அவை வெறும் கேமராக்கள் அல்ல!!! | கவிதை

காசாவின் துயரத்தை உலகின் மனசாட்சியில் பதிய வைத்த போது, இஸ்ரேலால் கொல்லப்பட்ட 270 பத்திரிக்கையாளர்களின் தியாகத்தால் சுடர்விடும் ஒளிக்கீற்றுகள்!

அவை வெறும் கேமராக்கள் அல்ல!!!

ரலாற்று இருள் பெருங்கடலில்
காசாவிலிருந்து
உண்மையின் தீபம் ஏந்தி
மூச்சிரைக்க நீந்தி வந்தது
ஒரு கேமரா!

கனத்த இதயத்துடன்
கரை ஒதுங்கிய
கேமராவின் கண்கள்
மறைக்கப்பட்டிருந்தன;
அடுக்கடுக்காய் உறைந்து,
காய்ந்து போன
லட்சக்கணக்கான மக்களின்
இரத்தக் கறைகளால்!

அதன் மெமரி கார்டில்
பதிவாகியிருந்தவை,
வரலாற்றுப் பக்கங்களில்
குருதியால் எழுதப்பட்ட
போரின் பதிவுகளில்
இதுவரைக் காணாத
கொடூர அத்தியாயம்!

அக்கொடூர பக்கங்கள் யாவும்
தினந்தோறும்
பல்லாயிரக்கணக்கான
பிஞ்சுக் குழந்தைகளின்
ரத்தத்தால் நனைத்தெடுக்கப்பட்டு,
அடர் சிவப்பு நிறத்தால்
வரலாற்றைக்
குருதி நெடியேற்றிக் கொண்டிருக்கின்றன!

அக்குருதிப் பதிவுகளை
மனசாட்சியின் கண்கொண்டு
உணர்ந்தோருக்குப் புரியும்,
அவை வெறும்
கேமராக்கள் அல்ல;

ரத்தம் தோய்ந்த
பாலஸ்தீன மண்ணில்,
இனவெறி பிடித்த இஸ்ரேலால்
கொத்துக்கொத்தாய் கொல்லப்படும்
பிஞ்சுக் குழந்தைகளின்
அழுகுரல்களால்,
உலகின் மறதியை
உடைத்தெறிந்த ஒளிக்கீற்றுகள்.

ஆம், வரலாற்றின்
மிகக் கொடூரமான போர்க்களத்தில்,
மரணத்தின் நிழலில் நின்று,
மக்களுக்கும் மனசாட்சிக்கும்
நேர்மையாய்
காசாவின் துயரத்தை
உலகின் மனசாட்சியில்
பதிய வைத்த போது,
இஸ்ரேலால் கொல்லப்பட்ட
270 பத்திரிக்கையாளர்களின்
தியாகத்தால் சுடர்விடும்
ஒளிக்கீற்றுகள்!

அவை
உலகெங்கும்
உழைக்கும் மக்களின்
இதயங்களை
ஒற்றைக் குரலாக ஒன்றிணைக்கட்டும்;

அவர்களின் அழைப்பு,
ஒடுக்கப்பட்டவர்களின் அழுகையை
உலகின் மனசாட்சியில்
எதிரொலிக்கச் செய்யட்டும்;

நம்முடைய ஒற்றுமை,
பாலஸ்தீன
விடுதலைப் பயணத்தில்
ஒளிரும் விடியலாய் மலரட்டும்!


மேக்நாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க