மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடிப் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் அக்டோபர் 6 அன்று இரவு 10 மணிக்கு தனது நண்பர்கள் தினேஷ் மற்றும் அஜய் உடன் கொள்ளிடம் சாமியம் பைபாஸில் உள்ள பேக்கரிக்கு டீ குடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது ஆதிக்கச் சாதி வெறிபிடித்த இளைஞர்கள் கும்பல் ஒன்று அங்கு வந்துள்ளது. தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படம் ஒட்டியிருப்பதைப் பார்த்த அக்கும்பல் அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக வசைபாடியுள்ளது. இரு சக்கர வாகனத்தின் சாவியைக் கொண்டு தமிழரசனின் முதுகில் கிழித்து கொடூரத் தாக்குதல் நடத்தியதுடன், தடுக்க வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த தமிழரசன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாதிவெறி தாக்குதலுக்கு உள்ளான தமிழரசன் கூறுகையில், “நானும் என் நண்பர்களும் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு போகும் போது டீ குடிக்க கடைக்குப் போனோம். நான் கடைக்கு முன்பகுதியில் என் டூவிலரில் உட்கார்ந்து ஃபோன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த நான்கு இளைஞர்கள் இது யாரு வண்டினு கேட்டார்கள். நான் என்னோட வண்டி என்றேன். என் வண்டியில் ஒட்டியிருந்த அம்பேத்கர் படமும், நீல சிவப்புக் கட்சி கொடியும் இருப்பதைப் பார்த்துவிட்டுதான் அவர்கள் கேட்டனர். உடனே சாதி சாதியைச் சொல்லி என்னைக் கேவலமாகவும் இழிவாகவும் பேசி என்னைத் தாக்கினர்.
“இதனைப் பார்த்த என் நண்பர்கள் ஓடிவந்து ஏன் அடிக்கிறீங்க என்று கேட்டனர். உடனே அவர்களையும் சேர்ந்து அடித்தனர். என்னை முட்டிப் போடுன்னு சொன்னாங்க. நான் முட்டிப் போட மாட்டேன்னு சொன்னேன். இதையடுத்து, என்னைத் தள்ளிவிட்டு சாவியை வச்சி முதுகில் கிழித்தனர். இப்பிரச்சனையைக் கேள்விப்பட்டு எங்க ஊரு பசங்க வந்ததும் ஓடிவிட்டனர். நான் இதுக்கு முன்னாள் அவர்களைப் பார்த்தது இல்லை. சாதிய வன்மத்தில் என்னை அடித்தனர். என்னைத் தாக்கிய மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கணும்” என்று வலியுடன் தெரிவித்தார்.
படிக்க: மயிலாடுதுறை இளைஞர் சாதி ஆணவப் படுகொலை: தி.மு.க. அரசே குற்றவாளி!
இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, இதே மயிலாடுதுறை மாவட்டத்தில் சி.பி.ஐ (எம்) கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ. (DYFI) தோழர் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். அதேபோல், கடந்த ஜூன் மாதத்தில் மயிலாடுதுறையின் குத்தாலத்தில் தலித் சாதியைச் சார்ந்தவர் இடம் வாங்கி வீடு கட்டியதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவரது வீட்டை ஆதிக்கச் சாதி வெறியர்களால் சூறையாடிய அவலம் அரங்கேறியது. தற்போது மயிலாடுதுறையில் மீண்டும் ஒரு சாதிய வன்கொடுமை நடந்திருப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, தென்மாவட்டங்களில் ஆதிக்கச் சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவுவதன் விளைவாக தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் மீதான சாதியத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. நன்றாகப் படித்ததற்காக சக மாணவர்களால் வெட்டப்பட்ட நாங்குநேரி சின்னதுரை, கபடிப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக வெட்டப்பட்ட தேவேந்திர ராஜா, புல்லட் ஓட்டியதற்காக வெட்டப்பட்ட அய்யாசாமி ஆகியோர் இதற்கான சாட்சிகள்.
இதனை மாதிரியாகக் கொண்டு இக்கொடூரத்தை தமிழ்நாடு முழுவதும் அரங்கேற்ற வேண்டும் என்பதே பாசிச பா.ஜ.க-யின் நோக்கமாகும். சமீபத்தில், சென்னையில் வன்னியர் சாதியைச் சேர்ந்த தோழியைச் சந்தித்ததற்காக தலித் மாணவன் பா.ஜ.க. குண்டர்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது இதனை எடுத்துக்காட்டுகிறது.
எனவே, இச்சம்பவத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆதிக்க சாதிவெறியர்களைத் தண்டிப்பது அவசர அவசியமானதாகும். ஆனால், ‘சமூக நீதி’ ஆட்சி என்று மார்தட்டிக் கொண்டு தலித் மக்கள் மீதான தாக்குதல்களையும் ஆதிக்கச் சாதி வெறியர்களின் கொட்டங்களையும் தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, இத்தகைய சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் தி.மு.க-வின் கள்ளமௌனத்தைக் கலைக்கும் வகையிலும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram