பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் அக்டோபர் 1-ஆம் தேதியன்று தலித் இளைஞரை ஆதிக்க சாதிவெறி கும்பல் அடித்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதேபூர் கோத்வாலிப் பகுதியைச் சேர்ந்த ஹரி ஓம் என்ற இளைஞர் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதியன்று தன்னுடைய மனைவியைப் பார்ப்பதற்காக அவருடைய மாமியார் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, ரேபரேலியின் உஞ்சாஹர் பகுதியில் ஹரி ஓமை வழிமறித்த சாதிவெறி கும்பல், அவர் வீடுகளில் திருடுவதற்காக டிரோன் மூலம் குறிவைக்கும் கும்பலைச் சேர்ந்தவர் என்று குற்றஞ்சாட்டித் தாக்குதல் நடத்தியது.
“நான் நிரபராதி“ என்று ஹரி ஓம் பலமுறைக் கெஞ்சிய பிறகும் அவரை கட்டிவைத்து தாங்கள் அணிந்திருந்த பெல்ட் மற்றும் கட்டைகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதனால் ஹரி ஓம் அநியாயமாகக் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் அக்டோபர் 2 அன்று பதேபூர் அருகே உள்ள தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இக்கொடூரத் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஹரி ஓமின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை வழக்குப் பதிவு செய்து போலீசு ஐந்து பேரைக் கைது செய்துள்ளது. உஞ்சாஹர் ஆய்வாளர் உள்பட மூன்று போலீசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதியத்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தலித் மக்கள் மீதான சாதியத் தாக்குதல்களும் படுகொலைகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. தலித் சாதியைச் சேர்ந்த பள்ளி சிறுமிகளும் பெண்களும் பாலியல் வன்கொடுமை, குறிப்பாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதும் தீவிரமடைந்து வருகின்றது.
நாட்டில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை வழக்குகளில் பா.ஜ.க. ஆளும் ஐந்து மாநிலங்களே முதலிடங்களில் உள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 26.2 சதவிகிதம் வழக்குகள் பதிவாகின்றன. இது பல்வேறு மிரட்டல்கள், போராட்டங்களுக்குப் பிறகு பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை மட்டுமே. மாறாக, உண்மை எண்ணிக்கை இதனைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சாதி அடையாளங்களை நீக்குவது என்ற பெயரில், போலீசு நிலைய ஆவணங்களில் சாதியைக் குறிப்பிடக் கூடாது என்று யோகி ஆதித்யநாத் அரசு கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மேற்கண்ட குறைந்தபட்ச எண்ணிக்கை கூட பொதுவெளியில் மூடிமறைத்துவிட்டு, தலித் மக்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த பாசிச யோகி அரசு தயாராகி வருகிறது.
இச்சம்பவங்கள் அனைத்தும் உத்தரப்பிரதேசம் தலித் மக்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றப்பட்டு வருவதையே உணர்த்துகின்றது.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram