சவுடு மண்ணிற்கு இருக்கும் மதிப்பு கூட நெல் என்ற தானியத்திற்கு கிடையாது என்ற நிலைமை நீண்ட காலமாக தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. இந்தியாவில் உணவு கிடைக்காமல் ஒருவேளை, இரண்டு வேளை மட்டும் உண்ணும் மக்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உள்ளது. நமது நாட்டில் இன்று வரை விவசாயத்தைத்தான் பெரும்பான்மையான மக்கள் சார்ந்து உள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை உலர்த்துவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் கொள்முதல் பணிகள் தாமதமடைந்துள்ளன. மத்திய அரசு விதிகளின்படி நெல்மணிகளின் ஈரப்பதம் 17 சதவீதத்தை மீறக்கூடாது. எனவே தற்போது பெய்து வரும் மழையைக் கருத்தில் கொண்டு 22 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
ஒன்றிய அரசு அனுமதிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்நாட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் எவ்வாறு இயங்கி வருகின்றன என்பதை நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து அதைக் கிடங்குகளில் வைத்துப் பராமரித்து ரேஷன் கடைகளுக்கு அரிசியாகக் கொடுப்பது வரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வேலை. இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாடும் ஊழல் முறைகேடுகளால் புரையோடிப் போய் உள்ளது.
நெல் கொள்முதல் செய்யப்படும் இடத்திலிருந்து மையக்கிடங்குகளுக்கு 48 மணி நேரத்தில் நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று விட வேண்டும் என்று அரசு உத்தரவு இருக்கிறது. ஆனால் மாத கணக்கில் வெயிலிலும் மழையிலும் நனைந்து நெல் மூட்டைகள் முளைத்து கெட்டுப் போகும் வரை, அது செய்தியாக ஊடகங்களில் வரும் வரை, மக்கள் போராட்டங்களாக மாறும் வரை, அதைப்பற்றி எந்த பதட்டமும் இன்றி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது; எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆண்டுதோறும் நாம் இதைக் காட்சி ஊடகங்கள் வழியாகப் பார்த்துக் கொண்டு வருகிறோம்.
தற்காலிக கொள்முதல் நிலையங்களைக் குத்தகை எடுக்க அதிகாரிகளுக்கும் உள்ளூர் ஆளும் கட்சிக்காரருக்கும் லஞ்சம் கொடுத்து, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, நெல் கொள்முதல் செய்வதற்கு ஆகும் செலவு மற்றும் குத்தகைக்காரனின் லாபம் உட்பட அனைத்து செலவுகளையும் ஈடு செய்ய விவசாயிகளிடம் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக மூட்டை ஒன்றுக்கு 40 முதல் 60 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.
முப்போகம் விளையும் டெல்டா மாவட்டங்களிலோ நிலைமை வேறொன்றாக இருக்கின்றது. இங்கு ஆண்டுதோறும் இயங்கும் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. தற்காலிக கொள்முதல் நிலையங்களும் உள்ளன. இங்கு தனியார் குத்தகை இல்லாமல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் என்ற அரசு நிறுவனமே நேரடியாக நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறது. Helper போன்ற தற்காலிக ஊழியர்களைக் கொண்டு நெல் கொள்முதல் நடக்கின்றது. இங்கும் விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் சட்டவிரோதமாக வசூலிக்கப்படுகின்றது. இதை வசூல் செய்யும் கடை நிலை ஊழியர்கள் பி.ஓ (Purchase Officer) என்ற அதிகாரிக்கு மூட்டைக்கு இரண்டு ரூபாய் லஞ்சம் தர வேண்டும். எஸ்.ஆர்.எம் (Senior Regional Manager) என்ற உயர் அதிகாரி ஆய்வுக்கு வரும்போது அவர் டிரைவர் இடம் 5,000 ரூபாய் தர வேண்டும். நெல் மூட்டைகளை ஏற்றும் லாரிகளுக்கு நுகர்பொருள் வாணிப கழகம் வாடகை பணம் தர வேண்டும்; அதைத் தராமல் அதிகாரிகள் சுருட்டிக் கொள்வர். அதையும் இந்த 40 ரூபாயில் இருந்து தான் கடைநிலை ஊழியர்கள் தர வேண்டும்.
அரசின் ஆணைப்படி 48 மணி நேரத்தில் நெல் மூட்டைகள் மையக்கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் மழையில் நனைந்து சேதம் ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியது நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் SRM என்ற அதிகாரி. ஆனால் அவர் பொறுப்பு ஏற்க மாட்டார். இந்த இழப்பு முழுவதையும் Helper என்ற கடைநிலை ஊழியர்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நெல் கொள்முதல் செய்வதற்கு ஆகும் செலவினை ஈடு செய்ய அரசு ஒதுக்கும் நிதி மூட்டைக்கு பத்து ரூபாய். இந்த பத்து ரூபாய் என்பது இந்த அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கவே போதாது. எனவேதான் அனைத்து செலவுகளையும் ஈடு செய்ய சட்டவிரோதமாக விவசாயிகளிடம் 40 முதல் 60 ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். இந்த ஊழல் முறைகேடு என்பது ஊரறிய நாடறிய தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இப்படி நுகர் பொருள் வாணிப கழகத்தின் ஊழல் முறைகேடுகளின் வழியாக கொள்முதல் செய்யப்படும் நெல் கெட்டுப் போய் முறையாகப் பாதுகாக்கப்படாமல் குத்தகை வழியாக சுகாதாரமற்ற முறையில் அரிசி ஆலைகளில் அரைக்கப்பட்டு ரேஷன் கடை வழியாக மக்களுக்கு வழங்கப்படுகின்றது.
விவசாயிகள், மக்களின் வயிற்றில் அடித்து பல்வேறு ஊழல் முறைகேடுகளால் அதிகார வர்க்கம் கொழுத்து வருகிறது.
அந்நிய மூலதனத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து வளர்ச்சி, வளர்ச்சி என்று சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் அரசு, சொந்த நாட்டு மக்களின் விவசாயத்தைத் திட்டமிட்டு அழித்து வருவதை நம்மால் உணர முடிகிறது.
ரேஷன் கடைகளை மூட வேண்டும்; விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கக் கூடாது; உணவு தானிய கொள்முதலை தனியாருக்குத் திறந்து விட வேண்டும் என்று உலக வர்த்தக கழகம் சர்வதேச நாணய நிதியும் போன்ற அமைப்புகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாகத்தான் நாம் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் செயல்பாட்டைப் பார்க்க வேண்டும்.
இந்த அரசு கட்டமைப்பும் அதன் சட்டங்களும் உலக வர்த்தக கழகத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. நிலவுகின்ற இந்த அரசு அமைப்பில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் எந்த ஒரு கட்சியும் இந்த ஒப்பந்தங்களைத் தான் நடைமுறைப்படுத்த முடியும் என்பது விதி. எனவே இந்த அரசமைப்பிற்குள் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது.
அதிலும் குறிப்பாக, பாசிச பா.ஜ.க விவசாயத்தை அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட்களுக்கு தாரைவார்ப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு எதிராக பல்வேறு வர்க்கங்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய நாடு தழுவிய மக்கள் எழுச்சியை உருவாக்குவதும் மக்களின் உரிமைகளை கோரிக்கைகளை நிறைவேற்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்று அரசமைப்பைக் கட்டி அமைப்பதும் ஜனநாயக சக்திகள் முன் உள்ள உடனடி அரசியல் கடமையாக உள்ளது.
![]()
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











