க நேரிடும்.

அமெரிக்க காலனியாகும் இந்தியா

திருப்பூர் மட்டுமல்லாது குஜராத்தின் சூரத், உத்தரபிரதேசத்தின் நொய்டா உள்ளிட்ட நகரங்களிலும் ஆடை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை ஏற்றுமதியாளர்களின் அமைப்பான “இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு” (Federation of Indian Exports Organization) தெரிவித்துள்ளது‌.

ஆகஸ்ட் 26 அன்று அக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகஸ்ட் 27 முதல் இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் 50 சதவிகிதமாக அதிகரிக்கும். இந்நடவடிக்கையானது அமெரிக்க சந்தைக்கான இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும்” என்று அக்கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி.ரால்ஹான் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த வரிவிதிப்பால் இந்தியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. எனவே சீனா, வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற தென்கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளின் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் சரக்குகள் போட்டியற்றதாக உள்ளன. அரசாங்கம் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

இது அமெரிக்காவிற்கான தயாரிப்பு ஏற்றுமதியை 2024-25-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 87 பில்லியன் டாலரிலிருந்து (8,700 கோடி), இந்த ஆண்டு 49.6 பில்லியனாகக் (4,960 கோடி) குறைய வழிவகுக்கும் என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) முன்னதாக கணக்கிட்டுள்ளது. இதிலிருந்து, இந்திய ஏற்றுமதி மதிப்பு பாதிக்கு பாதி குறையும் அபாயமிருப்பதைக் காணமுடியும்.

மேலும், நாளுக்கு நாள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துக்கொண்டே வருகிறது (தற்போது 1 டாலர் = 88.15 ரூபாய்). இந்திய பொருளாதாரத்தையே உலுக்கும் வகையில் உருவெடுத்துள்ள இப்பிரச்சினைக்கு பிரதமர் மோடியோ, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோ பெயரளவிலான கண்டனங்களைக் கூட தெரிவிக்கவில்லை என்பது வெட்கக்கேடானது‌.

அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு இந்தியா மௌனம் காப்பது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்து கைவிலங்கிட்டு அனுப்பிய போதும், கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலை தான் நிறுத்தியதாக ட்ரம்ப் கொக்கரித்து இந்தியாவின் ‘இறையாண்மை’யை கேள்விக்குள்ளாக்கிய போதும்கூட இவர்கள் வாய்திறக்கவில்லை என்பதை உலகமே கண்டது.


படிக்க: ரஷ்ய எண்ணெயும் மோடி அரசின் அம்பானி சேவையும்


ஏற்கெனவே, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்‌.டி., கொரோனா ஊரடங்கு போன்றவற்றால் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துள்ள மக்களின் தலையில் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு பேரிடியாக வந்து விழுந்துள்ளது.

அமெரிக்காவோ தனது சந்தையை பாதிக்காத வகையில் தன் நாட்டிற்குத் தேவையான மருத்துவத்துறை சார்ந்த பொருட்கள், ஆப்பிள் ஐபோன், மின்னணு துறை பொருட்கள், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த சரக்கு மற்றும் சேவைகளுக்கு மட்டும் வரி விலக்கு அளித்துள்ளது. மறுபுறம், இவ்வரிவிதிப்பை ஆயுதமாக பயன்படுத்தி மோடி அரசை பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட நிர்பந்தித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் “அமெரிக்க-இந்திய காம்பாக்ட்” எனப்படும் இந்தியாவை அமெரிக்க காலனியாக்கும் ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட்டுள்ளது. இதனடிப்படையில், அமெரிக்காவின் அணு உலைகளை இந்தியாவில் கொண்டுவர அனுமதிக்கச் சொல்வது; மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இந்தியாவில் திணிப்பதற்கு உள்ள தடையை நீக்கச் சொல்வது; எஃப்-35 (F-35) விமானம் உள்ளிட்டு அமெரிக்க ஆயுதங்களை இந்தியாவில் திணிப்பது போன்றவற்றை ட்ரம்ப் அரசு மேற்கொண்டு வருகிறது. மேற்கண்ட அமெரிக்க அடிமை சேவகத்தை மோடி அரசு துரிதமாக செய்வதற்கு, ட்ரம்ப் இவ்வரி விதிப்பை பகடைக்காயாகப் பயன்படுத்தி வருகிறார்.

இதன் மூலம், ஒட்டுமொத்த இந்திய நாட்டுச் சந்தையையும் எலான் மஸ்க் போன்ற அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கு சதித்திட்டம் தீட்டி வருகிறார் பாசிஸ்ட் ட்ரம்ப்‌. இந்நிலை தொடர்ந்தால், அம்பானி, அதானி, அகர்வால் போன்ற இந்திய கார்ப்பரேட்கள் மட்டுமின்றி எலான் மஸ்க் போன்ற பன்னாட்டு கார்ப்பரேட்டுகளும் எந்த தங்குதடையுமின்றி இந்திய நாட்டை சூறையாடுவதற்குத்தான் வழிவகுக்கும்.

எனவே, நமது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்ட உறிஞ்சும் வகையில், ஒட்டுமொத்த நாட்டையும் அமெரிக்காவிடம் அடகு வைத்துள்ள பாசிச மோடி அரசுக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்த வேண்டிய தருணமிது!


ஆதினி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க