கல்லாங்காடு பகுதியில் மதுரை மக்கள் சிப்காட் அமைக்கப்படுவதற்கு எதிராகப் போராடி வருகின்றனர். அந்த கல்லாங்காடின் பின்னணி குறித்து தோழர் தமிழ் தாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இப்பதிவை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
***
சாம்பல் நிற தேவாங்கு உள்ளிட்ட காட்டுயிர்கள் வாழும் அழகுநாச்சியம்மன் கோயில்காடு
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், வஞ்சிநகரம், பூதமங்கலம், கொடுக்கம்பட்டிக்கு உட்பட்ட சுமார் 420 ஏக்கர் பரப்பளவு கொண்டது அழகுநாச்சியம்மன் கோயில்காடு. தமிழ் திணையியல் வரையறைப்படி இது முல்லை நிலம். உசிலை, களா, குருந்தம், ஆத்தி, ஆலம், அரசம், நீர்க்கடம்பு, இலந்தை, வெள்வேல், தொரட்டி, தைலம், திருகுக்கள்ளி, செங்கத்தாறி, மஞ்சநத்தி, இலுப்பை, கூகமத்தி உள்ளிட்ட மரங்களும்; ஆவாரை, சிறுபூனைக்காலி, தும்பை, நாயுருவி, குறிச்சி, குன்றிமணி, சீதேவி செங்கழுநீர், வெண் சாரணை, குப்பை கீரை, தாத்தா பூ உள்ளிட்ட தாவரங்களும் இம்முல்லை நிலத்து புதர்காட்டில் காணப்படுகிறது.
இந்த இயற்கையான புதர் காட்டை அழகுநாச்சியம்மன் மற்றும் பெருங்காட்டு கருப்பசாமி ஆகிய இரு தெய்வங்களுக்குரிய கோயில் காடாக கருதி பன்னெடுங்காலமாக மக்கள் பேணி பாதுகாத்து வருகின்றனர். உசிலை, குருந்தம், திருகுகள்ளி, மஞ்சணத்தி, வெள்வேலம் உள்ளிட்ட புதர் காட்டு மரங்களே இப்பகுதியில் பரவலாக காணப்படுகிறது. தாவரவியல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் பார்கவிதை அவர்கள் கடந்த அக்டோபர் 2024 ஆம் ஆண்டு இக்கோயில் காட்டு தாவரங்களை ஆவணம் செய்தார்.
இப்பகுதி செம்மண் பூமியாக இருக்கிறது. இம்மண்ணின் செவல் நிறத்தை வெளிப்படுத்தும் வகையில் மூவன் செவல்பட்டி, நாகப்பன் செவல்பட்டி என ஊர்களுக்கு பெயரிடப்பட்டிருப்பதை காணலாம்.
பூதமங்கலத்தில் 3412, கொடுக்கம்பட்டியில் 3317, வஞ்சிநகரத்தில் 4824 பேர் வாழ்வதாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மொத்தம் 11,553 பேர் இன்மூன்று ஊராட்சி பகுதியில் வாழ்கிறார்கள். இக்கோயில்க்காட்டை சுற்றி 20க்கும் மேற்பட்ட ஊர்கள் அமைந்திருக்கின்றன. இவர்கள் அனைவரின் அடிப்படை வாழ்வாதாரம் என்பது கால்நடை வளர்ப்பும், வேளாண்மையும் தான். கால்நடை வளர்ப்போருக்கு மேய்ச்சல் நிலமாகவும், ஏரிப்பாசனத்தை நம்பி வேளாண்மை செய்வோருக்கு நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் இக்கோயில்காடு விளங்குகிறது.
மனிதர்களின் வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல் பல்வேறு உயிரினங்களின் வாழிடமாகவும் இக்கோயில்காடு இருக்கிறது. புள்ளிமான், நரி, வெருகு, மரநாய், புனுகுப்பூனை, செம்முககுரங்கு, சாம்பல் நிற தேவாங்கு, சாம்பல் நிற கீரி, மூவரி அணில், பச்சோந்தி, உடும்பு, மலை பாம்பு, பாறை பல்லி, அரணை உள்ளிட்ட காட்டு விலங்குகளின் வாழிடமாக இக்கோயில்காடு விளங்குகிறது. மேலும் இப்பகுதியில் புள்ளி புறா, மலை உழவரன், செம்மூக்கு ஆள்காட்டி, கொண்டலாத்தி, புள்ளி ஆந்தை, வெண்மார்பு மீன்கொத்தி, பொன்முதுகு மரங்கொத்தி, பனங்காடை, வேதிவால் குருவி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பறவைகளை பறவையியல் ஆய்வாளர் & கண் மருத்துவர் திரு. ஹீமோக்ளோபின் அவர்கள் ஆவணம் செய்துள்ளார். கடந்த அக்டோபர் 2024இல் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினர் இப்பகுதியின் பல்லுயிரிய வகைமை மற்றும் வரலாற்று சுவடுகளை ஆய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளனர். அதனை விரிவாக படிக்க இணைப்பு இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான்களை ஊர் இளைஞர்கள் காணொளியாக படமெடுத்து அண்மையில் சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளனர். அக்காணொளி இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அழகுநாச்சியம்மன் கோயில்காட்டு பகுதியில் புகைப்பட கருவி வழியாக ஆவணம் செய்த சாம்பல் நிற தேவாங்கு, பச்சோந்தி, இந்திய பச்சைப்பாம்பு, எண்ணெய்ப்பனையன், வலைவரையன் பாம்பு, கொம்பேறிமூர்க்கன், ஊதுபைத் தவளை, குழித்தவளை, குள்ளத்தேரை, விசிறித்தொண்டை ஓணான், வெண்கல அரணை, கரட்டாண்டி ஓணான், மனைப் பூரான், தென் நிலப்பாச்சான், குச்சி பூச்சி, பெருமரவட்டை, பச்சை வேடன் சிலந்தி, உள்ளிட்ட காட்டுயிர்களின் புகைப்படங்களை திரு.விஸ்வா மற்றும் தமிழ்தாசன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
புள்ளிமான், நரி, வெருகு, மரநாய், புனுகுப்பூனை, சாம்பல் நிற தேவாங்கு, உடும்பு உள்ளிட்ட காட்டுயிர்கள் இந்திய அரசின் காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் 1972-படி பட்டியல் 1-இல் வைக்கப்பட்டுள்ள உயிரினங்கள் ஆகும். தேவாங்கு, மரநாய், புனுகுப்பூனை, நரி, வெருகு உள்ளிட்ட காட்டுயிர்கள் உலக அளவில் அச்சுறுத்தல் மற்றும் அழியும் விளிம்பில் உள்ள உயிரினங்களாக அடையாளம் காணப்பட்டு செம்பட்டியல் (Redlist) வகைப்பாட்டிற்குள் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கழகத்தால் (IUCN) வைக்கப்பட்டுள்ளது. அதில் சாம்பல் நிற தேவாங்கு தென்னிந்திய மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய (Endemic) உயிரினமாகும். பல்லுயிரிய பெருக்கம் நிறைந்த அழகுநாச்சியம்மன் கோயில்காட்டை பல்லுயிரிய வகைமை சட்டம் 2002இன் கீழ் பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க வேண்டுமென அப்பகுதியை சார்ந்த ஊர் மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழ்தாசன்
05.10.2025
ஆதாரங்கள்:
மக்கள் தொகை கணக்கெடுப்பு:https://www.tnrd.tn.gov.in/databases/census_of_india_2011TN/pdf/23-Madurai.pdf
ம.இ.ப.அ. குழுவினர் ஆய்வறிக்கை: https://mncfteamwork.blogspot.com/2024/11/blog-post.html
The Wildlife Protection Act of 1972 (WPA) Schedule I lists
The Biological Diversity Act, 2002
முகநூலில்: தமிழ் தாசன்