கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் – 27 அன்று நடந்த விஜய் பிரச்சாரத்தில் மக்கள் உயிரிழந்தது தொடர்பாக, கோவை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் தலைமையில் கழக தோழர்கள் செப்டம்பர் – 28 இரவு 7.30 மணியளவில் கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்; சம்பவம் குறித்தும் கேட்டறிந்தனர். அடுத்த நாள் காலையில் வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் சென்று சம்பவம் நடந்த இடத்தை கள ஆய்வு செய்தனர்; சம்பவம் குறித்து மக்களிடமும் கேட்டறிந்தனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்த தகவல்கள்:
1) பாதிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள்:
இவர்கள் மூன்று பேரும் விஜய் ரசிகர்கள் இல்லை.
அவர்களிடம், இந்த சம்பவம் உங்களுக்கு எப்படி நடந்தது என்று கேட்டபோது, ”எங்கள் எல்லோருக்கும் வீட்டில் பிரச்சினைகள் இருப்பதால் நாங்கள் வீட்டை விட்டு தனியாக அறை எடுத்துத் தங்கி உள்ளோம். நாங்கள் வேலைக்குச் சென்று திரும்பியபோது கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் விஜய்யை வழியில் பார்த்தோம். இருப்பினும் நாங்கள் கூட்டம் நடக்கும் வழியாகத்தான் எங்களது அறைக்குச் செல்ல வேண்டும். போகும் வழியில் கூட்டம் நடக்கும் இடத்தில் விஜயை பார்க்க வேண்டும் என்று ஆம்புலன்ஸ் டிரைவர் அவர் மட்டும் போனார். நாங்கள் இரண்டு பேரும் வெளியிலே இருந்தோம்.
அவர் சென்று அதிக நேரமானதால், கால் செய்தும் எடுக்காததால், உள்ளே சென்று பார்த்தோம். அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்திருந்தார். இதைப் பார்த்து அவரை நாங்கள் தோள் மேல் தூக்கிக் கொண்டு, ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து, ஆம்புலன்ஸில் கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தோம். அப்போது எங்களுக்கு மட்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நாங்கள் தான் முதலாவதாக அட்மிட் ஆகியிருந்தோம். நாங்கள் சேர்ந்த பின்பு அடுத்தடுத்த ஆம்புலன்ஸில் பாதிக்கப்பட்ட மக்கள் வந்தனர்.
அதுவரையில் நாங்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைத்திருந்தோம் மற்றவர்கள் பாதிப்படைந்தது எங்களுக்குத் தெரியாது” என்றனர்.
விஜய் பிரச்சார வாகனம் கூட்டத்தின் உள்ளே நுழையும் போதே தனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக ஆம்புலன்ஸ் டிரைவர் கூறினார்.
2) 40 வயதைக் கடந்த ஒருவர்:
அவர் வலிமை வாய்ந்த நபராக இருந்தார். அவரிடம் கேட்டதில்,
”என்னால் கீழே விழுந்தவர்களை தூக்க முடியாத அளவுக்குக் கூட்டம் இருந்தது. அந்த கூட்டத்தில் எனக்கு காற்றோட்டம் கிடைக்காததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கீழே விழுந்து விட்டேன். என்னை பலர் மிதிக்கவும் செய்தனர். அதிலிருந்து நான் மெதுவாக முயற்சி செய்து கூட்டத்திற்கு வெளியே வந்து விட்டேன். அப்போது தான் காற்றோட்டம் கிடைத்தது. நானே எனது வண்டியை எடுத்துக் கொண்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். நான் முயற்சி செய்து வெளியில் வராமல் இருந்திருந்தால் நானும் அக்கூட்டத்தில் மிதிபட்டு இறந்திருப்பேன் என்றார்.
3) 16 அல்லது 17 வயதுள்ள முஸ்லீம் பெண்:
மிகவும் ஒல்லியாக வலிமை இல்லாமல் இருந்தார். அவரிடம் கேட்டதில்,
”எனது அம்மா, அண்ணனுடன் நான் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். கூட்டத்தில் அருகாமையில் விஜயைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அம்மாவையும் அண்ணனையும் விட்டுவிட்டு நான் மட்டும் உள்ளே சென்றேன். சென்றவுடன் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கீழே விழுந்துவிட்டேன். எனக்கு மருத்துவமனை வந்து தான் நினைவே (conscious) வந்தது.”
இவரைக் கூட்டத்தில் உள்ளவர்கள் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்தவர்கள் அவரது வீட்டுக்கு ஃபோன் செய்து சொன்ன பின்னர்தான் வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கரூர் அரசு மருத்துவமனைக்குத் தன்னை அழைத்து வந்தனர் என்றார்.
சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் விசாரித்ததிலிருந்து கிடைத்த தகவல்கள்:
4) மைக் செட் கடைக்காரர்:
விஜயை இப்பொழுது இருக்கும் அரசியல் கட்சியினருக்கு மாற்றாக இருப்பார் என கருதுபவர்.
i) நீங்களும் கூட்டத்தில் இருந்தீர்களா?
விஜய் வரும் அரை மணி நேரத்துக்கு முன்பாக எனது கடையைப் பூட்டி விட்டு கடை முன் நின்று இருந்தேன்.
ii) பிரச்சார இடம் பற்றிக் கேட்டதற்கு..
விஜய் தரப்பில் கேட்டிருந்த இரண்டு இடங்களும் இதைவிடக் குறுகிய இடம் தான். அந்த இரண்டு இடத்திற்கும் வேலுச்சாமிபுரம் இடம் பரவாயில்லை.
அ.தி.மு.க கட்சியின் சார்பில் இங்கு தான் பிரச்சாரம் மேற்கொண்டனர். அவர்கள் 10,000 – 15,000 வரையில் வந்திருப்பார்கள். அவர்களுக்கு இந்த இடம் சரியாக இருந்தது.
வேலுச்சாமிபுரம் இடம் இந்த கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. இதைவிட கரூரில் பறந்து விரிந்த இடங்கள் உள்ளன. அங்கு கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும்.
விஜயின் தரப்பில் இருந்து இடத்தை ஆய்வு செய்ய மேலிடத்து நிர்வாகிகள் யாரும் வரவில்லை. உள்ளூரிலுள்ள நிர்வாகிகள் தான் வந்து ஆய்வு செய்தனர். இது தவறு. முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்த்ததை போல யாரும் இங்கு வந்து ஆய்வு செய்யவில்லை.
iii) கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது? மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள்?
விஜய் பிரச்சார வாகனம் கூட்டத்தின் உள்ளே வரும்போது மக்களை பின் தள்ளச் சொன்னார்கள். அப்போது பின் தள்ளும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் பின்னோக்கி தள்ளும்போது சாலையோரம் இருந்த சாக்கடைக் கால்வாயில் விழுந்தும் மக்கள் பாதிப்படைந்தனர்.
சாலையின் இரண்டு பக்கமும் கடைகள் வரிசையாக இருந்ததால் மக்கள் இந்த சாலையை விட்டு எங்கும் செல்ல முடியவில்லை.
காலையிலேயே பிரச்சாரம் செய்யும் சாலையை காவல்துறையினர் வண்டிகள் எதுவும் வராமல் அடைத்துவிட்டனர். மக்கள் காலை 8.30 மணியிலிருந்தே இங்கு வர தொடங்கி விட்டனர். மதியம் 12 மணியளவில் பாதி மக்கள் வந்துவிட்டனர். அவர்கள் இங்கும் அங்குமாக கடைகளுக்குச் சென்றும் காத்துக் கொண்டும் இருந்தனர். அவர்களுக்கு அப்பொழுது த.வெ.க கட்சியின் சார்பில் குறைந்தளவே தண்ணீர் ஏற்பாடு செய்திருந்தனர். சரியாக விஜய் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பு கூட்டம் அதிகளவில் கூடிவிட்டது. அப்பொழுது அவர்களுக்கு தண்ணீர் தருவதற்குக் கூட யாரும் இல்லை.
தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ததால் மக்கள் விஜய் வந்து விட்டது அறிந்து அதிகளவில் வரத் தொடங்கினர்.
வெளியூர்களில் இருந்தும் அதிக அளவில் மக்கள் வந்திருந்தனர்.
மதிய நேரத்தில் விஐய் வந்திருந்தால் கூட்டம் இருந்திருக்காது. விஜய் வருவதற்கு கால தாமதமானதால் அதிக அளவில் கூட்டம் கூடி விட்டனர்.
கூட்டம் அதிக அளவில் இருப்பதை அறிந்து மக்கள் கூட்டத்தின் சாலையின் தொடக்கத்திலே வாகனத்தை நிறுத்தி விஜய் பேசி இருக்க வேண்டும் அல்லது கூட்டத்தை ரத்து செய்திருக்க வேண்டும்.
iv) கடைகள் திறந்திருந்ததா?
டீக்கடை மற்றும் ஒரே ஒரு ஓட்டல் மட்டும் இருந்தது மற்ற எல்லா கடைகளும் விஜய் வரும் அரை மணி நேரத்திற்கு முன்பாக அடைத்து விட்டனர்.
v) விஜய் கட்சி சார்பில் மக்களை ஒழுங்கு படுத்துவதற்கு கட்சிக்காரர்கள் இருந்தார்களா?
காலையில் ஒரு இருபது பேருக்கு அடையாள அட்டை போட்டுவிட்டு அவர்களுக்கு வழிகாட்டுதல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கூட்டங்கள் கூடும் போது எங்கே இருந்தார்கள் என்றே தெரியவில்லை.
vi) மின்சாரம் தடை செய்யப்பட்டதா?
ஜென்ரேட்டர் சில நேரங்களில் வேலை செய்யாமல் போக்கஸ் லைட் ஆப்பானது. விஜய் மைக்கில் பேசியதும் சில நேரங்களில் விட்டு விட்டுக் கேட்டது.
vii) போலீஸ் பாதுகாப்பு இருந்ததா?
காவல்துறையினர் கூட்டங்கள் அதிக அளவில் கூடுவதற்கு முன்பு கூட்டத்தின் உள்ளே அங்கு அங்கு இருந்தனர். ஆனால் அதிக அளவில் கூட்டம் கூடிய பின்னர் காவல் துறையினர் அனைவரும் கூட்டத்திற்கு வெளியே போய்விட்டார்கள். மக்கள் மயங்கி விழும்போது மட்டும் உள்ளே வந்து காவல்துறையினர் உதவி செய்து கொண்டிருந்தனர்.
மக்கள் பாதிப்படையும்போது காவல் துறையினர் பாதுகாக்காமல், இப்பொழுது அவர்களது செருப்புக்கு காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Viii) விஜய் மீது செருப்பு வீசியதெல்லாம் பார்த்தீர்களா?
கூட்டத்தில் எதுவும் அப்படி தெரியவில்லை. தொலைக்காட்சியில்தான் நான் பார்த்து அறிந்து கொண்டேன்.
5) டீக்கடையில் இரண்டு பேரிடம் கேட்டது:
ix) கூட்ட நெரிசல் ஏன் ஏற்பட்டது?
”விஜய் வரும்போது அவரைப் பின்தொடர்ந்து பலர் நாமக்கல்லில் இருந்து வந்தனர். விஜய் நின்று பேசுவதற்கு குறிக்கப்பட்ட இடத்திற்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் சேரத் தொடங்கியதில் இருந்து விஜய் தனது முகத்தை மக்களுக்குக் காட்டாததால் அங்கிருந்த மக்கள் விஜயைப் பார்ப்பதற்கு அவரின் பிரச்சாரப் பேருந்து நிற்கும் இடத்தை மையப்படுத்தி அதை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.
இந்த இடத்தைத் தவிர கரூரில் பல இடங்கள் உள்ளது அங்கு கூட்டத்தை வைத்து இருந்தால் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்காது.
காவல்துறையினர் கூட்டங்கள் அதிக அளவில் வரும்போது அங்கு தடுப்புகள் ஏற்படுத்தி தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்” என்றனர்.
***
மக்களிடம் விசாரித்ததிலிருந்து விஜய் கூட்டத்தில் நுழையும் போதே மக்கள் மயக்கம் அடையத் தொடங்கிவிட்டதும், கீழே விழுந்தவர்களைத் தூக்க முடியாத அளவிற்குக் கூட்ட நெரிசல் இருந்ததையும் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு விஜயைப் பின்தொடர்ந்து பலர் நாமக்கல்லிலிருந்து வந்து கூட்டத்தில் சேர்ந்தது, பிரச்சாரப் பேருந்து மக்கள் கூட்டத்தில் நுழைக்கின்ற போது மக்களை பின்னுக்குத் தள்ளியது, விஜயைப் பார்க்க வேண்டுமென அவர் நின்றிருக்கும் இடத்தை மையப்படுத்தி அங்கிருந்த மக்கள் பலர் முன்னேறியது போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளதென்பதையும் அறியமுடிகிறது.
இவற்றிலிருந்து, விஜய் கூட்டத்திற்குத் தாமதமாக வந்ததும், நாமக்கல்லில் இருந்து தன்னை பின் தொடர்ந்தவர்களை முறைப்படுத்தித் தடுத்து நிறுத்தாததும் பிரச்சாரத்தில் விஜய் நின்று பேசுவதற்குக் குறிக்கப்பட்ட இடத்திற்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் சேரத் தொடங்கியதிலிருந்து தனது முகத்தை மக்களுக்கு வெளியில் காட்டினால் மக்கள் விஜயைப் பார்த்துவிட்டுக் கலைந்து சென்று விடுவார்கள் என்பதற்காக முகத்தைக் காட்டாமல் மறைத்ததும் தனக்கு அதிகளவில் கூட்டம் கூட வேண்டும் என்பதற்காக விஜய் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளார் என்பது அம்பலப்பட்டுள்ளது. நாம் விசாரித்ததில் பாதிக்கப்பட்டவர்களிலும் கூட்டத்திற்கு வந்தவர்களில் பெரும்பான்மையினரும் விஜய் கட்சிக்காரர்கள் அல்ல, விஜயை பார்க்க வேண்டும் என்பதற்காக வந்தவர்களே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மக்களுக்கு முறையாக தண்ணீர், உணவு ஏற்பாடுகளைச் செய்யாமல் வெயிலில் காக்க வைத்தது, மக்களை ஒழுங்கு படுத்துவதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் த.வெ.க. கட்சியினர் சார்பில் தொண்டர் படைகளை அமைக்காதது, பிரச்சாரம் செய்கின்ற இடத்தை முறையாக ஆய்வு செய்து தேர்ந்தெடுக்காதது மற்றும் கூட்டம் அதிகளவில் கூடி அசாதாரணமான சூழல் நிலவிய போதும் கூட்டம் நடத்தியது போன்றவை விஜய்க்கு மக்கள் மீது துளியும் அக்கறையில்லை என்பதைப் பறைசாற்றுகிறது.
இறந்து போனவர்களிலும் காயம் பட்டவர்களிலும் கணிசமானவர்களாக தலித் மக்கள் இருக்கிறார்கள். இயல்பாகவே ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட சமூகம் விடுதலையை நேசிப்பதற்காக முன்னணி வரிசையில் நிற்கும். அதுபோல யார் கட்சி தொடங்கினாலும் அவர்கள் தங்களுக்கானவர்களாக இருப்பார்களா என்று எவ்வித எதிர்பார்ப்புமின்றி முன் வரிசையில் நிற்பவர்கள் பட்டியலின மக்களே. அந்த வகையில் விஜய்யை பார்ப்பதற்கும் பலர் வந்திருக்கிறார்கள். இறந்து போனவர்களில் கணிசமானவர்கள் பட்டியலின மக்களே.
மற்றொன்று, மக்கள் சொல்வதிலிருந்து புலப்படுகிறது. அது, போலீஸ் துறையினர் மக்கள் மீது அக்கறையின்றி அலட்சியமாகச் செயல்பட்டுள்ளனர் என்பதாகும்.
புரட்சிகர, ஜனநாயக இயக்கங்கள் நடத்தக்கூடிய கூட்டங்களுக்கு பல கேள்விகள் கேட்டு, பல கட்டுப்பாடுகளை விதிக்கின்ற, அதனை மீறினால் வழக்குப் பதிவு செய்து கைது செய்கின்ற போலீசு, 41 உயிர்களைப் பலிகொண்ட இக்கூட்டத்தை நடத்த அனுமதித்தது ஏன்?
கூட்டம் எவ்வளவு கூடும் என்பதை யூகிக்க முடியாததும், கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்கப் போவதையும் அறிய முடியாததும் அல்ல அரசு. விஜய் ஆளும் வர்க்க நபராக இருப்பதால் மோசமான சூழல் நிலவியபோதும் கூட்டம் நடத்த அனுமதித்துள்ளது அரசு. இது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க வேண்டி இக்கூட்டத்தை அரசு தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.
இவற்றோடு, கூட்டத்திற்கு ஏற்றவாறு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்க வேண்டும் அல்லது அனுமதி மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசு அதிகாரிகளும் போலீசும் தங்களுக்கே உரிய மக்கள் மீதான அக்கறையற்ற அலட்சியப்போக்குடன் செயல்பட்டிருப்பது நிரூபணமாகியுள்ளது.
இந்த வகையில் பெருமளவில் கூட்டம் கூடியதற்கும், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கும், 41 உயிர்கள் பலியானதற்கும் முதன்மை காரணமாக இருந்த, தொடர்ச்சியான தனது செயல்பாடுகளில் மக்கள் மீது துளியும் மரியாதை காட்டாத விஜய் மீதும் மக்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்ட மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மீதும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோழமையுடன்,
தோழர் மாறன,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram