இஸ்ரேலிய இனவெறி பாசிஸ்டுக்கு சிவப்பு கம்பளம் விரித்த மோடி அரசு!

மேற்கத்திய நாடுகளால் தங்களது நாட்டிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இனவெறி பாசிஸ்டான இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்-ஐ தான் செப்டம்பர் 8 ஆம் தேதியன்று பாசிச மோடி அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.

0

லகம் முழுவதும் இனவெறி இஸ்ரேலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) மூலமாக இஸ்ரேலுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் (Bilateral Investment Agreement – BIA) கையெழுத்திட்டுள்ளது பாசிச மோடி அரசு.

இனவெறி இஸ்ரேல் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக காசா மீது இன அழிப்பு போரை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகிறது. பட்டினியாலும், உணவுக்காகக் காத்திருக்கும் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி படுகொலை செய்து வருகிறது.

இந்த இனப்படுகொலையை அரங்கேற்றி வரும் இஸ்ரேல் அரசின் நிதி அமைச்சர்தான் பெசலேல் ஸ்மோட்ரிச். இவர், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்க வேண்டும் என்றும் காசாவை முற்றிலுமாக அழித்து அம்மக்களைப் படுகொலை செய்ய வேண்டும் என்றும் நெதன்யாகுவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். மேலும் காசாவில் மக்கள் பட்டினியால் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதை ”காசாவில் மக்கள் பட்டினி கிடப்பது நியாயமானது” என்று கூறி தன்னுடைய இனவெறியை வெளிப்படுத்தி வருபவர். ஸ்மோட்ரிச்சுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் சர்வதேச நீதிமன்றத்திடம் (ICC) கோரியிருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நார்வே போன்ற நாடுகள் ஸ்மோட்ரிச் மற்றும் இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் மீது தடைகளை விதித்துள்ளன.

இவ்வாறு மேற்கத்திய நாடுகளால் தங்களது நாட்டிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இனவெறி பாசிஸ்டான இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்-ஐ தான் செப்டம்பர் 8 ஆம் தேதியன்று பாசிச மோடி அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.

மேலும் இஸ்ரேல் இந்தியா இடையில் 800 மில்லியன் அமெரிக்க டாலர் பரஸ்பர முதலீட்டில் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒப்பந்தத்தில் இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச்சும் இந்திய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கையெழுத்திட்டுள்ளனர். தடையற்ற வர்த்தகம் குறித்து இரண்டு நாடுகளும் நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


படிக்க: பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பேரழிவுப் போர்!


மேலும் இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதுடன் அவர்களால் இஸ்ரேலும் இந்தியாவும் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்வதாக இரு நாட்டு பாசிஸ்டுகள் பேசியுள்ளனர். அதாவது இஸ்லாமிய மக்கள் மீதான இன – மத வெறி என்கிற ஒற்றைப் புள்ளியில் இரு நாட்டு பாசிஸ்டுகளும் ஒன்றிணைகிறார்கள்.

அதே நேரத்தில் இனவெறி இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டே இனவெறி இஸ்ரேலுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது பாசிச மோடி அரசு. அதாவது காசா மக்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேலுடன் கூட்டுச்சேர்ந்து படுகொலையில் பங்கு போட்டுக் கொண்டுள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தன்னை நடுநிலையாளராகக் காட்டிக்கொண்டது மோடி அரசு. ஆனால் காசா மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச நாடுகளால் ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட அனைத்து வாக்கெடுப்பிலும் வாக்களிக்காமல் இஸ்ரேலுக்கு தன்னுடைய மறைமுக ஆதரவைத் தெரிவித்து வருகிறது.

குறிப்பாக இனவெறி இஸ்ரேலுக்கு எதிராகவும், காசா மக்களுக்கு ஆதரவாகவும் நடைபெறுகின்ற போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது; போராட்டங்களை ஒடுக்கி போராட்டக்காரர்களைச் சிறையில் அடைப்பது என இனவெறி இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தமும் இந்த ஆதரவின் வெளிப்பாடே.

காசாவில் இனப்படுகொலை ஏற்படக்கூடும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) ஜனவரி 2024 தீர்ப்பைத் தொடர்ந்து கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஆயுத விற்பனையை பகுதியளவில் நிறுத்தி வைத்துள்ளன; துருக்கி பொருளாதார உறவுகளை மொத்தமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாசிச மோடி அரசோ இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகளைப் பலப்படுத்திக்கொண்டு வருகிறது.

எனவே உலக முழுவதும் உள்ள மக்கள் ”இனவெறி இஸ்ரேலே! காசா மீதான இன அழிப்பு போரை நிறுத்து!” என்று காசா மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்திய நாட்டு மக்கள் ”பாசிச மோடி அரசே! இனவெறி இஸ்ரேலுக்கு ஆதரவான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்!” என்று பாசிச மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க