வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த செப்டம்பர் 15 அன்று அச்சட்டத்தினை இரத்து செய்யாமல் சில பிரிவுகளுக்கு மட்டும் தற்காலிக தடை விதித்து இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைத்துள்ளது.
பாசிச பா.ஜ.க. அரசு கடந்த ஏப்ரல் மாதத்தில் 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில்
40-க்கும் மேற்பட்ட திருத்தங்களை மேற்கொண்டு, “ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம்” (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act – UMEED) என்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் மூலம் இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றி, வக்ஃப் சொத்துகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கான அடித்தளமிட்டது.
இதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் ஜனநாயக சக்திகள் என பல தரப்பினரும் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்தனர். இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்நிலையில், இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய், நீதிபதி ஏ.ஜி மாசி தலைமையிலான அமர்வு வக்ஃப் திருத்த சட்டத்தினை ரத்து செய்யாமல், சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது.
முக்கியமாக, வக்ஃப்-க்கு ஒருவர் தன்னுடைய சொத்தை தானமாக வழங்க வேண்டுமென்றால் அவர் ஐந்து வருடங்கள் இஸ்லாத்தை பின்பற்றியிருக்க வேண்டும் என்கிற சதித்தனமான விதிக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. மாறாக, ஒருவர் ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுகிறாரா என்பதை தீர்மானிப்பதற்கான விதிகளை உருவாக்குமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக்கொண்டிருப்பதன் மூலம் பாசிஸ்டுகளுக்கு பாதையமைத்து கொடுத்துள்ளது.
படிக்க: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025: மோடி அரசை பின்வாங்க வைப்பது எப்படி?
அதேபோல், வக்ஃப் வாரியங்களில் காவி கும்பலை நுழைத்து அதனை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ஒன்றிய, மாநில வக்ஃப் வாரியங்களில் இரண்டு இஸ்லாமியர் அல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்று துடிக்கிறது காவி கும்பல். ஆனால், தஞ்சாவூர் மாவாட்டம் பாபநாசம் அருகே உள்ள கோவில் ஒன்றில், அறங்காவலராக இஸ்லாமிய பெயர்கொண்ட ஒருவர் (உண்மையில் இந்து மதத்தைச் சார்ந்தவர்) நியக்கமிப்பட்டதற்கே வானத்திற்கும் பூமிக்கும் குதித்தது.
ஆனால், உச்சநீதிமன்றம் இவ்விதிக்கு இடைக்காலத் தடை விதிக்கவில்லை. மாறாக, 22 உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றிய வக்ஃப் கவுன்சிலில் நான்கு பேருக்கு மேல் இஸ்லாமியர் அல்லாதவர்களை நியமிக்கக் கூடாது; 11 உறுப்பினர்களைக் கொண்ட மாநில வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் மூன்று உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது; அதில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்று பாசிஸ்டுகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
அதேபோல், வக்ஃப் கவுன்சிலில் இஸ்லாமியர் அல்லாதவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்கிற விதியை இரத்து செய்யாமல், முடிந்தவரை இஸ்லாமியர் ஒருவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது.
முக்கியமாக, வக்ஃப் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதற்காக வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்து வந்த “வக்ஃப் பயனர்” (Waqf by user) என்ற பிரிவை பாசிச கும்பல் சட்டத்திருத்தத்தின் போது நீக்கியது. மேலும், வக்ஃப் சொத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்; பதிவு செய்யப்படவில்லை என்றால் அதனை அரசு அபகரித்துக் கொள்ளலாம் என்கிற விதிகளையும் கொண்டுவந்தது. இவ்விதிகளுக்கெல்லாம் தடை விதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் வாய்திறக்கவே இல்லை.
அடுத்ததாக, வக்ஃப் சொத்துகளுக்கான பதிவுகள், ஆண்டுக்கணக்குகள், வழக்குகளை கையாள்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்காக மையப்படுத்தப்பட்ட இணையதளப் பக்கம் (Web Portal) உருவாக்கப்பட வேண்டும் என்று வக்ஃப் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் ரத்து செய்யப்படவில்லை.
மாறாக, வக்ஃப் சொத்துகளில் சர்ச்சை ஏற்படும் போது அது வக்ஃப்-க்கு சொந்தமானதா அல்லது அரசுக்கு சொந்தமானதா என்ற பிரச்சினையில், வக்ஃப் நிலத்தை அரசுக்கு சொந்தமானது என்று மாவட்ட ஆட்சியரால் அறிவிக்க முடியும் என்ற விதிக்கு மட்டுமே இடைக்கால தடை விதித்துள்ளது.
இவ்வாறு, முற்றிலும் பாசிச கும்பலுக்கு ஆதரவாக ஓரிரு விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துவிட்டு, மற்ற விதிகளுக்கு உச்சநீதிமன்றம் எந்த தடையையும் விதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி கிரண் ரிஜிஜு வரவேற்றிருப்பது இந்த உத்தரவின் மூலம் பாசிஸ்டுகளின் உச்சி குளிர்ந்திருப்பதை காட்டுகிறது.
படிக்க: வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு | இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி
வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மீதான உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ள அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், “வக்ஃப் திருத்த சட்டத்தை முற்றிலுமாக இரத்து செய்யாமல், அதனை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு முழுமையற்றது மற்றும் திருப்தியற்றது. வக்ஃப் திருத்ச் சட்டத்திற்கு எதிராக, நவம்பர் 16-ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும். அது ஒரு பெரிய பேரணியில் முடிவடையும். இதில் நாடு முழுவதும் இருந்து மக்கள் கலந்து கொள்வார்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளது.
முக்கியமாக, இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றுகின்ற வக்ஃப் திருத்த சட்டத்தின் அனைத்து விதிகளுக்கும் இடைக்கால தடைவிதிக்கத் துணியாத உச்சநீதிமன்றம் எவ்வாறு வக்ஃப் சட்டத்தை இரத்து செய்யும் என்று எதிர்பார்க்க முடியும். பாசிச கும்பலின் எதிர்ப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்கு சட்டத்தை இரத்து செய்யாமல், சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை எவ்வாறு இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று வரவேற்க முடியும்? இது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.
குறிப்பாக, பாசிசத்தின் ஓர் அங்கமாக மாறியுள்ள உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு, காஷ்மீர் 370 பிரிவு இரத்து உள்ளிட்ட வழக்குகளில் பாசிச கும்பலுக்கு ஆதரவான தீர்ப்பையே வழங்கியுள்ளது. அதன் தொடார்ச்சியாக இந்த உத்தரவும் வந்துள்ளது. மேலும், “இறுதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தாலும் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது. அப்படி செய்தால் நாடாளுமன்ற முடிவுகளுக்குள் தலையிடுவதாக அமையும். எனவே சட்டத்தின் சில விதிகளை மட்டுமே மாற்ற முடியும்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே இறுதி தீர்ப்பு என்பதும் பாசிச கும்பலுக்கு சாதகமாகவே அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
ஆனால், இஸ்லாமியர்களுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் இந்நடவடிக்கையை அம்பலப்படுத்தி பா.ஜ.க. அரசிற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு பதிலாக, அதன் இடைக்கால தடையை வரவேற்பது என்று பாசிச கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்கு எதிர்க்கட்சிகள் பலியாகி, இஸ்லாமிய மக்களுக்கு துரோகமிழைக்கின்றன.
எனவே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது, வழக்கு தொடர்வது போன்றவற்றின் மூலமாக வக்ஃப் திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய முடியாது. மாறாக மாணவர்கள், இளைஞர்கள், ஜனநாயக சக்திகள் என அனைவரும் சாதி – மதம் கடந்து ஒன்றிணைந்து நாடு தழுவிய களப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலமே பாசிச கும்பலை பணிய வைக்க முடியும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











