பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல்

மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காகவே பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நாடகமாடுகின்றன.

0

காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் செப்டம்பர் 21 அன்று அறிவித்துள்ளன.

பொதுவில், சுதந்திர பாலஸ்தீனம் (Free Palestine), தனிநாடு கோரிக்கை ஆகியவை நியாயமானதாகும். ஆனால், காசா மீதான இன அழிப்புப் போர் தீவிரமடைந்துள்ள இச்சூழலில் ஏகாதிபத்தியங்கள் இவ்வாறான நிலைப்பாட்டிற்கு வருவதைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாகக் கூறும் இந்நாடுகள் ஹமாஸ் குறித்துத் தெரிவிக்கும் கருத்துகளே அவற்றின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்திக் காட்டுகின்றன.

குறிப்பாக, பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிக்கையில், “இந்த அங்கீகாரம் ஹமாஸ்க்கு அளிக்கப்படும் பரிசல்ல. அமைதியான கூட்டு வாழ்வுக்கு உகந்த சூழல் ஏற்பட வேண்டும்; ஹமாஸ் அமைப்பு முடிவுக்கு வர வேண்டும் என்று கருதுவோருக்கு இந்த அங்கீகாரம் துணைநிற்கும்” என்று ஹமாஸ் அமைப்பிற்கு விரோதமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் பாலஸ்தீனத்தை அங்கீகரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொளியில், “பிரிட்டன் ஆதரிக்கும் நேர்மையான இரு தேச தீர்வு என்பது ஹமாஸ் படையின் வெறுப்புணர்வு கொண்ட கண்ணோட்டத்திற்கு முற்றிலும் மாறானது. இந்த அங்கீகாரம் ஹமாஸ்க்கு அளிக்கப்படும் பரிசல்ல. ஹமாசிற்கு எதிர்காலம் இல்லை. ஹமாஸ்க்கு எதிர்காலம் இல்லை. ஆட்சியமைப்பதில் அவர்களுக்கு பங்கிருக்காது என்பதே இதன் அர்த்தம்” என்றே பேசியுள்ளார்.

தற்போது காசாவில் பாலஸ்தீன மக்களுக்குத் துணையாகவும் பாலஸ்தீன விடுதலைக்காகவும் போராடி வருவது ஹமாஸ் அமைப்பே ஆகும். ஆனால், ஹமாசை அங்கீகரிக்காமல் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக இந்நாடுகள் தெரிவிப்பது அப்பட்டமான அயோக்கியத்தனமும் மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையுமே ஆகும்.

ஏனெனில், கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதலாக, காசாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ள காசா நகரத்தை இஸ்ரேல் அரசு கைப்பற்றத் தொடங்கியுள்ளது. இதற்காக, இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் ஈவிரக்கமற்ற தாக்குதலால் மக்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்படுவதுடன், லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் காசா நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.


படிக்க: பாசிச இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை உடனே நிறுத்து!


இஸ்ரேலின் இந்த இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தடுக்க வலியுறுத்தியும், இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்குமாறும் அந்தந்த நாட்டின் ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இது ஆளும் வர்க்கத்திற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காகவே பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக மேற்கண்ட நாடுகள் நாடகமாடுகின்றன.

அதேசமயத்தில், போரைத் தடுத்துநிறுத்தி பாலஸ்தீன மக்கள் வெளியேறுவதைத் தடுப்பது; காசாவிலிருந்து இஸ்ரேல் இராணுவத்தை வெளியேற்றுவது; மேற்கு கரையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது; காசாவிற்குள் உணவுப் பொருட்களை அனுமதிப்பது; இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகளையும் ஆயுத ஏற்றுமதியையும் துண்டிப்பது உள்ளிட்டவை குறித்தெல்லாம் இந்நாடுகள் வாய்திறக்கவில்லை. இவ்வாறு, எந்தவகையிலும் இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாத இந்நடவடிக்கையானது கொன்று குவிக்கப்பட்டுவரும் காசா மக்களுக்குத் துளியளவும் நன்மை பயக்கக்கூடியதல்ல. மாறாக, இஸ்ரேல் மீதான மக்கள் எதிர்ப்பிற்கு வடிகாலாக மேற்கொள்ளப்படுவதே ஆகும்.

அதேபோல், ஐ.நா. மன்றத்தில் அங்கம் வகிக்கும் 81 சதவிகித நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள போதிலும், காசாவில் இஸ்ரேலின் இன அழிப்பு இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே எதார்த்த நிலையாக உள்ளது. இத்தனை ஆண்டுகளாக பாலஸ்தீனத்தை பெயரளவிற்குக் கூட அங்கீகரிக்காத, அதன் ஆக்கிரமிப்பிற்குத் துணைபோன அமெரிக்க ஆதரவு நாடுகளே தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பாகப் பேசி வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டில் காசாவில் நிகழ்த்தப்பட்டு வரும் இன அழிப்புப் போரானது எந்தவொரு சட்ட விதிகளையும் ஐ.நா-வின் தீர்மானங்களையும் மதிக்காமல்தான் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 9 அன்று அமெரிக்கா சார்பில் ஹமாசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்த கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதன் மூலம், இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தையை வெளிப்படையாகவே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது இஸ்ரேல் அரசு. அப்படியிருக்கையில், பாலஸ்தீனத்தை தற்போது தனிநாடாக அங்கீகரிப்பது எந்தவகையிலும் காசா மீதான போரை நிறுவுவதற்கான நடவடிக்கையல்ல.

எனவே, “இனவெறி இஸ்ரேலே, காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து! இனப்படுகொலையை நிறுத்து!”, “இஸ்ரேலுடனான பொருளாதார உறவுகள் துண்டித்திடு! ஆயுத ஏற்றுமதி செய்யாதே”, “பாசிஸ்ட் நெதன்யாகுவையும் டிரம்பையும் போர்க்குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை வழங்கு” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இஸ்ரேலுக்கு எதிராகவும் அந்தந்த நாட்டு ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் உலகம் முழுவதும் மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதே தீர்வை நோக்கி நகர்த்தும்.


இன்குலாப்

குறிப்பு: வினவு இணையதளத்தின் சமூக வலைத்தளப் பக்கங்களில் செப்டம்பர் 22 அன்று உலக நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டுமென பதிவு வெளியிடப்பட்டது. இது ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல் நிகழ்ச்சிநிரலுக்குத் துணைபோகும் கருத்தாகும். அரசியல் நிலைமைகளை முழுமையாகப் பரிசீலிக்காமல் இத்தகைய பதிவை வெளியிட்டதற்காக சுயவிமர்சனம் ஏற்கிறோம்.

– வினவு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க