இனவெறி இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தின் காசாவில் ஆக்கிரப்புப் போரை தீவிரப்படுத்தி மக்களை கொன்று குவித்துவரும் நிலையில், அதற்கெதிராக உலகம் முழுவதிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் கண்ணூரில் செப்டம்பர் 5 அன்று (வெள்ளிக் கிழமை) இஸ்லாமிய பெண்கள் அமைப்பு (GIO) சார்பாக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் நடத்தப்பட்டது. இது, கேரளாவின் எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் பெண்கள் அமைப்பாகும். போராட்டத்திற்கு மறுநாளே, பெண்கள் அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது கேரள போலீசு தாமாக முன்வந்து வழக்கு பதிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் இஸ்லாமிய அமைப்பின் கேரள பொதுச் செயலாளர் அஃப்ரா ஷிஹாப் மற்றும் அவ்வமைப்பின் 30 உறுப்பினர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 189(2) (சட்டவிரோதக் கூட்டத்தில் சேருதல்), 191(2) (சட்டவிரோதக் கூட்டத்தில் கலவரம் செய்தல்) மற்றும் 192 உடன் சேர்த்து 190 (சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் செய்த குற்றங்களுக்கான பொறுப்பு) ஆகியவற்றின் கீழ் பழையங்காடி போலீசு வழக்குப் பதிந்துள்ளது.
பழையங்காடி போலீசு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், “சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மடாய்ப்பாறை பகுதியில், அஃப்ரா ஷிஹாப் தலைமையிலான பெண்கள் இஸ்லாமிய அமைப்பினர் சுமார் 30 பேர், ‘சட்டவிரோதமாக’ ஒன்றுகூடி, பல்வேறு கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பி, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
படிக்க: காசாவில் பட்டினிப் படுகொலை: போரின் விளைவல்ல, மையம்!
ஆனால், போராட்டத்தின் காணொளியில், “சுதந்திரம், சுதந்திரம், பாலஸ்தீனம்” (Free Free Palestine), “ஆக்கிரமிப்பு ஒழிக” மற்றும் “இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு” என்று அவ்வமைப்பின் பெண்கள் முழக்கமிடுவதை காண முடிகிறது. இம்முழக்கங்களை எழுப்பி போராடியதைதான் கலவரம் என்று கேரள போலீசு அப்பட்டமான பொய் வழக்கை பதிவு செய்துள்ளது. மேலும், இப்போராட்டத்தை பல்வேறு அமைப்புகள் எதிர்த்ததாக தெரிவித்துள்ள போலீசு, அவை எந்தெந்த அமைப்புகள் என்பது குறித்து வாய்திறக்கவில்லை. இதன் மூலம், பாலஸ்தீன விரோதிகள் வீசிய எலும்பு துண்டிற்கு கேரள போலீசு வால் ஆட்டியிருக்கிறது என்பது தெளிவாகிறது.
இதுகுறித்து முகநூலில் கருத்து தெரிவித்துள்ள பெண்கள் அமைப்பின் முன்னாள் தலைவர் அஃபீதா அகமது, முந்தைய கட்சி கூட்டத்தில் பாலஸ்தீன ஸ்கார்ஃப்களை (Scorf) போர்த்தியிருந்த அதே பினராயி விஜயன் தலைமையிலான போலீசுதான் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். “அவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவானவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் அதற்கு ஆதரவாக கோஷமிடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்கிறார்கள். இது பினராயி அரசாங்கத்தின் தொடர்ச்சியான அரசியல் பாசாங்குத்தனம்!” என்றும் அம்பலப்படுத்தியுள்ளார்.
அதேபோல், இஸ்லாமிய பெண்கள் அமைப்பின் கண்ணூர் மாவட்டத் தலைவர் நிதல் சிராஜ், இதனை முதலமைச்சர் பினராயி விஜயனின் இரட்டை நிலைப்பாடு என்று விமர்சித்தார். பாலஸ்தீன ஆதரவு குரல்களை அடக்கும் முயற்சிகள் தோல்வியடையும் என்றும் “நீதிக்கான குரல்கள் தெருக்களிலும் வளாகங்களிலும் தொடர்ந்து ஒலிக்கும்” என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இஸ்லாமிய பெண்கள் அமைப்பு சார்பாக இன்று (செப்டம்பர் 7) கண்ணூரில் உள்ள பய்யம்பலம் கடற்கரையில் பாலஸ்தீன ஆதரவு ஒற்றுமை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் சங்கி கும்பல் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளிலும் பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கைகள் ஒடுக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. பாலஸ்தீன ஆதரவு பேரணிகளை ஏற்பாடு செய்ததற்காக – பாலஸ்தீனக் கொடிகளைக் காட்சிப்படுத்தியதற்காக – சமூக ஊடகங்களில் பாலஸ்தீன ஆதரவு உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததற்காக பாலஸ்தீன ஆதரவாளர்ககளின் மீது வழக்கு பதிந்து பா.ஜ.க. அரசு அவர்களின் குரலை ஒடுக்கி வருகிறது.
படிக்க: பட்டினி சாவின் விளிம்பில் பாலஸ்தீனம்!
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில், பாலஸ்தீன ஆதரவு முழக்கங்களை எழுப்பியதற்காக தல்ஹா மன்னன் உட்பட 8 முதல் 10 மாணவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது; டெல்லியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் சங்கி கும்பல் பொதுவெளியிலேயே தாக்குதல் நடத்தியது ஆகியவை இந்த ஒடுக்குமுறைக்கு நடைமுறை சான்றுகளாகும்.
ஆனால், பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு எதிராக கேரளாவில் வழக்கு பதியப்பட்டிருப்பது, எதிர்க்கட்சிகளும் இவ்வொடுக்குமுறை செலுத்துவதில் விதிவிலக்கல்ல என்பதைக் காட்டுகிறது. ஒருபுறம், காசா மீதான இஸ்ரேலின் போரை எதிர்ப்பதாக கூறும் கேரள சி.பி.எம். அரசு, மறுபுறத்தில், பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு கலவர முத்திரை குத்தி ஒடுக்குகிறது. இது கேரள சி.பி.எம். அரசின் சந்தர்ப்பவாதத்தையும் இரட்டை வேடத்தையும் காட்டுகிறது. தற்போதுவரை பினராயி விஜயன் அரசு இதுகுறித்து வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாசிச மோடி அரசானது இனவெறி இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா-வில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை புறக்கணிப்பது; அதானியின் ட்ரோன்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்து காசா மக்களை படுகொலை செய்வது என தொடர்ச்சியாக பாலஸ்தீன விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவற்றுக்கு எதிராகவும் “இனவெறி இஸ்ரேல் உடனான உறவை துண்டித்திடு” என்ற முழக்கத்தை முன்வைத்தும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அதுவே, இனவெறி இஸ்ரேல் அரசையும் அதற்கு துணைபோகும் மோடி அரசையும் பணிய வைக்கும்.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram