மணிப்பூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடி!

பாசிச கும்பலின் இந்த நயவஞ்சக நாடகங்களை நம்பி ஏமாறுவதற்கு மணிப்பூர் மக்கள் தயாராக இல்லை. மோடி வருகையை எதிர்த்து மணிப்பூரில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் திட்டமிட்டு தொடங்கிய இன அழிப்புக் கலவரம் இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்றுவரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை.

இந்த இன அழிப்புக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளாக மணிப்பூர் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும்போது அங்கு எட்டிக் கூடப் பார்க்காத பிரதமர் மோடி, சுமார் “864” நாட்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 13 அன்றுதான் மணிப்பூருக்கு சென்றிருக்கிறார். மொத்தமாக ஐந்து மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தையே மணிப்பூரில் செலவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று சந்திக்காமல், பொதுக்கூட்டத்தில் மட்டும் பேசிவிட்டு மோடி கிளம்பியிருக்கிறார். அதிலும், இப்பொதுக்கூட்டத்திற்கு வந்தால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று மக்கள் மிரட்டி வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், ஒட்டுமொத்த மணிப்பூர் மக்களும் மோடிக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர் என்பது மீண்டும் அம்பலமாகிறது.

மேலும், பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் இனக்கலவரம் குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசாமல், மணிப்பூரின் பெருமையையும், மணிப்பூருக்காக இந்திய அரசு உள்ளது என்றும் அயோக்கியத்தனமாக வாய்ச்சவடால் அடித்துள்ளார்.

ஆனால், மோடியின் வருகையையொட்டி மணிப்பூரில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளே அங்கு நிலவும் வன்முறைச் சூழலை எடுத்துக்காட்டுகிறது. மோடி வருகைக்காக இராணுவம், மத்தியப் படைகள், மாநில போலீசுத்துறை என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. முக்கியப் பகுதிகளில் துப்பறியும் நாய்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் கருவிகள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டன. பொதுக்கூட்டத்தில் மக்களை வெகு தொலைவில் நிற்க வைத்துவிட்டு மோடி உரையாற்றியதன் மூலம் மணிப்பூர் மக்களை இழிவுப்படுத்தினார்.

அதேபோல், மணிப்பூரில் பா.ஜ.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட மோடி சந்திக்க மறுத்துள்ளார்.

மணிப்பூருக்குச் சென்றபோது மோடி மேற்கொண்ட இந்நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்கள் மீது மோடிக்கு துளியளவும் அக்கறை இல்லை என்பதையும் அம்மக்கள் மீதான வெறுப்பையும் அப்பட்டமாக காட்டுகிறது.

உண்மையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பலத்த அடிவாங்கிய மோடி-அமித்ஷா கும்பல், இழந்த தனது மக்கள் அடித்தளத்தை சரிசெய்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாசிச கும்பலுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளில் மணிப்பூர் கலவரம் முக்கியமானதாக அமைந்தது.

குக்கி இன மக்களை காடுகளில் இருந்து விரட்டியடித்து கேள்விக்கிடமற்ற வகையில் அங்குள்ள கனிமவளங்களை சுரண்டுவதற்கும், மெய்தி இன மக்களை தன்னுடைய அடித்தளமாக மாற்றுவதற்கும் திட்டமிட்டு மணிப்பூரில் இன அழிப்புக் கலவரத்தை பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். கும்பல் தூண்டிவிட்டது.


படிக்க: மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் பாசிச கும்பலின் நரவேட்டை!


ஆனால், ஒரு கட்டத்தில் மணிப்பூர் பிரச்சினை பாசிச கும்பலுக்கே நெருக்கடியாக மாறியது. பா.ஜ.க. அடித்தளமாக மாற்றத் துடித்த மெய்தி இன மக்களே மோடி கும்பலுக்கு எதிராக திரும்பினர். குக்கி பழங்குடியின பெண்கள் மீது நடத்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் அம்பலமாகி ஒட்டுமொத்த நாட்டையும் கொதித்தெழ செய்தது. சர்வதேச அளவில் பாசிச மோடியின் உண்மை முகம் கிழிந்து தொங்கியது.

எனவே, இந்நெருக்கடிகளை தீர்ப்பதற்காகவும், இழந்த மக்கள் அடித்தளத்தை திரும்ப பெறுவதற்காகவும், அடுத்தடுத்துவரும் சட்டமன்றத் தேர்தல், 2027 மணிப்பூர் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே மோடியின் மணிப்பூர் வருகை நடந்துள்ளது.

ஆனால், பாசிச கும்பலின் இந்த நயவஞ்சக நாடகங்களை நம்பி ஏமாறுவதற்கு மணிப்பூர் மக்கள் தயாராக இல்லை. மோடி வருகையை எதிர்த்து மணிப்பூரில் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 13 அன்று மோடி ஊர்வலம் செல்லும் இடத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மோடிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதேபோல், மெய்தி மக்களை அடிப்படையாக கொண்டுள்ள மணிப்பூர் மக்கள் கட்சியை (MPP – Manipur People’s Party) சேர்ந்தவர்களும் மோடிக்கு எதிராக போராட்டத்தை நடத்தினர். மணிப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் “மோடி வெளியே போ” என்ற முழக்கங்களை முன்வைத்து போராட்டம் நடத்தினர். சூரசந்பூர் எனும் பகுதியில் மணிப்பூர் பெண்கள் மோடிக்கு எதிராக பேரணி நடத்தினர். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இளைஞர்கள் மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறிப்பாக, பூங்கையார் தொகுதியில் 43 பா.ஜ.க. உறுப்பினர்கள் மோடி வருகைக்கு முன்னர் பா.ஜ.க. கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். இவை அனைத்தும் பாசிச கும்பலின் நயவஞ்சக நாடகங்களையும், மோடியின் வெற்று வாய்ச்சவடாலையும் மணிப்பூர் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகின்றன.


அசுரன்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க