உத்தராகண்ட்: இஸ்லாமிய பள்ளி சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல்

அர்சலனன் என்கிற அச்சிறுவன் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றுள்ளான். இதற்காக சிறுவனின் வகுப்பு ஆசிரியர் ராகேஷ் சைனி சிறுவனின் முழங்கையில் எலும்பு முறியும் அளவிற்கு ஈவிரக்கமின்றி கம்பால் அடித்துள்ளார். பள்ளியின் முதல்வர் ரவீந்திரனோ தனது ஷூவை சிறுவனின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளான்.

0

பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஜாப்ரேரா கிராமத்தில், பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை எடுத்ததற்காக ஏழு வயது இஸ்லாமிய சிறுவனை ஆசிரியர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

அர்சலனன் என்கிற அச்சிறுவன் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றுள்ளான். இதற்காக சிறுவனின் வகுப்பு ஆசிரியர் ராகேஷ் சைனி சிறுவனின் முழங்கையில் எலும்பு முறியும் அளவிற்கு ஈவிரக்கமின்றி கம்பால் அடித்துள்ளார். பள்ளியின் முதல்வர் ரவீந்திரனோ தனது ஷூவை சிறுவனின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளான்.

இதனால் சிறுவன் அர்சலனின் உடல் முழுவதும் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. அப்புகைப்படங்களை சிறுவனின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இக்கொடூர தாக்குதலால் மாணவன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவனது தந்தை தெரிவித்துள்ளார். மேலும், இத்தாக்குதல் குறித்து ஆசிரியர்களிடம் விசாரிப்பதற்காக சிறுவனின் தந்தை பள்ளிக்கு சென்றபோது, அவரை கொலை செய்து விடுவோம் என்றும் அம்மிருகங்கள் மிரட்டியுள்ளன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பள்ளியில் படிக்கின்ற இஸ்லாமிய குழந்தைகளிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது, அர்சலன், இஸ்லாமிய சிறுபான்மை மதத்தை சார்ந்தவன் என்ற காரணத்தினாலேயே ஆசிரியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளான் என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது. மேலும், சிறுவனின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது இதனை மேலும் நிரூபிக்கிறது.

இதனையடுத்து, சிறுவனின் குடும்பத்தினர் செப்டம்பர் 11 அன்று ஹரித்வார் போலீசில் புகார் அளித்துள்ளனர். சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 (பிரிவு 75), பாரதிய நியாய் சன்ஹிதா (BNS) 115(2) (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 351(2) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய யாரையும் போலீசு கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: குஜராத் பள்ளிகளில் குறிவைக்கப்படும் இஸ்லாமிய மாணவர்கள்


இத்தாக்குதல் குறித்து டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் முகமது சதாம் முஜீப் கூறுகையில், “இது குழந்தைகளின் உரிமைகளை மீறும் ஒரு தெளிவான தாக்குதல். இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. மாநிலத்தில் உள்ள எந்தவொரு மாணவருக்கும் இது நிகழலாம். இது மீண்டும் நிகழக்கூடாது. அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் குறிவைக்கப்படுவதும் திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது. சான்றாக, இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலையாக உள்ள குஜராத் மாநிலத்தில், மாணவர்களிடையே ஏற்படும் மோதலை பயன்படுத்திக்கொண்டு பள்ளிகளிலிருந்து இஸ்லாமிய மாணவர்களை வெளியேற்றுவதற்கான சதியை சங்கப் பரிவார கும்பல் மேற்கொண்டு வருகிறது. மறுபுறம், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பள்ளிகளில் சங்கிகளை ஆசிரியர்களாக நியமித்து இஸ்லாமிய மாணவர்கள் மீது காவி கும்பல் தாக்குதலை நடத்தி வருகின்றது.

இவற்றின் மூலம், பா.ஜ.க. கும்பல் மாணவர்களின் மனதில் இஸ்லாமிய வெறுப்புணர்வையும் இந்து மதவெறியையும் ஊட்டி, சிறு வயதிலேயே அவர்களை சிந்தனையற்ற மதவெறியர்களாக மாற்றி வருகின்றது. அதேபோல், மாணவர்களிடையே மத மோதலை உண்டாக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் ஏழு வயது சின்னஞ்சிறுவன் ஈவிரக்கமற்ற முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் இதனுடனே இணைத்து பார்க்க வேண்டியுள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க