கொடூர ஆயுதங்களால் குத்தி கிழிக்கப்படும் காசா குழந்தைகள்

காசாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக குழந்தைகளே உள்ள நிலையில், அவர்களில் பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். மூளையில் சிறு துண்டுகள், மார்பில் தோட்டாக்கள் மற்றும் குண்டு வெடிப்புகளால் சிதைந்த கைகால்களுடன் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர்.

0

னவெறி இஸ்ரேல் அரசு கொடிய ஆயுதங்கள் மூலம் காசா குழந்தைகளை கொடூரமாக படுகொலை செய்து வருவது “டி வோல்க்ஸ்க்ராண்ட்” (De Volkskrant) என்கிற கத்தோலிக்க ஊடக நிறுவனத்தின் ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

இனவெறி இஸ்ரேல் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக காசா மீது இன அழிப்புப் போரை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து வருகிறது. உணவு, மருந்துகள்  உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை காசாவிற்குள் அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருவதால், பட்டினியாலும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் காசா மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். பாலஸ்தீன மக்களை முற்றிலுமாக அழிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள இஸ்ரேல், காசாவில் குழந்தைகள், பெண்களை குறிவைத்து படுகொலை செய்து கொண்டிருக்கிறது. இது, டி வோல்க்ஸ்க்ராண்டின் ஆய்வில் மீண்டும் அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில், டி வோல்க்ஸ்க்ராண்ட் ஊடக நிறுவனம் காசா குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து வரும் சர்வதேச மருத்துவர்களிடம் இந்த ஆய்வை நடத்தியது. அதில், இனவெறி இஸ்ரேல் துப்பாக்கி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் காசா குழந்தைகளை குறிவைத்து கொன்றுக் கொண்டிருக்கிறது என்கிற அதிர்ச்சியளிக்கும் தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, கொடிய தாக்குதல்களினால் ஏற்பட்ட படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய 114 குழந்தைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அவர்களில் பெரும்பாலான குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இக்காயங்களின் தன்மை மற்றும் அளவைப் பார்க்கையில் இவை தற்செயலான தாக்குதலாக இருப்பது சாத்தியமற்றது என்று கூறிய முன்னாள் டச்சு ராணுவத் தளபதி மார்ட் டி குருயிஃப், இவை இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதல் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.

அதேபோல், அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் ஃபெரோஸ் சித்வா மார்ச் 2024-இல் காசாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது சாத்தியமற்ற வகையில் 48 மணி நேரத்தில் நான்கு சிறுவர்கள் தலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு வாரங்களில், இதே போன்ற கொடூர காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒன்பது குழந்தைகளுக்கு அவர் சிகிச்சை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: காசாவில் பட்டினிப் படுகொலை: போரின் விளைவல்ல, மையம்!


காசா குழந்தைகள் மீதான இத்திட்டமிட்ட தாக்குதலானது மனிதாபிமான மண்டலங்களிலும் தொடர்கிறது. அவ்வாறு இனவெறி இஸ்ரேலால் சுடப்பட்ட நான்கு வயது சிறுமிக்கு லாரிங்கோஸ்கோப் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சையளித்து, அவரது தலையில் துளைத்திருந்த தோட்டாவை வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றியதை, அவசர அறுவை சிகிச்சை நிபுணர் மிமி சையத் நினைவுக் கூர்ந்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் அரசு குழந்தைகளை படுகொலை செய்வதற்கு சிறிய, கனசதுர வடிவிலான துண்டுகளை பயன்படுத்தி வருகின்றது. இவை குழந்தைகளின் உறுப்புகள் மற்றும் இரத்த நாளங்களைத் துளைத்து, உடலின் உட்புற இரத்தப்போக்கு அல்லது பெரிய அளவிலான உடல் உறுப்புகளை துண்டித்து கொன்று கொண்டிருக்கிறது. ஒன்பது மருத்துவர்கள் இதுபோன்ற கொடிய காயங்களை நேரில் பார்த்தாக தெரிவித்துள்ளனர். இவை இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட டங்ஸ்டன் துண்டுகளுடன் ஒத்துப்போகின்றன என்பதை ஆயுத நிபுணர்கள் கண்டுப்பிடித்து அம்பலப்படுத்தியுள்ளனர்.

காசாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக குழந்தைகளே உள்ள நிலையில், அவர்களில்  பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். மூளையில் சிறு துண்டுகள், மார்பில் தோட்டாக்கள் மற்றும் குண்டு வெடிப்புகளால் சிதைந்த கைகால்களுடன் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்  குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர்.

அதேபோல், “இஸ்ரேல் குறிவைக்கின்ற உடல் பாகம் ஒவ்வொரு நாளும் மாறியது. ஒரு நாள் தலை மற்றும் மார்பை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. மற்றொரு நாள், கைகால்கள் அல்லது வயிற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது” என்று இஸ்ரேலின் கொடூர தாக்குதல் வடிவம் குறித்து பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர் கோஹர் ரஹ்பர் அம்பலப்படுத்தியுள்ளார்.


படிக்க: அழுவதற்குக் கூட தெம்பின்றி பசியால் மடியும் காசா குழந்தைகள்


மேலும், கடுமையான வெப்பத்தில் வேலை செய்வதாகவும் மருத்துவமனைகளில் கழிவு நீர், வெடிபொருட்கள் மற்றும் அழுகல் நாற்றம் வீசுவதாகவும், காசா மருத்துவமனைகளின் நிலையையும் அதில் வேலை பார்க்கையில் எதிர்கொள்கின்ற கொடுமைகளையும் மருத்துவர்கள் விவரித்துள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் உள்ள வென்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்கள் எல்லாம் சேதமடைந்துள்ளதுடன் கடுமையான பற்றாக்குறையும் நிலவுகின்றன.

அதேசமயத்தில், இனவெறி இஸ்ரேலால் தங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளபோதிலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் மருத்துவர்கள் இனப்படுகொலையை அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள், குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றுவதும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல் குறித்து அம்பலப்படுத்துவதும் தங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் காசாவிற்குள் நுழைவதை இஸ்ரேல் தடுத்து வருகின்றது.

இனவெறி இஸ்ரேல் நமது கண்முன்னே மனிதாபிமானமற்ற முறையில் கொடூரத் தாக்குதல்களை நடத்தி குழந்தைகளை படுகொலை செய்து கொண்டிருக்கிறது. அதாவது, ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறது. அக்குழந்தைகளின் அழுகுரல்கள் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரின் செவியிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனவே, இனவெறி இஸ்ரேலுக்கு எதிராக உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்ற மக்கள் போராட்டங்களில், “இனவெறி இஸ்ரேலே, காசா குழந்தைகளைப் படுகொலை செய்வதை நிறுத்து!” என்ற முழக்கம் எழுப்பப்பட வேண்டும். அவை காசா மீதான இஸ்ரேலின் பேரழிவுப் போரை நிறுத்துவதை நோக்கி நகர்த்தப்பட வேண்டும்.

செய்தி ஆதாரம்: Countercurrents


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க