அக்டோபர் 12 அன்று நெல்லை சமாதானபுரம் ஏ.டி.எம்.எஸ். மகாலில் சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
தோழர் ஓவுராஜ், மக்கள் அதிகாரக் கழகம்; தோழர் V.S.அப்துல் கையூம், மாநகர துணைச் செயலாளர், நெல்லை மாநகரம், தி.மு.க.; தோழர் கதிரவன், மாநில பொதுச்செயலாளர், திராவிடத் தமிழர் கட்சி; தோழர் சுந்தர்ராஜ், மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்); தோழர் முத்துவளவன், மாநகர மாவட்டச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி; தோழர் ரியாஸ் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர், நெல்லை மாநகர் மாவட்டம், எஸ்.டி.பி.ஐ.; தோழர் M.E.அகமது உசேன் ஆலிம், ஹமீது Dr.பழனிபாபா பாசறை; தோழர் இரா.ச.ராமமூர்த்தி, மாநகர மாவட்டச் செயலாளர், ஆதித்தமிழர் பேரவை; தோழர் தமிழ்மணி, பாளை தொகுதி மாவட்டச் செயலாளர், தமிழ் புலிகள் கட்சி; தோழர் ஜே.கே.குட்டிபாய், மாவட்டச் செயலாளர், ஆதித்தமிழர் கட்சி; அய்யா வழி P.பாலமுருகன், வழக்கறிஞர்; தோழர் இரமேஷ், தேசிய துணைத் தலைவர், அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம்; தோழர் பா.செந்தில்குமார், வழக்கறிஞர், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் ஆகிய தோழர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இந்த அரங்கக் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்திற்கு நெல்லை – தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா தலைமை தாங்கினார்.
தோழர் கின்ஷன், வழக்கறிஞர், மக்கள் அதிகாரக் கழகம்; தோழர் கருணாகரன், வழக்கறிஞர், மக்கள் அதிகாரக் கழகம்; தோழர் வினோத் மலைச்சாமி, எழுத்தாளர், தலித் பேந்தர்ஸ் ஆவணக் காப்பாளர்; தோழர் சுசில் ராஜ்குமார், வழக்கறிஞர்; தோழர் மருது, மாநில செய்தித் தொடர்பாளர், மக்கள் அதிகாரக் கழகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் நெல்லை – தூத்துக்குடி மாவட்டப் பொருளாளர் தோழர் சந்துரு நன்றியுரை ஆற்றினார்.
தோழர் தாளமுத்து செல்வா தனது தலைமை உரையில், “இமானுவேல் சேகரன் சாதித் தலைவரா? சமத்துவத் தலைவரா? இமானுவேல் சேகரன் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் சிறு வயதிலேயே ஈடுபட்டு திருச்சியில் மூன்று மாதம் சிறையில் இருந்தார். அதன் பின் இராணுவத்தில் இணைந்து பணியாற்றினார். ஆனால், சொந்த மாவட்டத்தில் சொந்த ஊரில் மக்கள் சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும் போது தனது இராணுவப் பணியை துறந்து களமிறங்கினார். இரட்டை குவளை முறை, தீண்டாமை, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக களத்தில் இறங்கினார். இதனால் சமத்துவத் தலைவராக இன்றும் நிற்கிறார். இன்றைய சூழலில் தியாகி இமானுவேல் சேகரனை மக்களிடம் இன்னும் ஆழமாக கொண்டு செல்ல வேண்டும். இதை உணர்வுபூர்வமாக உணர்கிறோம்” என்று பேசினார்.
தோழர் கின்ஷன் தனது உரையில், “நக்சல்பாரி போராட்டம், கீழத் தஞ்சை விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் வர்க்கப் போராட்டத்தோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் சாதி எதிர்ப்புப் போராட்டத்தையும் உள்ளடக்கியது. பண்பாட்டு தளத்திலும், அரசியல் களத்திலும் ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து களமாடின. சாதி ஆதிக்கத்தை எதிர்த்து பல்வேறு தளங்களில் வினையாற்றின. அப்போராட்டங்களை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது” என்று பேசினார்.
தோழர் கருணாகரன் தனது உரையில், இமானுவேல் சேகரன் வரலாற்றை விளக்கிப் பேசினார். “அவர் (இமானுவேல் சேகரன்) ஒரு குறிப்பிட்ட சாதிக்கான பிரதிநிதி அல்ல, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி. அம்பேத்கரின் அறிமுகத்திற்கு பின் இமானுவேல் சேகரனின் கண்ணோட்டம் கூர்மையடைந்தது. அம்பேத்கரின் இறப்புக்குப் பின் மாநாடு நடத்தி ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு குடையின் கீழ் இணைத்தார். சாதி ஆதிக்கம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்த்துப் போராடினார். அப்படிப்பட்ட இமானுவேல் சேகரனை உயர்த்திப் பிடிக்கும் வகையில் எடுத்துச் செல்லும் மக்கள் அதிகாரக் கழகத்தை வாழ்த்துகிறேன்” என்று பதிவு செய்தார்.
தோழர் சுசில் ராஜ்குமார் தனது உரையில், “1990-களில் தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் வரலாற்றில் மிக முக்கியமான பதிவாகும். ஆனால், இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலேயே ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவக் கும்பல் புகுந்து மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இச்சூழலில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிராக உழைக்கும் மக்களை ஒன்று திரட்ட வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது” என்று பேசினார்.
தோழர் மருது தனது உரையில், “ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவக் கும்பல் இந்துராஷ்டிரத்தை அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இமானுவேல் சேகரனை நாம் ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும்? சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் இன்று வழக்கமாக நடைபெறும் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. இந்துத்துவ காவிக் கும்பலுக்கு ஏற்ப அரசுக் கட்டமைப்பு மாற்றப்பட்டு வருகிறது. இந்த மாற்றமானது பண்பாட்டுத் தளத்தில் மட்டுமல்ல, பொருளாதாரத் தளத்திலும் எதிரொலிக்கிறது. இயற்கை மற்றும் கனிம வளங்கள் சூறையாடப்படுகிறது. இச்சூழலில் எந்த ஆதிக்கத்திற்கும்தான் அடிபணிய மாட்டேன் என வீறுகொண்டெழுந்த சாதி எதிர்ப்புப் போராளியை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டியுள்ளது. ஆண்ட பரம்பரை பெருமை பேசுவது நமது நோக்கமல்ல. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசக் கும்பல் நாட்டை சூறையாடும் போது இப்பாசிசக் கும்பலால் உழைக்கும் மக்கள் கடுமையாக ஒடுக்கப்படும் சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய, சாதி ஒழிப்புக் களத்தில் களமாடிய இமானுவேல் சேகரனை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது” என்று பதிவு செய்தார்.
இந்த அரங்கக் கூட்டத்தில் உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் உணர்வுப்பூர்வமாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வானது இமானுவேல் சேகரனை சாதித் தலைவராக சுருக்கும் கண்ணோட்டத்தை உடைக்கும் விதமாக அமைந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளியாகவும் பகுதி உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் நிலை நிறுத்தியது.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram