ஒடிசா: பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள்!

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒடிசா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிறுமி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

டிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி 19 வயது கல்லூரி மாணவி நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவரும் நிலையில், தற்போது மீண்டுமொரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி செப்டம்பர் 13 அன்று தனது காதலனுடன் பாலிகர்சந்தி கடற்கரையில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அவர்களை கைப்பேசியில் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து, பணம் தரவில்லையெனில் காணொளிகளை அவர்களது பெற்றோர்களுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டியுள்ளது. இதற்கு காதலர்கள் மறுப்பு தெரிவிக்க, காதலனை கொலைவெறியுடன் தாக்கி மயக்கமடையச் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அக்கும்பல் அருகே உள்ள வனப்பகுதியில் மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி செப்டம்பர் 15 அன்று மாலை போலீசுதுறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசு, மூன்று பேரை கைது செய்துள்ளதாகவும் தலைமறைவாக உள்ள ஒரு நபரை தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்திலுள்ள ஃபக்கீர்மோகன் கல்லூரியில் படித்து வந்த முதலாமாண்டு மாணவி தன்னுடைய துறைத் தலைவர் சமீரா குமார் சாஹூ என்பவனால் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தனக்கு நேர்ந்த அநீதி குறித்து கல்லூரி முதல்வரிடமும் போலீசிடமும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வேறுவழியின்றி, ஜூலை 12-ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.


படிக்க: ஒடிசா: தொடரும் பெண்களின் மீதான பாலியல் கொடூரங்கள்!


இச்சம்பவம் ஒடிசா முழுவதும் கடும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. இப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்காக மாணவியின் குடும்பத்திற்கு ஒடிசா பா.ஜ.க. அரசு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்தது. ஆனால், இவையெல்லாம் போராட்டத்தைத் தடுத்துவிடவில்லை. காங்கிரசு, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஒடிசாவிலுள்ள மாணவர் சங்கங்களும் போராட்டத்தில் இறங்கின.

இச்சம்பவம் நடந்து ஒரு சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மீண்டுமொரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை கொடூரம் நிகழ்ந்திருப்பது, ஒடிசாவை பெண்கள் வாழத் தகுதியற்ற இடமாக பா.ஜ.க. அரசு மாற்றிவருவதை வெளிக்காட்டுகிறது.

குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள், குறிப்பாக கூட்டுப் பாலியல் வல்லுறவுகள், மிக மோசமான வகையில் அதிகரித்து வருகின்றன. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒடிசா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிறுமி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒடிசா மட்டுமல்லாமல் பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் என பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. எனவே, ஜனநாயக சக்திகள், எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என அனைவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவிலும், குறிப்பாக ஒடிசாவிலும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது உடனடி தேவையாக உள்ளது.


மித்ரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க