தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் 13-வது நாளில் தி.மு.க. அரசால் போலியாக சித்தரிக்கப்பட்ட வழக்கை வைத்துக்கொண்டு “போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துங்கள்” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சில மணி நேரங்களில் போராட்டக்களத்தில் போலீசை ஆயிரக்கணக்கில் குவித்து போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதற்கு தி.மு.க. அரசு ஆயத்தமானது.
ஆனால், தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் களத்திலிருந்து வெளியேறுவதற்கு தயாராக இல்லை. என்ன நடந்தாலும் சந்திக்கத் தயாராக இருந்தார்கள். பொதுமக்கள் நம்மை காப்பாற்றுவார்கள், மாணவர்கள் – இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள்,வழக்கறிஞர்கள், நாளையச் சமூகம் நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு களத்தில் உறுதியுடன் இருந்தனர்.
இந்த உள்ளுணர்விற்கான அடிப்படை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்களிடையே கிடைத்த ஆதரவும், மாநகரவாசிகள் அன்றாடம் போராட்டக் களம் நோக்கி அணிதிரண்டதுமாகும். குறிப்பாக, மாணவர்கள் – இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக தினந்தோறும் போராட்டக்களம் நோக்கி அணிவகுத்தது முக்கியமான காரணமாகும்.
அந்தவகையில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் இப்போராட்டத்தில் முன்முயற்சியுடன் ஊக்கமாக வினையாற்றினார்கள்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் துவங்கிய மூன்றாவது நாள், மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் நேரடியாக போராட்டக்களத்திற்குச் சென்றார். போராட்டத்திற்கு தலைமை தாங்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலப் பொருளாளரை சந்தித்து, கோரிக்கைகள், குறிப்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தார். தூய்மைப் பணியாளர்களிடையே அவர்களின் கோரிக்கையின் முக்கியத்துவத்தையும், அவர்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரக் கழகம் துணை நிற்கும் என்பதையும் வலியுறுத்தி பேசினார். குறிப்பாக, கட்சி என்ற அடிப்படையில் போராட்டக்களத்திற்கு முதலில் சென்றது தோழர் வெற்றிவேல் செழியன் என்பதால் மக்கள் அதனை அங்கீகரித்து வரவேற்றனர். சமூக வலைத்தளங்களில் பலராலும் அக்காணொளி பகிரப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மக்கள் அதிகாரக் கழகத்தின் உறுப்பினர் தோழர் ஆகாஷ் போராடும் மக்களுடன் தொடர்ச்சியாக துணைநின்றதோடு, போராட்டக்கள நிலைமைகளை உடனுக்குடன் சமூக வலைத்தள நேரலை மூலம் பதிவு செய்து வந்தார். மேலும், மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா, நேரடியாக களத்திற்குச் சென்று 61–வது வார்டிலிருக்கும் தொழிலாளிகளுடன் விரிவாக கலந்துரையாடி, அவர்களுடன் இணைந்து முழக்கமிட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக தோழர்களும் தொழிலாளிகளும் இணைந்து நேரடியாக களத்திற்கு வந்து ஆதரவு கொடுத்தனர்.
மற்றொருபுறம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள், தொடர்ச்சியாக களத்திலிருந்து போராடும் மக்களுக்கு உறுதுணையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். போராட்டக்களத்தின் நிலைமைகள் குறித்து உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்தனர்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை பதிவு செய்யாமல் கார்ப்பரேட் ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டன. தி.மு.க–வின் இணையக் கூலிப்படைகள் கீழ்த்தரமான அவதூறுகளை பரப்பி வந்தன. ஆனால், போராடும் மக்களின் பக்கம் நின்று களச் செய்திகளையும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை விரிவாக விளக்கும் காணொளிகளையும் வினவு யூடியூப் சேனல், சமூக ஊடகப் பக்கங்களில் தோழர்கள் பதிவு செய்து வந்தனர். இது இப்போராட்டத்திற்கு ஜனநாயக சக்திகள், மக்கள் ஆதரவை பெற்றுத் தருவதில் முக்கிய பங்காற்றியது.
முக்கியமாக, போராட்டத்தின் பொதுக்கருத்தை பலப்படுத்தும் நோக்கத்தில், மாணவர்களிடையே இப்போராட்டத்தை விரிவாக கொண்டுச் செல்ல வேண்டும் என தீர்மானித்து, பு.மா.இ.மு. சார்பாக “ரிப்பன் கட்டடத்தை நோக்கி அணிதிரள்வோம்” என்ற முழக்கத்தின் கீழ் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
இதனடிப்படையில், பு.மா.இ.மு. தோழர்கள் சமூக வலைத்தளங்களிலும், பல்கலைக்கழகம், கலை அறிவியல் கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவர்களிடையேயும் பிரச்சாரம் செய்தனர். மாணவர்களை அணிதிரட்டிக்கொண்டு கடைசி ஐந்து நாட்களும் தொடர்ச்சியாக போராட்டக் களத்திற்கு சென்றனர்.
அங்கு தூய்மைப் பணியாளர்களோடு இணைந்து முழக்கமிட்டு, பாடல்கள் பாடி போராட்டத்திற்கு உணர்வூட்டியதோடு, சக மாணவர்களையும் அரசியல்படுத்தினர். ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டு பந்தலுக்கும் நேரில் சென்று மக்களிடையே உரையாடினர்.
அதன் தொடர்ச்சியாக, முதன்முதலில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை ஆதரித்து ஆகஸ்ட் 12 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களைத் அணிதிரட்டி பு.மா.இ.மு. தோழர்கள் போராட்டம் நடத்தினார்கள். உழைக்கும் வர்க்கத்தின் கோரிக்கைக்காக மாணவர்களை அணிதிரட்டி பல்கலைக்கழகத்தில் நடத்திய இப்போராட்டம், மற்ற மாணவர் அமைப்புகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் முன்னுதாரமான வழிகாட்டியாக அமைந்தது. இப்போராட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் கல்லூரிகளில் போராடத் துவங்கியதும், போராட்டக் களத்திற்கு மாணவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பதும் அதிகரித்தது.
தூய்மைப் பணியாளர்களின் நம்பிக்கைக்கு முகமாக, இறுதிவரை அவர்களுக்கு தோளோடு தோளாக உடனிருந்து, ஆகஸ்ட் 13 அன்று இரவு போலீசு அடக்குமுறையை எதிர்கொண்டு பு.மா.இ.மு. தோழர்கள் தீரன், சிவா, அறிவு, வீரவேல் மற்றும் மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர் ஆகாஷ் ஆகியோர் கைதானார்கள்.
இளம் தோழர்கள் இப்போராட்டத்தில் காட்டிய ஈடுபாடு, போராடிய தொழிலாளர்கள் மீது, குறிப்பாக பெண்கள் மீது போலீசு நடத்திய அடக்குமுறைக்கு எதிராக ஒரு அரண் போல் நின்று அவர்கள் வெளிப்படுத்திய உறுதித்தன்மை ஆகியவை இப்போராட்டத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.
மேலும், நள்ளிரவில் தூய்மைப் பணியாளர்களை கைது செய்த பின், எந்த ஊடகத்தாலும் தொழிலாளர்களை எங்கு கொண்டுச் செல்கிறார்கள், என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. அப்போது மூன்று பேருந்துகளில் பிரித்து கைது செய்யப்பட்ட பு.மா.இ.மு. மற்றும் மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள்தான் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் நிலையை வெளிக்கொண்டு வந்தார்கள். இது, தூய்மைப் பணியாளர்களின் கைதைக் கண்டித்து ஜனநாயக சக்திகளை உடனடியாக வினையாற்றச் செய்தது.
போலீசின் திட்டமிட்ட வன்முறைக்குப் பிறகும் துவண்டிடாத தூய்மைப் பணியாளர்களின் போர்க்குணத்தையும், போராட்டத் தலைமையின் முடிவுகளையும் உடனுக்குடன் வினவு மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் நேரலை வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.
கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்களும் தோழர்களும் போலீசால் அநாகரீமாக நடத்தப்பட்டனர். இதனை கண்டித்தும் போராட்டத் தலைமையை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மண்டபத்திற்கு வெளியில் மக்கள் அதிகாரக் கழகத்தின் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த தோழர்கள் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர், மதுரை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் தூய்மைப் பணியாளர்கள் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்; ஜனநாயக சக்திகளின் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டு ஆதரவளித்தனர்.
14-ஆம் நாள் காலையில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதியை தனியாக அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்வார்கள் என்ற அச்சம் எழுந்தது. உடனடியாக, மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் வெற்றிவேல் செழியன், தோழர் பாரதியை அடைத்து வைத்திருந்த மண்டபத்திற்கு நேரில் சென்று அவர் விடுவிக்கப்படும் வரை காத்திருந்து அவரை வரவேற்றார்.
அதேபோல், நீண்ட காலத்திற்குப் பிறகு 200–க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு துணையாக ஒன்றுதிரண்டது நீதிமன்றத்தையும் அரசையும் நிர்பந்திக்க வைத்தது. இதில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் மருது பங்கெடுத்துக் கொண்டு வினையாற்றினார். நீதிமன்ற நடவடிக்கைகளை உடனுக்குடன் அம்பலப்படுத்திக் காட்டினார்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடங்கியது முதல் அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படும் வரை அவர்களுடன் களத்தில் உடனிருந்து மக்கள் உணர்வுக்கு பொருத்தமாக மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் பு.மா.இ.மு. தோழர்கள் வினையாற்றினர். அத்தோழர்களின் அர்ப்பணிப்பும், உறுதியும், வினவு வலைத்தளத்தின் பங்களிப்பும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைக்கான பொதுக்கருத்தை பலப்படுத்துவதிலும், போலீசின் அடக்குமுறைகளை தோலுரித்து இப்போராட்டத்தை மக்களிடையே கொண்டு சென்றதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது.
தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram