கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, மோடி அரசானது தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோசடிகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். “மோசடிகள் மூலமே பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது, தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளது” என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த மோசடிகளுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே, “தி குயிண்ட்” இணையதளம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நடைபெற்றிருந்த மோசடிகளை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து தேர்தல் நிதிப்பத்திரங்கள், தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், தொகுதி மறுவரையறை, சிறப்பு தீவிர மறு ஆய்வு உள்ளிட்ட பாசிச நடவடிக்கைகள் மூலம் பெயரளவிலான தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டும் விதமாக, தேர்தல் கட்டமைப்புகளை இந்துராஷ்டிரத்திற்கேற்ப மறுவார்ப்பு செய்து வருகிறது. தற்போது அம்பலமாகியுள்ள இந்த வாக்குத் திருட்டு மோசடியையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் “வாக்குத் திருட்டு”
2024 நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள பெங்களூரு மத்திய (Bangalore Central) தொகுதியில் பா.ஜ.க. 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இத்தொகுதியானது ஏழு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. அவற்றில் ஆறு தொகுதிகளில் பா.ஜ.க-வை விட காங்கிரசு அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆனால், மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டும் காங்கிரசை விட பா.ஜ.க. 1,14,000 வாக்குகள் அதிகமாகப் பெற்றிருக்கிறது.
காங்கிரசு வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த பெங்களூரு மத்திய தொகுதியில் பா.ஜ.க. வெற்றிப் பெற்றதற்கு மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் கிடைத்த அதிக வாக்குகளே முக்கிய காரணம். எனவே, மகாதேவபுரா தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை மட்டும் எடுத்து காங்கிரசு கட்சி ஆய்வு செய்திருக்கிறது.
அந்த ஆய்வில் மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்காளர்கள் முறையான விவரங்களின்றி மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. மகாதேவபுரா தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 11,965 வாக்காளர்கள் வெவ்வேறு பூத் எண்களில், பிற மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர்; 40,009 வாக்காளர்களின் முகவரிகள் “0”, “#” என்று பதிவாகியுள்ளது; 10,452 வாக்காளர்கள் ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் வசிக்கக் கூடியவர்களாக உள்ளனர்; 4,132 வாக்காளர்கள் செல்லாத புகைப்படங்களுடன் இடம்பெற்றிருக்கின்றனர்; 33,692 வாக்காளர்கள் படிவம் 6-ஐ தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.
இம்மோசடித் தரவுகளை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டு பேசிய ராகுல் காந்தி, “இது ஒரு தொகுதியில் மட்டும் நடைபெறவில்லை. பல இடங்களில் இவ்வாறு நிகழ்ந்துள்ளன. பா.ஜ.க. வெற்றி பெறுவதற்காக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது” என்று குற்றஞ்சாட்டினார். மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெற்று பிரதமரானதற்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கும் தேர்தல் மோசடிகளே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
மோடி அரசின் கைப்பாவையாக
தேர்தல் ஆணையம்
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு தார்மீகப் பொறுப்பெடுத்துக் கொண்டு, பதிலளிக்க வேண்டிய தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி தன்னுடைய குற்றச்சாட்டுகளை பிரமாணப் பத்திரமாக முன்வைத்தால்தான் அவற்றை விசாரிக்க முடியும் என்று கூறியது. ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று “இந்தியா டுடே”, “ஆல்ட் நியூஸ்” ஆகிய செய்தி ஊடகங்கள் தங்களுடைய கள ஆய்வில் நிரூபித்துள்ள போதிலும், அக்குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தேர்தல் ஆணையம் பொய்யுரைத்து வருகிறது.
மேலும், “ராகுல் காந்தி, பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுங்கள் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்” என்று மிரட்டுகிறது. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளை நாட்டு மக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக திசைதிருப்புகிறது. ஆனால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தேர்தல் மோசடிகள் மூலம் வெற்றி பெற்றுள்ளனர் என்று பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு எந்தவித கண்டனமும் தெரிவிக்காமல் இருக்கிறது.
அதேசமயம், அம்பலமான தேர்தல் மோசடிகளால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைக் குறைப்பதற்காக ஆகஸ்ட் 17-ஆம் தேதி புது டெல்லியிலுள்ள தேசிய ஊடக மையத்தில் தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது. அதில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள எந்தவித குற்றச்சாட்டுக்கும் நியாயமான முறையில் பதிலளிக்காமல், மிகவும் திமிர்த்தனமாக எதிர்க்கட்சிகளையும் நாட்டு மக்களையும் இழிவுப்படுத்தும் விதமாக பேசினார்.
மகாராஷ்டிராவில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது உள்ளிட்டு பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கடந்து சென்றார். சாலையோரங்களில், பாலத்தின் கீழ் வசிப்பவர்களுக்கும் நகரங்களில் அங்கீகரிக்கப்படாத ‘காலனி’களில் வசிப்பவர்களுக்கும் வீட்டு முகவரி பூஜ்ஜியம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று ஞானேஷ் குமார் முட்டுக்கொடுத்து பேசியது ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
அதேபோல், பகுப்பாய்வு செய்வதற்கேற்ப வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட வேண்டும்; வாக்குப் பதிவின்போது பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் மூலம் தேர்தலில் மோசடிகள் நடந்துள்ளதா என்பதை செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் மிகவும் துல்லியமாகவும் குறுகிய காலத்திலும் கண்டறிய இயலும்.
இதுகுறித்து பதிலளித்த ஞானேஷ்குமார், “கமல்நாத் எதிர் தேர்தல் ஆணையம்” வழக்கை மேற்கோள் காட்டி இயந்திரத்தால் பகுப்பாய்வு செய்யக்கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டால் வாக்காளர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்றார். மேலும், தேர்தல் நடத்தை சட்டவிதிகளை காரணம் காட்டி வாக்குப் பதிவின் போது பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட முடியாது என்று மறுத்தார்.
ஆனால், “கமல்நாத் எதிர் தேர்தல் ஆணையம்” வழக்கில், இயந்திரத்தால் பகுப்பாய்வு செய்யக்கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டால் வாக்காளர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் வாதிட்டதே தவிர அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அம்பலப்படுத்தியுள்ளார்.
அதேபோல், கடந்த ஆண்டு இறுதியில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வழக்கறிஞர் மெஹ்மூத் பிரச்சா, சண்டிகர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அவ்வழக்கில், வாக்குப் பதிவின் சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவு வந்த சில வாரங்களிலேயே, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குப் பிறகு சி.சி.டி.வி. காட்சிகள் அழிக்கப்பட்டுவிடும் என்று 1961-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை சட்டத்தின் விதி 93-ஐ, மோடி அரசு திருத்திவிட்டது.
அதேபோல், தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் புகார் தெரிவித்தால் மட்டுமே அதனை விசாரிக்க முடியும் என்கிறது தேர்தல் ஆணையம். 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேசத் தேர்தலில் மோசடிகள் நடந்ததாக அகிலேஷ் யாதவ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தையும் அதனடிப்படையிலேயே மறுத்திருக்கிறது.
மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியல் இயந்திரத்தால் பகுப்பாய்வு செய்யக்கூடிய டிஜிட்டல் வடிவில் கொடுக்கப்படாததால் அதனை ஆய்வு செய்வதற்கே காங்கிரசு கட்சிக்கு ஆறு மாதங்களாகின. எனில், 45 நாட்களுக்குள் யாராலும் மோசடிகளை கண்டறிந்து புகார் தெரிவிக்க இயலாது.
எனவே, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலானது தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தேர்தல்களில் மோசடிகளில் ஈடுபடுவதுடன், தேர்தல் கட்டமைப்புகளில் மாற்றம் செய்வதன் மூலம் அம்மோசடிகள் குறித்து விசாரணை கூட நடத்த முடியாது என்பதை நிலைநாட்டியுள்ளது. அதாவது, தேர்தல் கட்டமைப்பை சட்டப்பூர்வ வழிகளிலேயே இந்துராஷ்டிரத்திற்கேற்ப மறுவார்ப்பு செய்துள்ளது.
இதன் உச்சமாக, தற்போது பீகார் மாநிலத்தில் “சிறப்பு தீவிர மறு ஆய்வு” என்ற பெயரில் வாக்காளர் பட்டியலை காவிமயமாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சிறுபான்மையினர், பெண்கள் என பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய பல இலட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமையை பறித்து வருகிறது. சிறப்பு தீவிர மறு ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், மூன்று தொகுதிகளில் 80,000 வாக்காளர்கள் போலி மற்றும் தவறான முகவரிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதை “தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்” (The Reporters Collective) என்ற இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது. இது சட்டப்பூர்வமாக தேர்தல் மோசடிகளை நிகழ்த்துவதற்கான ஏற்பாடாகவே சிறப்பு தீவிர மறு ஆய்வு இருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்துராஷ்டிர கரசேவை
மோடி அரசும் தேர்தல் ஆணையமும் கூட்டு வைத்துக்கொண்டு ‘தேர்தல் ஜனநாயகத்தை’ சிதைத்துக் கொண்டிருக்கும் போதும், அதனை உச்சநீதிமன்றம் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. டெல்லியில் தெருநாய்க் கடியால் ரேபிஸ் நோய்த்தொற்று பரவுவது குறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் மோசடிகள் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க மறுக்கிறது. தேர்தல் கட்டமைப்பு மீதான மோடி அரசின் தாக்குதல்களை வேடிக்கைப் பார்ப்பதுடன் அதற்கு உறுதுணையாகவும் செயல்பட்டு வருகிறது.
2023 மார்ச் மாதத்தில், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய குழுதான் தேர்தல் ஆணையர்களை பரிந்துரை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், அத்தீர்ப்பை செல்லாக்காசாக்கும் வகையில் மோடி அரசானது “தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம்” என்ற பாசிச சட்டத்தை நிறைவேற்றி, தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவிலிருந்து தலைமை நீதிபதியை வெளியேற்றியது. ஆனால், இச்சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் மோடி அரசு மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது.
அதேபோல், 2019-ஆம் ஆண்டில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) என்ற அமைப்பு தேர்தல் முடிந்தவுடன் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை, வாக்கு செலுத்தியவர்களின் எண்ணிக்கையை கொண்ட படிவம் 17சி-யை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. தேர்தல் மோசடிகளை அம்பலப்படுத்தக்கூடிய, முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை ஐந்து ஆண்டுகள் கிடப்பில் போட்டு வைத்திருந்த உச்சநீதிமன்றம், இறுதியில் அதனை வெளியிட முடியாது என்று தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
தற்போது கூட, பீகாரில் சிறப்பு தீவிர மறு ஆய்வு என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக மட்டும் 65 லட்சம் மக்களின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் மோசடியாக பறித்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளார்கள் என்பதை பல்வேறு ஊடகங்களும் அம்பலப்படுத்தியுள்ளன. அப்படியிருந்தும் சிறப்பு தீவிர மறு ஆய்வை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம் உள்ளிட்ட பல பாசிச நடவடிக்கைகளின் வரிசையில் தேர்தல் மோசடிகளிலும் உச்சநீதிமன்றம் இந்துராஷ்டிர கரசேவையாற்றிக் கொண்டிருக்கிறது.
நியாயமான தேர்தல்
எப்போது சாத்தியம்?
எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போல, பா.ஜ.க. தேர்தல் மோசடிகள் மூலம் வெற்றி பெறுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், மோசடிகளினால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தேர்தலை அணுகுவதில்லை. மாறாக, இஸ்லாமிய வெறுப்பு, இந்துமதவெறி, தேசவெறி, சாதிவெறியூட்டும் பிரச்சாரங்கள், கலவரங்கள், இலவச-கவர்ச்சிவாத அறிவிப்புகள், சாதி-மத முனைவாக்கங்கள் என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தனக்கான மக்கள் அடித்தளத்தை பாசிச கும்பல் உருவாக்குகிறது. தேர்தல் மோசடிகள் கூட பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலுக்கு மக்கள் அடித்தளம் உள்ள பகுதிகளில்தான் அரங்கேறுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
ஆனால், எதிர்க்கட்சிகள் தாங்கள் தோற்பதற்குத் தேர்தல் மோசடிகள் மட்டும்தான் காரணம் என்று கூறுவதன் மூலம் மக்களிடையே தனக்கான அடித்தளத்தை எதிர்க்கட்சிகளால் உருவாக்க முடியவில்லை என்பதை சாதுரியமாக மறைத்துவிடுகின்றன. தேர்தலில் தோற்ற பிறகு தேர்தல் மோசடிகள்தான் தோல்விக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், தேர்தலுக்கு முன்னதாக மக்கள் மத்தியில் அதனை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்கான முயற்சிகளில் இறங்குவதில்லை. உண்மையில், எதிர்க்கட்சிகள் அத்தகைய மக்கள் அடித்தளத்தை உருவாக்குவதற்குத் தயாராக இல்லை என்பதே எதார்த்தம்.
தற்போது கூட பா.ஜ.க-வின் வாக்குத் திருட்டு மோசடி குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்து பாசிச கும்பலின் மக்கள் அடித்தளத்தை சரிக்கும் வகையிலான போராட்டங்களைக் கட்டியமைப்பதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது; தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் தங்களை வரம்பிட்டுக் கொள்கின்றனர்.
அதேபோல், பீகாரில் சிறப்பு தீவிர மறுஆய்வு மூலம் பா.ஜ.க-வை வெற்றிபெற வைப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலாளித்துவவாதிகள் சிலரே பீகார் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் என்று பேசிவரும் நிலையில், “வாக்குத் திருட்டு” விவகாரத்தைப் பயன்படுத்தி ராகுல்காந்தி தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மூன்று தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்.
அதாவது, “உங்கள் வாக்கை தேர்தல் ஆணையமும் பா.ஜ.க-வும் திருடுகிறது. எனவே எங்களுக்கு வாக்களித்தால் நாங்கள் தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று பிரச்சாரம் செய்கிறார் ராகுல்காந்தி. கேட்பதற்கே கேலிக்கூத்தாக இல்லையா?
மொத்தத்தில் தேர்தல் வெற்றி, தோல்வியை கடந்து பாசிச பா.ஜ.க. வீழ்த்துவது குறித்து எதிர்க்கட்சிகள் எதையும் சிந்திப்பதில்லை. மக்களையும் சிந்திக்கவிடுவதில்லை.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலானது தேர்தல் மோசடிகளில் ஈடுபடுவது மட்டுமின்றி, சிறப்பு தீவிர மறு ஆய்வு, தொகுதி மறுவரையறை, தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் உள்ளிட்ட பாசிச சட்டத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் சொல்லிக்கொள்ளப்படும் பெயரளவிலான ஜனநாயகத்தைக் கொண்ட தேர்தல் கட்டமைப்பை பாசிசமயமாக்கி வருகிறது.
குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் மக்கள் அடித்தளத்தை உடைக்கும் வகையிலும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க நோக்கத்திற்கு சாதகமாகவும் தொகுதிகளை மறுவரையறை செய்வது என்ற அபாயகரமான திட்டத்தை அமல்படுத்த பா.ஜ.க முயற்சித்து வருகிறது. 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நாடு முழுவதும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதை பாசிச கும்பல் தன் திட்டமாகக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் கூட, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனைக்குரிய குற்றங்களில் 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் பிரதமர், முதல்வர், அமைச்சர்களின் பதவிகளைப் பறிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் பாசிச மோடி அரசு தாக்கல் செய்திருக்கிறது. இம்மசோதா சட்டமானால், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் கூட அவர்களின் ஆட்சி சட்டப்பூர்வமாகவே கலைக்கப்படும்.
இச்சூழலில்தான் எதிர்க்கட்சிகள் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் இருந்துகொண்டே கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்துராஷ்டிரத்திற்கேற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டுவரும் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டும், பாசிஸ்டுகள் தேர்தலில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள வரையிலும், நியாயமான தேர்தல் என்ற கோரிக்கை பகற்கனவே ஆகும். அத்தேர்தல் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க. கும்பலுக்கு சாதகமாகவே அமையும்.
தேர்தல் ஆணையம் பாசிச கும்பலின் கைப்பாவையாக மாறிவிட்டது என்பதை சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்துள்ள சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, “தேர்தல் ஆணையத்தை கலைத்துவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கக் கூடிய அமைப்பாக மாற்ற வேண்டும்” என்று பேசுகிறார். ஆனால், இந்தியா கூட்டணிக் கட்சிகள் அவ்வாறான நிலைப்பாட்டுக்கு வரவில்லை.
உண்மையில், பாசிசமயமாகியுள்ள இத்தேர்தல் கட்டமைப்பிற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தேர்தலில் பங்கேற்பதற்குத் தடைவிதிக்கும் “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற மாற்றுக் கட்டமைப்பிலேயே நியாயமான தேர்தலை நடத்த இயலும்.
அமீர்
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram