காசா: மக்கள் போராட்டத்தின் நிர்ப்பந்தமே முதற்கட்ட போர்நிறுத்தம்!

இங்கே யார் காசா மக்களைக் கொன்று குவித்த இனப்படுகொலைக் குற்றவாளிகளோ அவர்களே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, முடிவுகளையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் மறுகாலனியாக்கத்தின் புதிய நியதி.

0

காசா: மக்கள் போராட்டத்தின் நிர்ப்பந்தமே முதற்கட்ட போர்நிறுத்தம்!
நீதிக்கான போர் முடியவில்லை!

ஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக பிபிசி உள்ளிட்ட முதலாளித்துவ ஊடகங்கள் வெறிக்கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன. எகிப்தின் ஷர்ம் எல் – ஷேக் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்பு, டிரம்ப்பின் சோஷியல் ட்ரூத் (Social Truth) வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குப் பிறகு, இந்த வெறிக்கூச்சலை முதலாளித்துவ ஊடகங்கள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

பாசிஸ்டு ட்ரம்பின் 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையிலான முதற்கட்ட ’பேச்சுவார்த்தை’ இது. உண்மையில் இது பேச்சுவார்த்தை என்று கூறுவதே தவறு. மட்டுமல்ல, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் என்ற சொல்லாடலே அயோக்கியத்தனமானது. போரை வலுக்கட்டாயமாக இஸ்ரேல்தான் தொடுத்துக் கொண்டிருக்கிறது.

பயங்கரவாத அமெரிக்காவும், பாசிச இஸ்ரேலும் தங்கள் மீதான குற்றத்தை திசைதிருப்பவும், தங்களுக்கெதிரான உலகளாவிய போர்க்குணமிக்க மக்கள் போராட்டங்களை மட்டுப்படுத்தவும், சதித்தனமாக காசாவை முழுவதும் ஆக்கிரமிக்கவும் உருவாக்கிய சதியே 20 அம்சத் திட்டமும், அதனடிப்படையிலான பேச்சுவார்த்தை நாடகமும்.

தொடர்ச்சியாக தங்கள் மக்களின் உயிர் கொத்துக் கொத்தாக பயங்கரவாத இஸ்ரேல் அரசால் பறிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே ஹமாஸ் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தத்திற்கு வந்துள்ளது.

பிணைக்கைதிகள் பரிமாற்றம், காசாவுக்குள் உணவுப் பொருட்கள் அனுமதி, குறிப்பிட்ட அளவு இஸ்ரேலியப் படைகள் வெளியேறுதல் ஆகிய அம்சங்களில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், டிரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தை ஹமாஸ் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. ஏனெனில் ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்பது 20 அம்சத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம்.

தங்களின் சுயநிர்ணய உரிமையை அந்நியரிடம் விட்டுக் கொடுக்க முடியாது, காசாவில் இருந்து வெளியேற முடியாது, ஆட்சி அதிகாரத்தையும் முழுவதுமாக விட்டுக் கொடுக்க முடியாது என்று தெளிவாக ஹமாஸ் அறிவித்து விட்டது.

ஆனால் டிரம்ப்பின் முயற்சியால் முழுமையாக போர் முடிவுக்கு வந்துவிட்டது போலவும், டிரம்புக்கு நோபல் பரிசு கொடுக்கப்படுமா என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் பிதற்றிக் கொண்டிருக்கின்றன, மக்களை திசைதிருப்பிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க அடிமை பாசிச மோடி உட்பட உலகத் தலைவர்கள் பலரும் டிரம்புக்கு வாழ்த்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

டிரம்ப்போ, தாங்கள் சொல்வதைத்தான் உலகம் கேட்க வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பாசிசத் திமிருடன் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை, இஸ்ரேலுக்கு நன்மை, காசாவுக்கு நன்மை, மத்திய கிழக்குக்கு நன்மை, அமெரிக்காவுக்கு நன்மை, அமெரிக்க நண்பர்களுக்கு நன்மை, உலக மக்களுக்கு நன்மை என்று அவர் கூறியிருக்கிறார்.

இன்னொரு பக்கம், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நிற்பதைப் போலவும், அவர்கள் கொடுத்த அழுத்தத்தில்தான் அமெரிக்காவும், இஸ்ரேலும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதைப் போலவும் கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில், இவர்கள் அனைவரும் சேர்ந்து தங்களின் ஏகாதிபத்திய நலன்களைத் தக்கவைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட குரூர நாடகத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. தங்கள் நாட்டு மக்களிடம் அம்பலமாகும் தங்களின் கோரமுகத்தை மறைத்துக் கொள்ளும் சதித்திட்டமின்றி வேறெதுவுமில்லை. காசா மக்களின் மீது அக்கறையெல்லாம் இந்தப் பிணந்தின்னிக் கழுகுகளுக்கு இருக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கவே இந்த 20 அம்ச திட்டத்திற்கு உடன்பட வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதே போர்க்குற்றம்தான்.

அதேபோது, தற்போது நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கண்டிப்பாக மதிக்கப் போவதில்லை. பேச்சுவார்த்தை முடிந்த பின்பும் அடுத்த இரண்டு மணிநேரத்துக்கு காசாவில் இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடந்தது அம்பலமாகியிருக்கிறது. முதற்கட்ட ஒப்பந்தம் முடிவான பின்பு, இஸ்ரேல் இராணுவத்தால் காசாவில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல, கடந்த ஜூன் 2024 இல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபோது, அதனை மயிரளவுக்கும் மதிக்காமல் மீண்டும் காசா மீதான போரைத் தொடங்கி, இனப்படுகொலையைத் தொடர்ந்தது நெதன்யாகு தலைமையிலான பாசிச இஸ்ரேல் அரசு.

உண்மையில், தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தம் என்பது, உலக மக்களிடம் முழுமையாக அம்பலப்பட்டுப் போயிருக்கும் தங்களது பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்கும், தங்களுக்கெதிரான மக்களின் போராட்ட உணர்வை மட்டுப்படுத்துவதற்கும் தான்.

இதனடிப்படையில், ஏதாவதொரு பொய்க்காரணத்தைக் கட்டமைத்து, மீண்டும் மோசமான பேரழிவுப் போரைத் தொடங்கி, காசாவையும், ஹமாசையும் முழுமையாக அழித்துவிட்டு, அதைக் கைப்பற்றிக் கொள்வதற்கான எல்லாத் தயாரிப்புகளையும் இந்த இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க, இஸ்ரேல் ஓநாய்கள் மேற்கொள்ளும். காசாவின் மீது மீண்டும் கொடூரமானதொரு போரைத் திணிக்கும்.

இதற்கேற்ப காசா மக்களின் இரத்தக் கவிச்சியை நுகர்ந்து கொண்டே, முதலாளித்துவ கைக்கூலி ஊடகங்கள் அமெரிக்க – இஸ்ரேல் பயங்கரவாத அரசுகளுக்கு ஆதரவாக ஓலமிடும். உலகளாவிய அமெரிக்க அடிமைகளெல்லாம் அப்போது வாயையும், பின்புறத்தையும் பொத்திக் கொண்டிருப்பார்கள்.

யோசித்துப் பாருங்கள் நண்பர்களே, இங்கே யார் காசா மக்களைக் கொன்று குவித்த இனப்படுகொலைக் குற்றவாளிகளோ அவர்களே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, முடிவுகளையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுப் பத்திரத்தை கைக்கூலிகள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உலகின் புதிய நியதி என அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, மறுகாலனியாக்கத்தின் புதிய நியதி.

ஆம், இந்த நியதிதான் உலக நியதி. காசா மக்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் இந்த நியதிதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நம் முன் உள்ளே அபாயத்தை உணருங்கள்.

இந்த நியதியை ஏற்றுக் கொள்வதை விட மோசமானது வேறு ஏதாவது இருக்க முடியுமா? அடிமை மனநிலை கொண்டவனைத் தவிர, முதுகெலும்பில்லாதவனைத் தவிர வேறு யாராவது இந்நிலையைக் கண்டு அமைதியாக இருக்க முடியுமா? உண்மையிலேயே அறச்சீற்றம் கொண்டவர்கள் யாரேனும் வேடிக்கைப் பார்க்க முடியுமா?

நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். பயங்கரவாத அமெரிக்க – இஸ்ரேல் அரசுகளை போர்க்குற்றவாளிகளாக அறிவி! இன அழிப்புக் குற்றவாளி பாசிச நெதன்யாகுவை கைது செய்! உலகளாவிய அரசுகளே, இஸ்ரேல் உடனான அரசியல் – பொருளாதார – இராணுவ உறவுகளை இரத்து செய்!, ஹமாஸ் இல்லாத பாலஸ்தீன தனிநாடு என்பதை நிராகரிப்போம்! ஆகிய முழக்கங்கள் முன்னிலும் ஓங்கி ஒலிக்க வேண்டும். இதனடிப்படையில் போர்க்குணமிக்க போராட்டங்களை உலகளவில் கட்டியமைப்பது மட்டுமே ஒரே தீர்வாகும். இதுதான் உலகளாவிய உழைக்கும் மக்களின், ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

அது மட்டுமே காசா மக்களைப் பாதுகாக்கும். சுதந்திரப் பாலஸ்தீனத்திற்கு வழி வகுக்கும். அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை தகர்த்தெறியும் பாதையும் இதுவேயாகும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க