கேரள சி.பி.எம். அரசின் ‘தீவிர வறுமை’ ஒழிப்பா? ஒளிப்பா?

கேரளாவில் 90 சதவீத பழங்குடி குடும்பங்களுக்கு இன்னும் நிலம் இல்லை என்றும், பலர் மின்சாரம், கழிப்பறைகள், குடிநீர் இல்லாமல் பிளாஸ்டிக்கால் மூடிய கூடாரங்களில் மிகவும் அவலநிலையில் வசித்து வருவதாகவும் பழங்குடி ஆர்வலர்கள் கேரளாவின் உண்மை நிலையை அம்பலப்படுத்தியுள்ளனர்.

0
கேரளாவில் பிளாஸ்டிக் கூடாரங்களில் வசித்துவரும் காடர் பழங்குடிகள்

வம்பர் 1-ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளாவை அதிகாரப்பூர்வமாக ‘தீவிர வறுமை’ இல்லாத மாநிலமாக அறிவிக்க உள்ளார். இந்த விழாவில் மோகன்லால், மம்மூட்டி, கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கேரளாவில் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு ‘தீவிர வறுமை’யை ஒழிப்பதற்காக முதல் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி உணவு, தங்குமிடம், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதன் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள 64,006 குடும்பங்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு தீவிர வறுமையை ஒழித்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் “59,277 குடும்பங்கள் தீவிர வறுமையிலிருந்து மேம்படுத்தப்பட்டுள்ளன.. 2021 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 64,006 குடும்பங்களில், 4,421 நபர்கள் (ஒற்றை உறுப்பினர் குடும்பங்கள்) இறந்துவிட்டனர், மேலும் 261 நாடோடி குடும்பங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 4,729 குடும்பங்களைத் தவிர, மீதமுள்ள குடும்பங்கள் நுண் திட்டங்கள் மூலம் மறுவாழ்வு பெற்றுள்ளன,” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘தீவிர வறுமை’ ஒழிப்பு அறிவிப்பை எதிர்த்து, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்து 200 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் ஆஷா பணியாளர்கள் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் “கேரளாவின் வறிய ஆஷா பணியாளர்களான நாங்கள் மாநில அரசின் வறுமை ஒழிப்பு அறிவிப்பு விழாவிலிருந்து விலகுமாறு மூத்த நடிகர்களை அன்புடனும், பணிவுடனும் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக 26,125 ஆஷா தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 233 ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் தொடர்ந்து துயரத்தில் வாழ்ந்து வரும்போது, கேரளா தீவிர வறுமையிலிருந்து விடுபட்டுவிட்டதாகக் கூற முடியாது. இந்த நிகழ்வில் பங்கேற்பதன் மூலம், நடிகர்கள் தங்களை அறியாமலேயே இந்தப் பொய்யை ஊக்குவிப்பதில் ஒரு பகுதியாக மாறிவிடுவர்” என்று தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் “தலைமைச் செயலகத்தின் முன் உள்ள ஆஷா போராளிகளாகிய எங்களை தயவுசெய்து பாருங்கள்! நாங்கள் மூன்று வேளை உணவுக்குப் பணம் செலுத்த முடியாதவர்கள்; எங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க, மருத்துவச் செலவுகளுக்குப் பணம் செலுத்த, கடன்களைத் திருப்பிச் செலுத்தப் போராடுபவர்கள். எங்கள் துயரத்தை நிவர்த்தி செய்யாமல் கேரளாவை தீவிர வறுமையிலிருந்து விடுவித்துவிட்டதாக அறிவிப்பது அரசாங்கத்தின் ஏமாற்று வேலை என்பதைத் தவிர வேறில்லை” என்று கூறி மூத்த நடிகர்களைப் போராட்டக் களத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.


படிக்க: விழிஞ்சம் துறைமுகம்: கேரள சி.பி.எம். அரசின் அதானி சேவை


முன்னதாக, அக்டோபர் 25 அன்று, பழங்குடி மக்கள் அதிக அளவில் வாழும் வயநாடு மாவட்டம் ‘தீவிர வறுமை’யிலிருந்து விடுபட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. அங்குள்ள பழங்குடி மக்களும் அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழங்குடி ஆர்வலரான மணிக்கூத்தன் பணியன் “இங்குள்ள மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை கூட சரியான உணவை வாங்க முடியாத நிலையில் இருக்கும்போது, அரசாங்கம் எப்படி தீவிர வறுமையை ஒழித்ததாகக் கூற முடியும்,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவில் 90 சதவீத பழங்குடி குடும்பங்களுக்கு இன்னும் நிலம் இல்லை என்றும், பலர் மின்சாரம், கழிப்பறைகள், குடிநீர் இல்லாமல் பிளாஸ்டிக்கால் மூடிய கூடாரங்களில் மிகவும் அவலநிலையில் வசித்து வருவதாகவும் பழங்குடி ஆர்வலர்கள் கேரளாவின் உண்மை நிலையை அம்பலப்படுத்தியுள்ளனர்.

நாளொன்றுக்கு 233 ரூபாய் என்ற சொற்ப ஊதியம் பெறும் ஆஷா தொழிலாளர்களின் கேள்விகளுக்கும் பிளாஸ்டிக்கால் மூடப்பட்ட கூடாரங்களில் வாழும் வீடற்ற பழங்குடி மக்களுக்கும் கேரள சி.பி.எம். அரசும் சி.பி.எம். தோழர்களும்தான் பதிலளிக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க