தண்டகாரண்யம் – எழுப்பும் கேள்விகளும், எழுப்பப்பட வேண்டிய விவாதங்களும்

கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் மீதான ஆபரேசன் ககர் என்ற அரச பயங்கரவாதம் அரங்கேறிவரும் இச்சூழலில் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

0

டத்தின் முதல் காட்சியில் வரும் வசனத்தில் துணை ராணுவப் படையில் பயிற்சியில் இருக்கும் சிப்பாய்களின் முன்பு பின்வருமாறு ராணுவ அதிகாரி பேசுகிறார். “நம்ம ISGS நாட்டுக்குப் பெரிய சேவைகளைச் செய்து வந்தாலும், இம்மண்ணில் புதைந்துள்ள தங்கம், இரும்பு, பாக்சைட், நிலக்கரி போன்ற கனிம வளங்களை நம்ம நாட்டு முதலாளிகள் மட்டுமல்லாது, உலக நாட்டு முதலாளிகளும் இங்கு தொழில் செய்ய வருவதற்கு (அதாவது, கொள்ளையடிப்பதற்கு) பெரும் தடையாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்து வரும் நக்சலைட்டுகளை விரட்டியடிக்கும் பணியில் நம்ம ISGS முதன்மையானது. நம்ம ஜார்க்கண்ட் மட்டுமல்லாமல், ஆந்திரா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிலடங்கிய தண்டகாரண்ய காடுகள் முழுக்க நக்சலைட்டுகள் பரவியுள்ளனர். இவர்களை அழிக்கும் பணியில் நீங்கள் எல்லோரும் இணையறது உங்களுக்கும் பெருமை. நம்ம நாட்டுக்கும் பெருமை” என்று அவர் பேசுகிறார்.

இந்த முதல் காட்சியிலேயே அரசு கார்ப்பரேட்டுகளின் சேவகன் என்பதையும், நக்சலைட்டுகள் எதற்காக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையும் நேரடியாக அம்பலப்படுத்துகிறார் இயக்குநர் அதியன் ஆதிரை. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பான படைப்புதான் என்பதை ஒளிவுமறைவின்றி தனது முதல் காட்சியிலேயே கடத்தும் இயக்குநரின் செயல் பாராட்டுக்குரியது.

தண்டகாரண்யம் படம் நக்சலைட்டுகளை ஒழிப்பது என்ற பெயரால் நிகழ்த்தப்படும் போலி மோதல் படுகொலைகளைப் பற்றி கூர்மையாக விமர்சனப்படுத்துகிறது. நக்சல்பாரிகளை கைது செய்து பின்பு சுட்டுக் கொல்லும் போலி மோதல் கொலைகளை நாம் அறிவோம். ஆனால், இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து, அப்பாவி இளைஞர்களை ராணுவ ஆசை காட்டி அழைத்து வந்து, அவர்களை சரணடைந்த நக்சலைட்டுகள் என்றும், அவர்களுக்கு மறுவாழ்வு தருகிறோம் என்று கூறி, அவர்களை ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தி, அதன் பின்பு அவர்களை போலி மோதல் படுகொலை செய்வதை இத்திரைப்படம் பதிவு செய்கிறது. அரசின் நயவஞ்சகத்தையும், அது செய்யும் பயங்கரவாதப் படுகொலைகளையும் காட்சிகளின் மூலம் மக்களுக்குக் கடத்துகிறார் இயக்குநர்.

அப்படி இராணுவத்தில் வேலை கிடைக்கும் என்று ஏமாற்றப்பட்டு, நக்சலைட் மறுவாழ்வு மையம் என்ற பெயரில் நடக்கும் சட்ட விரோத கேம்ப்-பிற்கு அழைத்து செல்லப்படுபவர்களில் ஒருவர்தான் கதையின் முன்னிலை கதாபாத்திரமான முருகன் (கலையரசன்).


படிக்க: ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!


கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி மலைக்கிராமப் பகுதியில் உள்ள தொழுவபெட்ட கிராமத்திலிருந்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற இலட்சியத்தில் உள்ள பழங்குடி இளைஞர் முருகன். அந்தக் கனவு நிறைவேற வேண்டுமென்பதற்காக அங்கு வனத்துறையில் ரேஞ்சருக்கு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

முருகனின் அண்ணன் சடையன் (தினேஷ்). வனத்துறை தன் மக்களை விதிமுறைகள் என்ற பெயரில் ஒடுக்குவதைக் கேள்வி எழுப்புபவராக, அவர்களைப் பாதுகாப்பவராக இருக்கிறார்.

“இராவோடு இராவா கோட்டையில் உக்காந்துகினு புதுப்புது திட்டம் போடுவீங்க, தூங்கி எழுந்துப் பாத்தா நாங்க குற்றவாளியா, இதான உங்க நியாயம்” என்று போலீசு அதிகாரியிடம் சடையன் எழுப்பும் கேள்வி, கார்ப்பரேட்டுகளின் இயற்கை வளச் சூறையாடலுக்காக வனப் பாதுகாப்பு சட்டங்கள் திருத்தப்படுவதையும், பழங்குடி மக்களும், நக்சல்பாரிகளும் சமூக விரோதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு அன்று ஆபரேசன் க்ரீன் ஹன்ட் என்றும், இன்று ஆபரேசன் ககர் என்ற பெயரிலும் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதையும் அம்பலப்படுத்தும் கேள்வியாக நாம் உணர வேண்டியுள்ளது.

வனத்துறை போலீசின் பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறை, வனப்பகுதியில் கஞ்சா பயிரிடும் வியாபாரிக்கு ஆதரவாக வனத்துறை செயல்படுவது, இதனை சடையன் அம்பலப்படுத்துவது, இதனால் போலீசின் வன்முறையை எதிர்கொள்வது, பழங்குடி மக்களின் நிலங்களைப் பறிப்பதற்காகத் துடிக்கும் பண்ணையார் ஒருவனுக்கு போலீசு ஆதரவாகச் செயல்படுவது என்பதன் ஊடாக தொழுவபெட்ட கிராமப் பழங்குடிகளின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்துவதன் மூலம் உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது இத்திரைப்படம்.

வனத்துறையின் சமூக விரோதிகளுக்கு ஆதரவான நடவடிக்கையை வெளிக் கொண்டு வந்ததில் சடையனோடு சேர்ந்து முருகனும் செயல்பட்டது தெரிந்து, முருகனை வேலையை விட்டு தூக்குகிறார்கள். அப்போது முருகன் உடன் பணியாற்றும் ஒரு போலீசு “என்னதான் அண்ணன் தம்பியா இருந்தாலும், டிபார்ட்மெண்ட் விசயத்த வெளில சொல்லக் கூடாதுனு உனக்குத் தெரியாதா? இருக்குற வேலைய காப்பாத்திக்க தெரியல” என்று முருகனுக்கு அறிவுரை கூறுகிறார்.

அதிகார வர்க்கத்தின் சமூக விரோதச் செயல்பாடுகளை அங்கிருப்பவர்கள் வெளியில் அம்பலப்படுத்தினால், அப்படிப்பட்டவர்கள் அங்கு நீடிக்க முடியாது என்பதற்கு இந்த வசனம் ஒரு சாட்சி. எத்தனையோ சகாயம்கள் அதற்கு நடைமுறை சாட்சி.


படிக்க: ஆபரேஷன் ககர்:  மாவோயிச அழிப்பா? இயற்கை வள சுரண்டலா?


உளவுத்துறை அதிகாரி ஒருவனின் நயவஞ்சகத்தால் இராணுவத்தில் வேலைக்கு சேரும் ஆசையை ஏற்படுத்திக் கொள்கிறார் முருகன். அதற்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறி ஏமாற்றுகிறான் அந்த உளவுத்துறை அதிகாரி. முருகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நிலத்தை விற்கிறார்கள் அவனது அப்பாவும், அண்ணன் சடையனும்.

இன்று எல்லாத் துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டு, அரசு வேலை என்பதே சுருங்கிப் போய் கானல்நீராக மாறியிருக்கும் சூழலில், அரசு வேலைவாய்ப்பு என்பது அதிகாரிகளின் கொழுத்த ஊழலை திருப்திப்படுத்திப் படுத்தினால்தான் சாத்தியமாகும் என்ற நிலையில், தன் பிள்ளைகளை எப்படியாவது அரசு வேலைக்குச் சேர்த்து விட வேண்டும் என்பதற்காகத் துயருறும் ஆயிரக்கணக்கான பெற்றோரின் அவலம் கண்முன்னே வந்து செல்கிறது.

சடையன் ஏன் நக்சல்பாரியாக மாறுகிறான், நக்சல்பாரிகள் யாருக்காக போராடுகிறார்கள், அரசுக்கும் மக்களுக்குமான உறவு, கார்ப்பரேட்டுகளுக்கும் அரசுக்குமான உறவு ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதில் இன்னும் அழுத்தம் இருந்திருக்க வேண்டும் என்பது போன்ற குறைகள் படத்தில் உள்ளதையும் உணர முடிகிறது.

அதைத் தாண்டி, நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் நடத்தப்படும் போலி மோதல் படுகொலைகள் பற்றி அழுத்தமாக இத்திரைப்படம் வெளிக்கொணர்ந்து அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியுள்ளதும், அரசு மக்களுக்கானதாக இல்லை என்பதை பல்வேறு காட்சிகளின் மூலம், வசனங்களின் மூலம் நிறுவ இயக்குநர் எடுத்துக் கொண்ட முயற்சியும் முக்கியமானது.

கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அரசின் கோர முகத்தை பார்வையாளர்களின் மனதில் இன்னும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்க முடியும்.

கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் மீதான ஆபரேசன் ககர் என்ற அரச பயங்கரவாதம் அரங்கேறிவரும் இச்சூழலில் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோது, தண்டகாரண்யம் திரைப்படம் முடியும் இடத்திலிருந்து, நாம் தீவிரமான விவாதத்தைத் தொடங்க வேண்டியுள்ளது. அரசே சட்டவிரோதமாகச் செயல்படும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் சட்ட வரம்பிற்குள் மட்டும் நின்று போலி மோதல் படுகொலைகளையோ, காடுகளும், மலைகளும் அழிக்கப்படுவதையோ, பழங்குடிகள் ஒடுக்கப்படுவதையோ ஒருபோதும் தடுக்க முடியாது.

எனவே, அரசின் கார்ப்பரேட் கொள்கைகளுக்கு மாற்றாக, நாம் மாற்று அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்து மக்கள் எழுச்சியைக் கட்டியமைத்தே ஆக வேண்டியுள்ளது.

அப்படிப்பட்ட மக்கள் எழுச்சியின் ஊடாக, உண்மையில் மக்களைப் பாதுகாக்கும், மக்கள் அதிகாரத்தை நிறுவுகின்ற மாற்றுக் கட்டமைப்பை, ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை, நிறுவுவது குறித்தான விவாதத்தைத் தீவிரமாக முன்னெடுப்பது என்பதே தண்டகாரண்யம் முடியும் இடத்திலிருந்து நாம் தொடங்க வேண்டியதாகும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க