மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த
சரியான அரசியலும்
உறுதியான போராட்டங்களும்
(பாகம் – 3)
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
“திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்ற கொக்கரிப்புடன் சங்கிக் கும்பல் மதுரையில் மேற்கொண்டுவரும் கலவர சதி வேலைகளை முறியடிக்கும் விதமாக, எமது மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் தொடர்ந்து போராடி வருவதை தாங்கள் அறிவீர்கள். அந்தப் போராட்ட அனுபவங்களை தொடர்ந்து பதிவு செய்தும் வருகிறோம். அந்தவகையில், கடந்த ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் இப்பிரச்சினை தொடர்பாக எமது அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இங்கு பதிவு செய்கிறோம்.
1. சங்கிக் கும்பலின் ஜூன் 22 ‘முருக பக்தர்கள்’ மாநாடு, புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் தொடர் முயற்சியால் தோல்வியில் முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, ஜூன் 22 அன்று இந்து முன்னணி சார்பாக நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு முடிந்தவுடன், உடனடியாக, இந்த மாநாடு எவ்வாறு தோல்வியில் முடிந்தது என்பதை பல்வேறு புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தி காணொளி வெளியிடப்பட்டது. பொதுவில் மாநாட்டின் கூட்ட எண்ணிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு அனைவரும் இம்மாநாட்டை மதிப்பிட்டுவந்த நிலையில், அரசியல் ரீதியாக இம்மாநாடு தோல்வி அடைந்துள்ளது என்பதை அக்காணொளி உணர்த்தியது. இது, பல்வேறு ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையளிப்பதாக இருந்தது.
2. மேலும், ஜூன் 22 மாநாட்டில் அண்ணாமலை உள்ளிட்டு சங்கிகள் அனைவரும் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளையும் வழிகாட்டுதல்களையும் துளியும் மதிக்காமல் மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசினர். அவ்வாறு பேசிய பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை போலீசு ஆணையர் அலுவலகத்தில் ஜூன் 24 அன்று மனு கொடுக்கப்பட்டது.
3. ஜூன் 24 அன்று திருப்பரங்குன்றத்தில் ஆடு-கோழி பலியிட்டு வணங்குவது தொடர்பான வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி நிஷா பானு, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு-கோழி பலியிட்டு வழிபடும் மரபு ஆண்டாண்டு காலமாக இருந்து வந்ததை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார். ஆனால், நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பில், உண்மைக்கு மாறான விவரங்களை அடிப்படையாகக் கொண்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவில் ஆடு-கோழி பலியிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.
சங்கிகளின் பொய்ப் பிரச்சாரங்களையே நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பாக வழங்கியதை அம்பலப்படுத்தி, உடனடியாக மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது ஒரு காணொளி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த மாறுபட்ட தீர்ப்பை விமர்சித்து தொடர்ச்சியாக பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4. ஜூன் 22 மாநாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசிய பா.ஜ.க-இந்து முன்னணியினர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலை போலீசு கொடுக்க மறுத்தது. இதனை கண்டித்து மதுரை அண்ணாநகர் போலீசு நிலையத்தின் முன்பு மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நேரலை செய்தோம். இப்போராட்டத்தின் விளைவாக, போலீசு முதல் தகவல் அறிக்கை நகலை ஒப்படைத்தது.
5. ஜூலை மாதம் புதிய ஜனநாயகம் இதழில், “பக்தி-மதவெறி-கலவரம்: சங்கிகளின் கலவரச் சூத்திரம்”, “மதுரை: இந்து முன்னணி மாநாடு நீதிமன்றமே துணை!”, “இந்து முன்னணியின் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றித்தரும் ‘தீர்ப்பு’”, “‘முருக பக்தர்’ மாநாடு: மக்களின் புறக்கணிப்பு சங்கிகளின் கொக்கரிப்பு” ஆகிய தலைப்புகளின் கீழ் சிறப்புக் கட்டுரைகளையும் எமது தொடர்ச்சியான போராட்டங்களையும் தொகுத்து, “தொடரும் போராட்டங்கள்” என்ற தலைப்பில் சிறு வெளியீடு கொண்டுவந்து ஜனநாயக சக்திகள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டது. இது அனைத்து ஜனநாயக சக்திகளாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது.
6. ஜூலை 10-ஆம் தேதி முதல், நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து, “மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்!” என்ற தலைப்பில் சட்டக் கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டு பிரசுரம் மற்றும் இணையதளப் போஸ்டர்கள் வெளியிட்டு பரப்புரைத் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 30-ஆம் தேதியன்று மாறுபட்ட தீர்ப்புகள் குறித்து மதுரையில் சட்டக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. திருப்பரங்குன்றம் பிரச்சினையில் தொடக்கம் முதல் நமக்கு சட்ட ரீதியாக உதவிகளை செய்துவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் மருது ஆகியோர் சிறப்புரை வழங்கினர். பெருமளவு மாணவர்களையும் இளம் வழக்கறிஞர்களையும் ஜனநாயக சக்திகளையும் திரட்டி இக்கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதே காலகட்டத்தில், கோவையில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக கருத்தரங்கம் நடத்துவதற்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கருத்தரங்கம் நடத்துவதற்கு மண்டபம் வழங்கியவர்களை சங்கிகளின் உந்துதலால் போலீசு தொடர்ந்து மிரட்டி வருவதால் கருத்தரங்கம் நடத்துவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில், ஆகஸ்டு 31-ஆம் தேதியன்று, பெரியார் திடல் மணியம்மை அரங்கத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம், மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, கடலூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர்கள், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் விரிவாகப் பிரச்சாரம் செய்தனர்.
7. சிவகங்கை மக்களின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக ஜூலை 12 அன்று ம.க.இ.க. சார்பாக “சிவகங்கை அல்லாக் கோயில் பூக்குழித் திருவிழா” தொடர்பான ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
8. திருப்பரங்குன்றம் மலைக்கு கீழே அமைந்துள்ள மசூதிக்கு சொந்தமான இடத்தில் பழுதடைந்த ஒலிபெருக்கி குழாயைக் கூட சீரமைக்க விடாமல் போலீசு தடுத்து வருகிறது. மதுரை போலீசின் இந்த இஸ்லாமிய விரோதப் போக்கைக் கண்டித்தும், அவற்றை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தும் விதமாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
9. ஜூலை 30-ஆம் தேதி சிக்கந்தர் தர்கா நிர்வாகத்திற்கு போலீசு கொடுத்துவரும் தொடர் நெருக்கடியை அம்பலப்படுத்தி ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் காணொளி வெளியிட்டார்.
10. ஆகஸ்ட் 12-ஆம் தேதியன்று திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ம.க.இ.க., மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள், அப்பகுதி விவசாயிகளின் பிரச்சினையை பொதுவெளியில் கொண்டுவந்து அவர்களுக்கு ஆதரவைத் திரட்டினர். அத்துடன் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து பேசாத இந்து முன்னணி கும்பல், மதநல்லிணக்கத்துடன் வாழ்ந்துவரும் மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டுவதற்காக எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அம்பலப்படுத்தி காணொளி வெளியிட்டனர்.
11. தர்காவிற்கு செல்லும் மக்களை வழிமறித்து மலை மீதிருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு போக சொல்வது; தர்காவிடம் அனுமதி பெறாமல், தர்காவிற்கு சொந்தமான இடத்தில் கேமராக்கள் வைப்பது; மின் கம்பங்களை ஊன்றுவது; பழுதடைந்த தர்கா கட்டடத்தின் மேல் இடிதாங்கி வைக்கக் கூட அனுமதி கொடுக்காமல் நெருக்கடி கொடுப்பது; மலை மீது உணவு எடுத்துக்கொண்டு சாப்பிட போகும் மக்களை சோதனை என்ற பெயரில் அச்சுறுத்துவது என போலீசு மேற்கொண்டு வந்த தொடர் அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி ஆகஸ்ட் 19-ஆம் தேதியன்று மக்கள் அதிகாரக் கழகம், ம.க.இ.க. தோழர்கள் தலைமையில் தர்கா நிர்வாகிகள் மற்றும் ஜனநாயக சக்திகளை திரட்டி மாநகர போலீசு ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.
12. இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவ்வழக்கில் நாமும் ஒரு தரப்பினராக இணைந்து சட்ட ரீதியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.
13. திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்கத்தின் அடையாளமாகவும், தர்காவில் ஆடு-கோழி பலியிட்டு வணங்கியதன் சாட்சியாகவும் விளங்கும் தர்கா நிர்வாகி பாஷாவையும், தர்காவில் ஆடு வெட்டி வந்தவரான பரமசிவத்தையும் ஆவணப்படுத்தும் விதமாக “பரமசிவமும் பாஷாவும்” என்ற ஆவணப்படம் தயார் செய்யப்பட்டது. இந்த ஆவணப்படத்தின் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி மதுரையில் ஆகஸ்டு 25 அன்று நடக்க இருந்ததையொட்டி தோழர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில், மதுரை போலீசு, ஆவணப்படத்தைத் திரையிடக் கூடாது என கடைசி நேரத்தில் தடுத்தது. ஆகையால், ஆவணப்படம் திரையிடும் கூட்டமானது, போலீசின் அடக்குமுறையைக் கண்டிக்கும் கூட்டமாக நடந்தேறியது. தற்போது இந்த ஆவணப்படம் வினவு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, சங்கிக் கும்பலின் கலவர முயற்சிகளையும் அதற்கு உறுதுணையாக செயல்படும் போலீசு, நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் எமது தோழர்கள், மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தியும், அதற்கு எதிராக மக்களைத் திரட்டி போராடியும் வருகின்றனர். சங்கிக் கும்பலின் சதித்திட்டத்தை முறியடிக்கும் இப்போராட்டத்தில் பாசிச எதிர்ப்பு சக்திகள் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ளுங்கள், பாசிச கும்பலை வீழ்த்துவதை நோக்கி முன்னேறுவோம்!
தகவல்:
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.
![]()
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











