“ஆப் கி பார், ட்ரம்ப் சர்கார்”, “ட்ரம்ப் என்னுடைய நண்பர்” என்றெல்லாம் தம்பட்டம் அடித்தவாறு சுற்றிக்கொண்டிருந்தார், இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இன்றோ, இந்தியா மீதான ட்ரம்பின் அடாவடித்தனமான வரிவிதிப்பிற்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட பேசாமல் வாய்மூடி மௌனியாக இருக்கிறார். “மோடி ஓர் உலகத் தலைவர்”, “விஸ்வகுரு” என்றெல்லாம் சங்கிக் கும்பல் ஊதிப்பெருக்கி வந்த பிம்பம் சுக்குநூறாக உடைந்துக் கொண்டிருக்கிறது.
இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, உள்நாட்டிலும் பிற நாடுகளின் மீதும் ஒடுக்குமுறைகளையும் சுரண்டலையும் தீவிரப்படுத்தும் விதமாக பல்வேறு சர்வாதிகார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கம் சரிந்துவரும் நிலையில் அதனை எப்படியாவது தக்கவைத்துக் கொள்வதற்காக வெறிபிடித்தது போல நடந்து வருகிறார். உலக நாடுகளிடத்தில் வக்கிரமாகவும் திமிர்த்தனமாகவும் வெறிகூச்சலிட்டு வருகிறார்.
குறிப்பாக, அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பது என்ற பெயரில், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளை அடிமையாக்கி, அந்நாடுகளின் சந்தையை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கும் அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் இடையே இருக்கும் வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பது) நீக்குவதாகக் கூறி பரஸ்பர வரி (Reciprocal Tariff) விதிப்பை அறிவித்தார். அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை விகிதத்திற்கேற்ப விதிக்கப்பட்ட இவ்வரி, வர்த்தகப் பற்றாக்குறை நீடிக்கும் வரை தொடரும் என அடாவடித்தனமாக அறிவித்தார்.
அந்தவகையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 25 சதவிகித வரி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி இந்தியாவிற்கு அபராதமாக 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இந்தக் கூடுதல் வரி ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதலாக அமலுக்கு வர உள்ள நிலையில், தற்போது இந்தியா மீது 50 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் இந்த அநியாயமான வரிவிதிப்பினால், இந்தியாவின் சில முக்கியமான துறைகள் பேரழிவுக்குள் தள்ளப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இவ்வளவு அதிக வரிவிதிப்பால், அமெரிக்க சந்தையில் இந்தியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து, அவை சந்தையிலிருந்து ஓரங்கட்டப்படும். இதனால், இந்தியாவில் இப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டிய நிலை உருவாவதோடு, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்.
பேரழிவுக்குள் தள்ளப்படும் ஏற்றுமதி தொழில்கள்
ட்ரம்பின் வரிவிதிப்பால் ஜவுளி மற்றும் ஆடைகள், கம்பளங்கள், இறால் உள்ளிட்ட கடல் உணவுகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஆட்டோ பாகங்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழில்கள் கடுமையாக பாதிப்படைய போகிறது. ஏற்கெனவே, பாசிச மோடி அரசின் ஜி.எஸ்.டி. வரி எனும் பாசிச தாக்குதலால் நொடிந்து போயிருக்கும் சிறு, குறு வணிகர்கள் ட்ரம்பின் வரிவிதிப்பால் முற்றிலும் நொடிந்து போகும் அபாயம் உள்ளது.
ட்ரம்பின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீதான ஒட்டுமொத்த வரி கிட்டத்தட்ட 60 சதவிகிதமாக உயர்வதற்கு வாய்ப்புள்ளது. 2024-2025 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறாலின் மதிப்பு தோராயமாக ரூ.42,768 கோடியாகும். இது மொத்த கடல் உணவு ஏற்றுமதியில் 66 சதவிகிதமாகும். குறிப்பாக, ஆந்திராவில் உற்பத்தி செய்யப்படும் இறாலில் 70 சதவிகிதம் அளவிற்கு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் அம்மாநிலம் ட்ரம்பின் வரிவிதிப்பால் கடுமையான பாதிப்பை சந்திக்கும். இறால் ஏற்றுமதியில் அதிகளவு ஈடுபடும் மேற்குவங்கம், ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் பாதிப்பை சந்திக்க உள்ளன.
அடுத்ததாக, அமெரிக்காவின் வரிவிதிப்பால் அதிகம் பாதிப்படையும் தொழிலாக ஜவுளி, ஆயத்த ஆடை தொழில் உள்ளது. இந்திய அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி மற்றும் ஆடைகளில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. கோயம்புத்தூர், திருப்பூர், லூதியானா, பானிபட் உள்பட நாட்டின் ஜவுளி நகரங்களில் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்துறையில் வேலை செய்கின்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். இந்தியாவில் விவசாயத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய வேலை வழங்கும் துறையாக இத்துறை உள்ளது.
இந்நிலையில் ட்ரம்பின் வரிவிதிப்பால், பின்னல் ஆடைகள் மீதான வரி 63.9 சதவிகிதமாகவும் கைத்தறி ஆடைகள் மீதான வரி 60.3 சதவிகிதமாகவும் உயர உள்ளது. இந்த வரி உயர்வால், இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே தங்கள் அமெரிக்க ஆர்டர்களை நிறுத்திவிட்டதாக “எகனாமிக் டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளுக்கான “வடிவமைப்பு உரிமை” அமெரிக்க நிறுவனங்களின் கைகளில் உள்ளதால், உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை வேறு நாடுகளுக்கும் விற்க முடியாத சூழல் நிலவுகிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் இந்த வரிவிதிப்பால் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றன. திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் 30 சதவிகிதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அங்கு பணிபுரியும் 10 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதேபோல், ட்ரம்பின் வரிவிதிப்பால் ரத்தினக் கற்கள் மற்றும் நகைக்கான வரி 52.1 சதவிகிதமாக அதிகரிக்க உள்ளது. இதனால், சூரத்தில் உள்ள 25 இலட்சம் வைரத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவிற்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதால், அந்நாடுகளுடன் போட்டிப்போட முடியாமல் இந்திய பொருட்களின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிவிதிப்பு தொடர்ந்தால், இந்தியாவின் ஏற்றுமதி முழுமையாக பதிப்படைந்து, இந்திய பொருளாதாரம் மேலும் மோசமடையும்.
மோடி அரசின்
அமெரிக்க அடிமை விசுவாசம்
உலகில் எந்த நாட்டின் மீதும் இந்தளவிற்கு வரி விதிக்கப்பட்டதில்லை, ட்ரம்பின் நடவடிக்கை முட்டாள்தனமானது என சர்வதேச ஊடகங்களே விமர்சித்துவரும் நிலையில், மோடி அரசு இந்த வரிவிதிப்பிற்கு பெயரளவிற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல் வாய்மூடிக் கிடக்கிறது. குறிப்பாக, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சீனாவும் பிரேசிலும் ட்ரம்பின் அடாவடித்தனமான வரிவிதிப்பிற்கு பதிலடி கொடுத்துள்ள நிலையில் மோடி அரசு அமெரிக்காவிற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்க மறுக்கிறது.
அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை கைவிலங்கிட்டு நாடு கடத்தியது தொடங்கி, இந்தியாவின் ‘இறையாண்மையைக்’ கேள்விக்குள்ளாக்கும் வகையில் பாகிஸ்தான் – இந்தியா இடையேயான போர்நிறுத்தத்தை ட்ரம்ப் அறிவித்தது வரை பல்வேறு சம்பவங்களில் தனது அமெரிக்க அடிமைத்தனத்தை மோடி அரசு வெளிக்காட்டி வருகிறது.
ட்ரம்பின் இந்த வரி பயங்கரவாதத் தாக்குதலையும் அவ்வாறே அடிமைத்தனமாக கையாண்டு வருகிறது. வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்குத்தான் வரிவிதிப்பதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், அமெரிக்காவின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இந்தியா 3.8 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், சீனாவுடன் அமெரிக்கா 24.7 சதவிகித வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவை விட அதிகளவிலான வர்த்தகப் பற்றாக்குறையை கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவிற்கு மட்டும்தான் இந்தளவிற்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், ஆயுதங்கள் வாங்குவதன் மூலம், உக்ரைன் போருக்கு இந்தியா உதவுகிறது என்று குற்றஞ்சுமத்தி 25 சதவிகிதம் அபராத வரியை ட்ரம்ப் விதித்துள்ளார். ஆனால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதிலும் இந்தியாவை விட சீனாவே முதலிடம் வகிக்கிறது. ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தியை இறக்குமதி செய்கின்றன.
இவ்வளவு ஏன், அமெரிக்காவே ரஷ்யாவிடமிருந்து யுரேனியம், பல்லேடியம், உரங்கள், கனிம இரசாயனங்கள் போன்ற பல பொருட்களை இறக்குமதி செய்கிறது. மேலும், உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்துவதற்கும், சீனாவுடனான அணிச்சேர்க்கையிலிருந்து ரஷ்யாவை பிரித்தெடுப்பதற்கும் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புதினிடம் கூடிகுலாவுவதை உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்ற புதினுக்கு ட்ரம்ப் அளித்த வரவேற்பே அதற்கு சான்று.
ஆகவே, ட்ரம்பின் அநியாய வரிவிதிப்பிற்கு காரணமாக சொல்லப்படும் வர்த்தகப் பற்றாக்குறை, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது போன்றவை எல்லாம் முற்றிலும் அயோக்கியத்தனமானது என்பது அம்பலமாகிறது. மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது; மீறினால் இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டுவது இந்தியாவின் பெயரளவிலான இறையாண்மையை புதைக்குழிக்குள் தள்ளும் நடவடிக்கை.
ஆபரேஷன் சிந்தூரின் உண்மைத் தன்மையை விளக்கி கட்டுரை வெளியிட்டதற்காக “தி வயர்” இணையதளத்தின் நிறுவனர் சித்தார்த் வரதராஜன் மற்றும் பத்திரிகையாளர் கரன் தாப்பர் மீது இந்திய இறையாண்மையை, ஒற்றுமையை சீர்குலைப்பதாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது, பாசிச பா.ஜ.க. அரசு. ஆனால், உலக அரங்கில் இந்தியாவின் ‘இறையாண்மையை’ காலில் போட்டு மிதித்துக்கொண்டிருக்கும் ட்ரம்பிற்கு எதிராக மோடி கும்பல் மூச்சுக்கூட விடுவதில்லை.
நாங்கள்தான் ‘தேசத்தின் உண்மையான பாதுகாவலர்கள்’ என்று தேச பக்த வேடம் போடும் பா.ஜ.க. கும்பல், ட்ரம்ப் எவ்வளவுதான் காறி உமிழ்ந்தாலும் அதனை துடைத்துக்கொண்டு தனது அமெரிக்க அடிமை விசுவாசத்தைக் காட்டி வருகிறது.
எங்கும் அம்பானி – எதிலும் அதானி
மோடி அரசு ட்ரம்பின் மிரட்டலுக்கு வாய்திறக்காமல் இருப்பதற்கும் ரஷ்யாவிடமிருந்து தொடர்ச்சியாக எண்ணெய் வாங்குவதற்கும் பின்னணியில் அம்பானி – அதானியின் நலனே பிரதானமாக அடங்கியுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் அதிக இலாபம் அடைவது அம்பானிதான். “ரஷ்ய எண்ணெய் இறக்குமதி இந்தியாவில் உள்ள சில பணக்கார குடும்பங்களுக்குத்தான் பயனளிக்கிறது” என அமெரிக்க செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுவது அம்பானி குடும்பத்தைத்தான்.
2022-ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவின் கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியது. நாளொன்றுக்கு ரஷ்யாவிடம் இருந்து சராசரியாக 15 இலட்சம் பீப்பாய் எண்ணெயை இந்தியா வாங்குகிறது. இதில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) மற்றும் ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரோஸ்நெஃப்ட் (Rosneft) நடத்தும் நயரா எனர்ஜி (Nayara Energy) ஆகிய நிறுவனங்கள் கொண்டுள்ளன.
இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்யாவின் கடல்வழி கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது.
குறைந்த விலையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து, அதை குஜராத் மாநிலம் ஜாம்நகரிலுள்ள உலகின் மிகப்பெரிய ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நாடுகளுக்கு அம்பானி நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. 2021-ஆம் ஆண்டில் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய கச்சா எண்ணெய் வெறும் 3 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 2025-ஆம் ஆண்டில் 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் தோராயமாக சுமார் ரூ.6,850 கோடி லாபமடைந்துள்ளது என்று “எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம்” (CREA) தெரிவித்துள்ளது.
அதேபோல், கடந்த ஆண்டு இறுதியில் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரோஸ்நெப்ஃட் நிறுவனத்திடமிருந்து நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்குவதற்கான 10 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்டுள்ள மிகப்பெரிய எரிசக்தி ஒப்பந்தமாகும்.
ஒருபுறம், ரஷ்யாவிலிருந்து குறைந்த விலைக்கு எண்ணெயை இறக்குமதி செய்து அம்பானி நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது. மறுபுறம், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கொஞ்சமும் குறையவில்லை. இது, இந்த இறக்குமதியால் இந்திய நாட்டு மக்களுக்கு துளியும் பயனில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.
அதேபோல், ட்ரம்பை எதிர்த்து மோடி வாய் திறக்காமல் இருப்பதற்கு பின்னணியில், அதானியின் நலனும் அடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அதானியின் லஞ்ச ஊழல் மோசடியை அம்பலப்படுத்தி குற்றப்பத்திரிகையை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம் அதானிக்கு கைது ஆணையை பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையிலிருந்து அதானியை காப்பாற்றுவதற்கு ட்ரம்பின் தயவு மோடிக்கு தேவைப்படுகிறது. எனவே, மோடியின் நாயகனான அதானியை காப்பற்றுவதற்காக கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை பலிக்கொடுக்க மோடி அரசு தயாராக உள்ளது.
மொத்தத்தில், பாசிச மோடி அரசுக்கு அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலின் நலன்தான் முக்கியமே தவிர உழைக்கும் மக்களின் நலன் அல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது.
அடிமையாக்கப்படும் இந்தியா
இந்திய சந்தையை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற வெறியே ட்ரம்பின் அடாவடித்தனமான வரிவிதிப்பிற்கு காரணம். வரிவிதிப்பை ஆயுதமாக பயன்படுத்தும் ட்ரம்ப், மோடி அரசை பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட நிர்பந்தித்து வருகிறார்.
குறிப்பாக, “அமெரிக்க – இந்திய காம்பாக்ட்” என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்தங்களில் மோடி அரசு கையெழுத்திட்டு வருகிறது. இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாத புதிய ஜனநயகம் இதழில் வெளிவந்த, “அமெரிக்க – இந்திய காம்பாக்ட் திட்டம்: மோடி அரசின் அமெரிக்க அடிமை சாசனம்” என்ற கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
1990-களில் காங்கிரசும் வாஜ்பாய் அரசும் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளை ஏற்று நமது இந்திய நாட்டை மறுகாலனியாக்கத்திற்கு திறந்துவிட்டன. அதைபோல, தற்போது நாட்டை அமெரிக்காவின் காலனியாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் பாசிச மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
சமீப மாதங்களாக, இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு ஒப்பந்தத்திற்கான (Bilateral Trade Agreement) பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. காம்பாக்ட் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான இருதரப்பு வர்த்தகத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் 500 பில்லியன் டாலராக உயர்த்துவது இதன் இலக்காகும். இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு துறைகள் கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடப்பட உள்ளன. அதில் குறிப்பாக, விவசாய மற்றும் பால் பொருட்களுக்கான இந்திய சந்தையை அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு திறந்துவிடக் கோரி ட்ரம்ப் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
ஏற்கெனவே, மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்திய விவசாயம் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்க விளைப்பொருட்களுக்கு இந்திய சந்தை திறந்துவிடப்பட்டால் இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் அதனுடன் போட்டிப்போட முடியாமல் மிகப்பெரும் நட்டத்தை எதிர்கொண்டு நொடிந்து போவர்.
அதேபோல், உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக திகழும் இந்தியாவிற்குள் அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் பால் பொருட்களை அனுமதித்தால், இங்குள்ள எட்டு கோடி சிறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். ஏனெனில், அமெரிக்காவின் பால் உற்பத்தித்துறை மிகப்பெரும் தொழிற்சாலை, பால் பண்ணைகளை நடத்தக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதாகும். இக்கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இந்திய சிறு உற்பத்தியாளர்களால் நிச்சயம் போட்டிபோட முடியாது.
எனவேதான், இந்த இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு எதிராக இந்திய விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். “இந்திய விவசாயிகளின் நலனில் சமரசம் செய்ய மாட்டோம்” என மோடி அரசு வெற்றுச் சவடால் அடித்தாலும், அதன் நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு அடிபணிந்து இந்திய சந்தையை கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் நோக்கத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

சான்றாக, சமீபத்தில் பருத்தி மீதான 11 சதவிகித இறக்குமதி வரியை ஒன்றிய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அமெரிக்க வரிவிதிப்பால் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழில் அதிகம் பாதிப்படைவதால், இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக மோடி அரசு அப்பட்டமாக பொய்யுரைக்கிறது. ஆனால், மோடி அரசின் இந்நடவடிக்கையால், இந்திய பருத்தி விவசாயிகள்தான் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவர். ஏனெனில், இறக்குமதி வரி ரத்தால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை பருத்தியுடன் போட்டி போட முடியாமல் இந்தியாவின் சிறு, குறு பருத்தி உற்பத்தியாளர்கள் நொடிந்து போவர். தற்போது இந்தியாவில் பருத்தி விவசாயிகள் அறுவடைக்குத் தயாராகியிருக்கும் நேரத்தில் அவர்கள் தலையில் குண்டைத்தூக்கிப் போட்டுள்ளது மோடி அரசு.
பருத்தி மீதான 11 சதவிகித இறக்குமதி வரியை ரத்து செய்யும் முடிவை கண்டித்துள்ள “அகில இந்திய கிசான் சபா” (AIKS), “இதுபோன்ற விவசாய விரோத முடிவுகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை விவசாயிகள் இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தாவிட்டால், மோடி அரசாங்கம் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மற்ற பயிர்களுக்கும் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும். எனவே, இம்முடிவைத் திரும்பப்பெற அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து தீவிர போராட்டத்தைத் தொடங்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளது.
ஒருபுறம் ட்ரம்பின் வரி பயங்கரவாதத் தாக்குதலால், இந்தியாவில் ஏற்றுமதி தொழில்கள் பாதிப்படைந்து இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மறுபுறம், அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணிந்து மோடி அரசு, இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்துறை மற்றும் பால் உற்பத்தித்துறை, அணுசக்தித்துறை, கல்வித்துறை, இராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட்டு ஒட்டுமொத்த நாட்டையும் அடகு வைப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது.
மேலும், நம் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடங்கி, சட்டத்திட்டங்கள் இயற்றப்படுவது வரை அனைத்தையும் அம்பானி – அதானி கார்ப்பரேட்டுகளின் நலனிலிருந்தே மோடி அரசு தீர்மானித்து வருகிறது. இக்கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் சூறையாடுகிறது.
எனவே, மோடி அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு எதிராகவும் இந்திய விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்பதுபோல், ட்ரம்ப் வரிவிதிப்பால் பாதிக்கப்படும் வணிகர்களும் தொழிலாளர்களும் மோடி அரசின் அமெரிக்க அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இப்போராட்டங்கள், அமெரிக்காவிற்கு அடிபணிந்து நாட்டை அடிமைப்படுத்திவரும் பாசிச மோடி கும்பலை வீழ்த்தும் போராட்டங்களாக கட்டியமைக்கப்பட வேண்டும்.
மதி
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram