மயிலாடுதுறை மாவட்டம் ரூரல் ஊராட்சிக்கு உட்பட்ட அடியாமங்கலத்தில், தனது மகளை காதலித்துவந்த தலித் இளைஞரை, பெண்ணின் தாய் ஆணவப் படுகொலை செய்திருப்பது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடியாமங்கலம் கிராமத்தின் பெரியத் தெருவைச் சேர்ந்த குமார் – ராஜலட்சுமி தம்பதியினரின் மகன் வைரமுத்து (28). இவர் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு அப்பகுதியில் பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். சி.பி.எம். கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றியத் துணைத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். தோழர் வைரமுத்துவும் அதேப் பகுதியைச் சேர்ந்த மாலினி (26) என்ற பெண்ணும் கடந்த பத்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மாலினி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் மாலினியின் பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். இத்திருமணத்திற்கு மாலினி எதிர்ப்பு தெரிவித்ததுடன், “நான் வைரமுத்துவைதான் காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன்” என்று உறுதிபட கூறியுள்ளார். இதனால் மாலினிக்கும் அவரது தாய், சகோதரர்களான குணால், குகன் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதையடுத்து, மாலினி தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேறி, வைரமுத்துவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். வைரமுத்துவின் பெற்றோர் வைரமுத்து-மாலினி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனால் சமாதானமடைந்த மாலினி சென்னைக்குச் செல்வதற்காக ரயில் நிலையத்திற்குச் சென்றதையடுத்து, அங்கு மாலினி-வைரமுத்து இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இதனை அறிந்த மாலினியின் சகோதரன் குணால், ரயில் நிலையத்திற்குச் சென்று மாலினியை கடுமையாகத் தாக்கியதுடன், “என் அக்காவுடன் பழகினால் உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று வைரமுத்துவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான். அதேபோல், மாலினியின் தாயும் வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கேச் சென்று வைரமுத்துவை வசைபாடி மிரட்டியுள்ளார். அது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
படிக்க: கிருஷ்ணகிரி: தலித் இளைஞரை காரணமின்றித் தாக்கிய சாதி வெறியர்கள்
இதனை தொடர்ந்து, வைரமுத்து போலீசு நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், வைரமுத்துவை திருமணம் செய்துகொள்வதில் மாலினி உறுதியாக இருந்துள்ளார். மேலும், தாய், தந்தை, சகோதரர்களுடன் அனுப்பி வைத்தால் அவர்கள் தன்னைக் கொன்று விடுவார்கள் என்றும் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 12 அன்று மாலினியை வைரமுத்து மற்றும் அவரது பெற்றோருடன் போலீசு அனுப்பி வைத்துள்ளது. அப்போது, மாலினியின் தாய் மற்றும் சகோதரர்கள் போலீசு முன்னிலையிலையே, “நீங்கள் எப்படி உயிரோடு வாழ்கிறீர்கள் என்று பார்க்கிறோம்” என்று இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால், போலீசு அக்கொடூரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளது.
இதன் விளைவாக, செப்டம்பர் 15 அன்று இரவு 10:30 மணிக்கு வேலையை முடித்துவிட்டு வைரமுத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது மாலினியின் சகோதரர்கள் அவரை வழிமறித்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டியுள்ளனர். படுகாயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வைரமுத்து, செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியத் துணைத்தலைவர் இவ்வாறு ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதப்பொருளாகி இருக்கிறது.
இந்நிலையில், படுகொலையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்; மாலினியின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வைரமுத்துவின் பெற்றோர், காதலி மாலினி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சி.பி.எம்., வி.சி.க-வினர் உள்ளிட்டு 150-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள மயிலாடுதுறை-கும்பகோணம் சாலை மற்றும் பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, இப்படுகொலை தொடர்பாக மாலினியின் சகோதரர்களான குணால், குகன், பாஸ்கர், உறவினர்களான சுபாஷ், கவியரசன், அன்புநிதி ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்படை விசாரணையின் அடிப்படையில் குணால் தவிர்த்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மாலினியின் தாய் விஜயாவை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யும் வரை வைரமுத்துவின் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மையில், மாலினியின் பெற்றோரில் அவரது தாய் விஜயா ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்; அதேசமயத்தில், அவரது தந்தை தலித் சாதியை சார்ந்தவர். தான் தலித் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தாலும், தன்னுடைய மகள் தலித் இளைஞனை காதலித்து திருமணம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிவெறி காரணமாகாவே, விஜயா தனது மகன்கள் மூலம் வைரமுத்துவை ஆணவப் படுகொலை செய்துள்ளார்.
இந்த ஆதிக்கச் சாதிவெறியை போலீசின் முன்னிலையிலேயே விஜயா வெளிக்காட்டிய போதிலும், போலீசு நடவடிக்கை எடுக்காததாலும், காதலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காததாலும் வைரமுத்துவின் உயிர் காவு வாங்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இவ்வாறு ஆணவப் படுகொலை செய்யப்படுவது தமிழ்நாட்டில் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் திருநெல்வேலியில் கவின் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. அப்போதும் ஆளும் தி.மு.க. அரசு ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவே நடந்துகொண்டது. ஆணவப் படுகொலைகளுக்கென சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை புறந்தள்ளியதும் அதனடிப்படையிலேயே ஆகும்.
படிக்க: கவின்களை காவு வாங்கும் ஆதிக்கச் சாதி சங்கங்களும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும்
ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதியத் தாக்குதல்களுக்கு எதிராக தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இத்தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 31 அன்று மதுரையில் அருந்ததியர் இளைஞரை ஆதிக்கச் சாதிவெறியர்கள் படுகொலை செய்தது, தற்போது வைரமுத்து ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பது என ஆதிக்க சாதிவெறியர்களின் கொட்டம் தொடர்கிறது.
மறுபுறம், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஆதிக்கச் சாதி சங்கங்களில் ஊடுருவி அம்மக்களுக்கு சாதி வெறியூட்டி, தலித் மக்கள் மீதான சாதிய தாக்குதல்களையும் படுகொலைகளையும் அரங்கேற்றி வருகிறது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
எனவே, தமிழ்நாட்டில் ஆதிக்கச் சாதி சங்கங்களையும் ஆர்.எஸ்.எஸ்-யும் தடை செய்வதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதியத் தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. அரசிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











