சென்னையில் தன்னுடைய காதலியைப் பார்ப்பதற்குச் சென்ற தலித் சிறுவன் மீது பா.ஜ.க-வைச் சேர்ந்த சாதி வெறியர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையின் சூளைமேட்டில் உள்ள பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவனும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். மகள் தலித் சிறுவனைக் காதலிப்பதைச் சாதிவெறியால் பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமியின் பெற்றோர்கள் மகளை செயலக காலனியில் உள்ள அவளுடைய பாட்டி வீட்டில் தங்கவைத்துள்ளனர்.
ஆனால் பள்ளிகள் மாற்றப்பட்டாலும் சமூக ஊடகங்கள் மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் 12-ஆம் தேதியன்று சிறுமியைப் பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சிறுவன் சென்றுள்ளான். சிறுவனைக் கண்ட உறவினர்கள் அவனை தனி அறையில் அடைத்து வைத்துவிட்டு பா.ஜ.க-வின் முன்னாள் நிர்வாகி சரவணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே சிறுமியின் பாட்டி வீட்டிற்குச் சென்ற சரவணனும் அவனுடைய சகோதரர் லோகேஷ் இருவரும் சாதிவெறி தலைக்கேறி சிறுவனின் ஆடையைக் கழற்றி நிர்வாணப்படுத்தி, சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சரவணன் என்பவன் சிறுவனின் சாதியைக் குறிப்பிட்டு இழிவான முறையில் வசைபாடிக் கொண்டே அடித்துள்ளான். பின்னர் சாதி வெறியர்களிடமிருந்து தப்பித்த சிறுவன் தனக்கு நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். தற்போது சிறுவன் தற்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி (கே.எம்.சி) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் இரண்டு பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
படிக்க: கிருஷ்ணகிரி: தலித் இளைஞரை காரணமின்றித் தாக்கிய சாதி வெறியர்கள்
ஆனால் சாதிவெறி பிடித்த சிறுமியின் அம்மா சிறுவன் தன்னுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டான் என்று சிறுவனை மேலும் இழிவு படுத்த வேண்டும் என்கிற சாதிவெறியில் கீழ்த்தரமான முறையில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக தமிழ்நாட்டில் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் ஆதிக்கச் சாதி சங்கங்களில் ஊடுருவி, அச்சமூக மக்களுக்கு சாதிவெறியூட்டி தலித் மக்கள் மீது சாதிவெறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது என்பதை “புதிய ஜனநாயகம்” இதழ் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. அதனை மேற்கூறிய சம்பவத்தில் வன்னியர் சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஊடுருவிவருவதை உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே “ஆதிக்கச் சாதி சங்கங்களைத் தடை செய்! சாதிவெறியைத் தூண்டுகின்ற திரைப்படங்களைத் தடை செய்!” என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இது சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்று விரும்புகின்ற ஒவ்வொருவரின் கடமையாகும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










