உத்தரப்பிரதேசம்: தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சாதிய அடக்குமுறைகள்!

பா.ஜ.க-வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்கள் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காகவும், பொதுசாலையில் ஆடு அசுத்தம் செய்ததற்காகவும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

0

பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் உள்ள சிவராஜ்பூரில் சுதிர் குமார் என்ற தலித் இளைஞர் சிறிய மாவு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சகோதரர்களான மனோஜ் சிங், மோஹித் சிங் சண்டேல் இருவரும் சுதிரிடம் கடனாக மாவு அரைத்துக்கொண்டு, அதற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். அவர்கள் மொத்தமாக ரூ.6,000 தர வேண்டியிருந்த நிலையில், கடனை திருப்பி தரும்படி சுதிர் குமார் நீண்ட காலமாக அவர்களிடம் கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, சுதிர் அவ்விருவரை வழியில் சந்தித்த போது கடன் பணம் குறித்து நினைவூட்டியுள்ளார். ஒரு தலித் இளைஞர் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்பதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதிவெறியர்கள், சுதிரை சாதி ரீதியாக இழிவாக பேசியுள்ளனனர். மேலும், இரும்புக் கம்பியால் சுதிர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சுதிர் இத்தாக்குதல் குறித்து கூறுகையில் “நான் என் ஆலையிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​மனோஜ் சிங்கும் மோஹித் சிங் சண்டேலும் என்னைத் தடுத்தனர். நான், மாவு அரைப்பதற்காகக் கடனாகக் கொடுக்கப்பட்ட ரூ.6,000 பணத்தைத் திருப்பித்தரச் சொன்னேன். அவர்கள் என்னை இழிவாகத் திட்டினர். அடிக்கத் தொடங்கினர். பின்னர் அருகில் கிடந்த இரும்புக் கம்பியால் என்னைத் தாக்கினர். எனக்குக் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டது” என்று தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார்.

தன் மீது நடத்தப்பட்ட ஆதிக்கச் சாதி கொலைவெறித் தாக்குதல் குறித்து சுதிர் குமார் சிவராஜ்பூர் போலீசு நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரளித்துள்ளார். ஆனால், ஆதிக்கச் சாதிவெறியர்களின் வலியுறுத்தலால் போலீசு நிலைய பொறுப்பாளர் சுபம் பாண்டே உட்பட அனைத்து போலீசும் குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சாதிவெறியர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது.


படிக்க: உ.பி: இஸ்லாமியர்களின் கல்லறை மீது தாக்குதல் நடத்திய காவி குண்டர்கள்


“நான் புகார் அளித்து இரண்டு நாட்கள் ஆகிறது. ஆனால், தற்போது வரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். என்னைக் கொலை செய்வதாகவும் மிரட்டுகிறார்கள். மேலும், சமரசம் செய்ய பலர் என்னை அணுகினர். ஆனால், சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் ஆதிக்கம்  படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தண்டனையிலிருந்து தப்பிக்க அவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துகிறார்கள்” என்று அச்சத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால், சாதி வெறியர்கள் தற்போது வரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

000

இதனைப் போன்று, அதே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உமா தேவி என்ற தலித் பெண்ணை சாதிவெறிபிடித்த கவுன்சிலர்கள் பொதுச் சாலையை சுத்தம் செய்ய வைத்த சாதியக் கொடூரம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தில் கிஷ்னி நகரத்தின் நான்காவது வார்டில் உமா தேவி என்ற தலித் பெண் வசித்து வருகிறார். இவர் ஆடு, எருமைகளை வளர்ப்பதன் மூலம் தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 4 அன்று உமா தேவியின் கணவர் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ​அவை அமித் குமார், ரவி பால் ஆகிய இரண்டு ​கவுன்சிலர்களின் வீடுகளுக்கு அருகிலுள்ள மதகில் அசுத்தம் செய்துள்ளன.

இதனை சகித்துக்கொள்ள முடியாத அந்த சாதிவெறியர்கள் உமா தேவியின் கணவரை வசை பாடியதோடு  சாதிவெறியுடன் பொதுச்சாலையை சுத்தம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளனர். தனக்குக் கீழ்படியாவிட்டால் குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால், உயிருக்கு பயந்து உமா தேவி பொது சாலையை சுத்தம் செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

தங்கள் மீதான  சாதியத் தாக்குதல் குறித்து புகாரளிப்பதற்காக உமாதேவி உள்ளூர் போலீசை அணுகிய போது, சாதிவெறியுணர்வு கொண்ட போலீசு, அவருடைய புகாரை பதிவு செய்யாமல் புறக்கணித்துள்ளது. இதனால், உமா தேவி போலீசு கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அங்கும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டாலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

புகாரளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த உமாதேவி  கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமரசம் செய்ய ஒவ்வொரு நாளும் எனக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இவ்விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் எங்களைக் கொன்றுவிடுவதாக அவர்கள் மிரட்டுகிறார்கள்” என்று சாதிவெறியர்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார்.

000

பா.ஜ.க-வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்கள் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காகவும், பொதுசாலையில் ஆடு அசுத்தம் செய்ததற்காகவும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஆதிக்கச் சாதிவெறியர்கள் தலித் மக்களை பழிவாங்குவதற்காகவே அவர்கள் மீது கொடூரத் தாக்குதல் தொடுப்பதும், தலித் பெண்களை  பாலியல் வன்கொடுமை செய்யும் கொடுமையும் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இவையெல்லாம், அரசு, அதிகார வர்க்கத்தின் துணையுடனேயே நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்கள் சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது இயல்பான நடைமுறையாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலையாக மாற்றப்பட்டுள்ள உத்தரப்பிரதேசத்தில், தலித் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்க வேண்டும் என்ற பாசிச நோக்கத்திலிருந்தே அவர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது, பா.ஜ.க. அரசு.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க