அக்டோபர் 09 – சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் பிறந்தநாள்!
அக்டோபர் 12 – அரங்கக்கூட்டம்
நாள்: 12-10-2025 (ஞாயிறு) | நேரம்: மாலை 5 மணி
இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
இமானுவேல் சேகரன்… தமிழ்நாட்டில் இந்த பெயரை விட்டுவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை, சாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றை ஒருபோதும் எழுதி விட முடியாது. பள்ளர், பறையர், அருந்ததியர் மற்றும் நாடார் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்த இமானுவேல் சேகரன், அம்மக்கள் மீது திணிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து களமாடினார்.
தலித் மக்கள் மீதான சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் தொடர்ச்சியாகவும், பெருமாள் பீட்டர் உடன் இணைந்தும், தலித் பேந்தர்ஸ் மலைச்சாமியின் முன்னோடியாகவும் போராடிய இமானுவேல் சேகரன் சமத்துவமான சமூகம் அமைக்கும் போராட்டக் களத்தில் ‘வெட்டருவா, வேல் கம்புக்கு’ தன் இன்னுயிரை பலி கொடுத்து சாதி ஒழிப்பு தியாகியானார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி அன்று, பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசௌந்தரி ஆகியோரின் மூத்த மகனாக பிறந்தார் இமானுவேல் சேகரன்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொட்டாலே தீட்டு என்ற வகையில் தேநீர் கடைகளில் இரட்டைக்குவளை முறை, பொதுக் கிணற்றில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க கட்டுப்பாடுகள் உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகள் மிகத் தீவிரமாக நிலவின. இவற்றைக் கண்டு உள்ளம் குமுறிய இமானுவேல் சேகரன் தனது இராணுவப் பணியை துறந்தார். சமூகப் போராட்டங்களில் நேரடியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
படிக்கும் வயதிலேயே “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர். மனுதர்மத்தை மீண்டும் நிலைநாட்டும் வகையில் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தினார். அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று இராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி இயக்க மாநாட்டினை நடத்தினார். இந்த மாநாட்டில் சாதிகளுக்குள் இணக்கம், விதவை மறுமணம் உள்ளிட்ட ஏழு தீர்மானங்களை நிறைவேற்றினார். சாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்தார்.
மரத்தடிகளிலும், தோப்புகளிலும், வயல்வெளியிலும் மக்களைச் சந்தித்து சாதி ஒழிப்பு குறித்து விளக்கி ஒருங்கிணைத்தார். தீண்டாமைக் கொடுமைகள் நிலவும் ஊர்களுக்குச் சென்று எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இன்று மட்டுமல்ல, அன்றே தலித் மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கும் கொடுமை நிலவியது. பார்த்திபனூர் அருகிலுள்ள புதுக்குடி கிராமத்தில் அதற்கு எதிராக போராடி காரணமானவர்களை கைது செய்ய வைத்தார். சாதியக் கொடுமைகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்களை நடத்தினார். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார்.
1954-ஆம் ஆண்டில் இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாட்டை அருப்புக்கோட்டையில் நடத்தினார். 1956-ஆம் ஆண்டில் அண்ணல் அம்பேத்கரின் மறைவையொட்டி மாபெரும் இரங்கல் கூட்டத்தை நடத்தினார். சிறு வணிகர்களிடம் மிரட்டி மாமுல் வாங்கியவர்களை மக்களைத் திரட்டி முறியடித்தார். இதன் மூலம் வணிகர் சங்கத் தலைவர் பதவி அவரை தேடி வந்தது. மேற்கண்ட நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஒப்பற்ற தலைவராக உருவெடுத்தார்.
“நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கு அடிமை யாரும் இல்லை” என்ற அம்பேத்கரின் சமத்துவத்தை போதிக்கும் வார்த்தைகளுக்கு நேர் நிகர் பொருளாக வாழ்ந்து காட்டினார்.
இமானுவேல் சேகரன் மறைந்து முக்கால் நூற்றாண்டு காலம் கடந்த இன்றைய சூழலிலும் தென்தமிழ்நாட்டில் சாதிக் கொடுமைகள் தொடரவே செய்கின்றன.
1990-களில் நடத்தப்பட்ட கொடியங்குளம் கலவரத்தில் தலித் மக்கள் வீடுகள், உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சான்றிதழ்கள், பாஸ்போர்டுகள் போலீசால் தீக்கிரையாக்கப்பட்டன. பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அப்பாவி தலித் மக்கள் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றதற்காக படுகொலை செய்யப்பட்டனர் மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர்.
உத்தபுரத்தில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர், வேங்கை வயலில் குடிக்கும் தண்ணீரில் மலம் கலக்கப்பட்டது. நாங்குநேரி மாணவன் சின்னதுரையின் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல் உள்ளிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீதான சாதிவெறித் தாக்குதல்கள் சமூகத்தில் பேரதிர்ச்சியையும், தலித் மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும் ஏற்படுத்துகிறது.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ‘குற்றத்திற்காக’ கொல்லப்பட்ட கண்ணகி – முருகேசன். வாயை மூடிக் கொண்டதால் அவர்கள் காதுகளிலும், மூக்கிலும் ஊற்றப்பட்ட விசம் இன்றும் நம் இதயத்தின் அடிவரை இறங்குகிறது. கோகுல்ராஜை கொலை செய்த கொலைக் குற்றவாளி யுவராஜ் இன்றும் கொண்டாடப்படும் அவலம், சாதி மறுத்து திருமணம் செய்து கொண்ட காரணத்தாலேயே ‘தற்கொலை’ என்று மாற்றப்பட்ட இளவரசனின் மரணம், முன்விரோதம் ஏதுமின்றி பள்ளர் சாதியை சேர்ந்தவர் என்பதாலேயே கொல்லப்பட்ட கீழநத்தம் ராஜாமணி, காதலைத் தவிர எந்த குற்றமும் செய்யாததால் கொல்லப்பட்ட திசையன்விளை முத்தையா முதல் கவின் வரை… சாதியின் பெயரால் இன்றும் தொடர்கிறது எண்ணற்ற ஆணவப் படுகொலைகள்.
ஒன்றியத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர், தென் தமிழ்நாட்டில் ஆதிக்கச் சாதி சங்கங்களுக்கு பின்னால் இருந்து இந்த பாசிச கும்பல் தலித் மக்களுக்கு எதிராக சாதி வெறியைத் தூண்டி விடுகிறது. மாநிலங்களின் தன்மைக்கேற்ப மத, இன வேறுபாடுகளைத் தூண்டி மக்களை பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரக் கும்பல், தமிழ்நாட்டில் சாதிய வேறுபாட்டைத் தூண்டி மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. அதுதான் இன்றைக்கு சாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு காரணமாகும்.
உலகமயத்தின் விளைவாக விவசாய உற்பத்தி அழிந்து வருவதன் பின்னணியில், கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் நகரங்களை நோக்கி குடி பெயர்ந்ததால் குறைந்து வரும் சாதி ஆதிக்கத்தை, ஆதிக்கச் சாதி சங்கங்கள் மீண்டும் தூண்டிவிட்டு மக்களை பிளவுபடுத்துகின்றன. இந்த சாதிச் சங்கங்கள் கார்ப்பரேட் கொள்ளைக்கு மறைமுகமாக துணை புரிகின்றன.
சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும், சாதி ஒழிப்புக்காகவும் போராடும் நாம் ஆதிக்க சாதிச் சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல்களை தடை செய்யவும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக போராடவும் உறுதியேற்போம். அந்தவகையில் இமானுவேல் சேகரன் போராட்ட மரபை உயர்த்திப் பிடிப்போம்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்.
93853 53605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram