31.10.2025

ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்கப்படும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்!
போராடும் மாணவர்களுக்குத் துணை நிற்போம்!
தமிழ்நாடு அரசே உடனடியாக தலையிடு!

ந்தியாவின் முதல் சட்டப் பல்கலைக்கழகமான, சென்னை தரமணியில் இருக்கும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மாணவர்களை சாதிரீதியாக மதரீதியாகப் பிளவுபடுத்தும் இந்துத்துவ குண்டர்களின் கூடாரமாக மாற்றப்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாகமோ ஆர்.எஸ்.எஸ் குண்டர்களின் தலைமைப் பீடமாகச் செயல்படுகிறது. உரிமைகளுக்காக, ஜனநாயகத்திற்காகப் போராடக்கூடிய இடதுசாரி மாணவர்கள், அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமிய மற்றும் தலித் மாணவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்; தாக்கப்படுகிறார்கள், இடைநீக்கம் என்ற பெயரில் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் அவர்களுடைய கல்வியுறிமை பறிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட, இஸ்லாமிய மற்றும் முற்போக்கு மாணவர்கள் மீதான இந்த ஒடுக்குமுறை தீவிரமடைந்துள்ளது.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களின் நுழைவு:

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பொதுவாக அங்கு படிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்களைத் தவிர மற்றவர்கள் வெளியிலிருந்து வளாகத்திற்குள் செல்ல வேண்டுமானால் முறையான காரணங்கள் அல்லது அனுமதி இருந்தால் மட்டும்தான் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் 2024 – ஜூலை 4 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் இருவர் இரகசியமான முறையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஆவணங்களைக் கையில் வைத்துக்கொண்டு மாணவர்களிடையே சாதிய மதவாத கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தனர்.

குறிப்பாக, ஏ.பி.வி.பி-யின் (ABVP) அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கையில் வைத்துக்கொண்டு, நாங்குநேரியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சின்னதுரை ஆதிக்க சாதிவெறி கொண்ட மாணவர்களால் தாக்கப்பட்டவுடன் தமிழ்நாடு அரசால் நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டியின் பரிந்துரையை விமர்சித்தும் அந்த அறிக்கை இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது என்றும் பிரச்சாரம் செய்துள்ளனர்.

இதனை அறிந்துகொண்ட சட்டக்கல்லூரி மாணவர்கள், குறிப்பாக சமூக அக்கறைகொண்ட, அரசியல் உணர்வு கொண்ட மாணவர்கள் நேரில் சென்று ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் இருவரையும் விசாரித்துள்ளனர்.

விசாரிக்கும் போது அதிர்ச்சியளிக்கும் விவரங்கள் வெளிவந்தது. அந்த குண்டர்களின் கையிலிருந்த டைரியில் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் மற்றும் பெண்களின் கழிவறைக்குச் செல்வதற்கான வழி, சில மாணவர்களின் பெயர்கள் என பல்கலைக்கழகத்தின் மொத்த உள்கட்டமைப்பின் வரைபடமும் இருந்தது. இதுபோல் சென்னையில் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட கல்லூரியின் விவரங்கள் இருந்துள்ளது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட மாணவர்கள், உதவிப் பேராசிரியர் ஹாசன் அவர்களுக்கு தகவல் தெரியப்படுத்தி குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்தனர். உடனடியாக உதவிப் பேராசிரியர்கள் இருவர் (ஹாசன், ஜெய்சங்கர்) நேரில் வந்து ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை விசாரித்தனர். அப்போது சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரின் சட்டையைக் கிழித்து ஆர்.எஸ்.எஸ் குண்டர் ஒருவர் தாக்குதலிலும் ஈடுபட்டார். சிறிய சலசலப்பிற்குப் பின் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருவரையும் ஒப்படைத்து அவர்கள் மீது போலீசில் வழக்குத் தொடுக்குமாறு வலியுறுத்தினர்.

ஆனால் தலைகீழாக, அதன்பிறகு நடந்தது அனைத்தும் ஜனநாயக விரோதமான ஒடுக்குமுறைதான்.

பல்கலைக்கழக ஜனநாயகத்திற்குப் படுகுழி!
இந்துத்துவ குண்டர்களுக்குப் பாதுகாப்பு!
பல்கலைக்கழக நிர்வாகத்தின் சங்கித்தனம்!

சட்டக் கல்லூரி மாணவர்கள் சிறைப்படுத்திக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் குண்டர்களின் மீது போலீசில் வழக்குத் தொடுக்காமல் அவர்களை பாதுகாக்க முயற்சி செய்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். நீண்ட நேரம் காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நிர்வாகம் திட்டமிட்டே காலம் தாழ்த்துவதை அறிந்துகொண்டு போராட்டத்தில் இறங்கினர். இப்போராட்டம் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. ஆனாலும் போராடிய மாணவர்களின் தடுப்பையும் மீறி பல்கலைக்கழகத்தின் மகிழுந்தில் போலீசு பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அழைத்துச் செல்லப்பட்டு எந்தவித வழக்கும் விசாரணையும் இன்றி விடுவிக்கப்பட்டனர்.

இதனையும் கண்டித்து போராட்டத்தைத் தொடர்ந்த மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் போராட்டத்தைக் களைக்கும் நோக்குடன் கண்துடைப்புக்காக ஒரு விசாரணை கமிட்டி அமைப்பதாகவும், ஐந்து நாட்களுக்குள் அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குத் தொடுப்பது குறித்து முடிவு செய்யலாம் என்றும் துணைவேந்தர் சந்தோஷ் குமார் நேரடியாக வந்து வாக்குறுதியளித்தார். மாணவர்கள் நிர்வாகத்தின் கயமத்தனத்தை புரிந்துகொண்டு எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தையும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

பல்கலைக்கழகம் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் விஜயலட்சுமி தலைமையில் நான்கு பேர் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, மாணவர்கள் மறுநாள் பல்கலைக்கழகத்தில் காலை நுழையும் போதே ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது, அந்த அறிவிப்பு பல்கலைக்கழக சுவர்களில் பரவலாக ஒட்டவும் பட்டது.

“பல்கலைக்கழக வளாகத்திற்குள் கலவரத்தில் மற்றும் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவதோடு, சீர்மிகு சட்டப் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்” – சூழ்ச்சி நிறைந்த இந்த அறிவிப்பு போராடிய மாணவர்களுக்கு எதிரான மிரட்டல், பல்கலைக்கழக ஜனநாயகத்திற்கு வெட்டப்பட்ட படுகுழி.

குறிப்பாக இரகசியமாக பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து சாதி மற்றும் மதவெறி பிரச்சாரம் செய்த ஆர்.எஸ்.எஸ் குண்டர்களைப் பாதுகாக்க பல்கலைக்கழக நிர்வாகம், நடந்தது ‘சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல்’ என திரித்து திசைதிருப்பும் சூழ்ச்சியைச் செய்தது.

விசாரணை தொடங்குவதற்கு முன்பே வெளியிடப்பட்ட அறிவிப்பு பல்கலைக்கழக நிர்வாகத்தின், குறிப்பாக துணைவேந்தர் சந்தோஷ் குமாரின் சங்கித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியது. பின்னர் அமைப்பாக்கப்பட்ட விசாரணைக் கமிட்டியின் விசாரணையில் இந்த சங்கித்தனத்தின் முட நாற்றம் வீசாமல் மணக்குமா என்ன?

பலமுறை முறையிட்டும், போராடியும் விசாரணைக் கமிட்டியின் அறிக்கை வெளியிடப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ் குண்டர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக பல்கலைக்கழக வளாக ஜனநாயகத்தை வேகவேகமாக வெட்டிச் சுருக்கும் அடக்குமுறை தொடங்கியது.

பல்கலைக்கழகத்தில் முற்போக்கு மாணவர் அமைப்புகள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தி வந்த “எரிதழல்”, “ஜெய் பீம்” போன்ற வாசகர் வட்டத்தை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. விளையாட்டு மைதானத்தில் இருக்கும் கேலரி (GALLERY) மூடப்பட்டது. அம்பேத்கரின் “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற நூலை மாணவிகள் படித்து விவாதித்துக் கொண்டிருந்த போது நூல் பறிக்கப்பட்டு “இதற்கெல்லாம் யார் அனுமதி கொடுத்தது” என்று மிரட்டப்பட்டார்கள். அடக்குமுறைகளை எதிர்கொள்ள முடியாமல் குறிப்பாக தேர்வு காலமும் நெருங்கியதால் போராடவும் வாய்ப்பு இல்லாமல் இப்போது வரை வாசகர் வட்டங்கள் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருக்கும் பூங்காவில் நடத்தப்படுகிறது.

மேலும், இந்தக் கல்வியாண்டு முழுவதும் இப்போராட்டத்தில் முன்னணியில் இருந்த மாணவர்கள் குறிவைக்கப்பட்டு நிர்வாகத்தால் பல்வேறு முனைகளில் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் உணர்வும் உரிமைக் குரலும்
நிர்வாகத்தின் தடைகளை
 உடைத்தெழுந்தது!

2024 கல்வியாண்டில் அடக்குமுறை செலுத்தி மாணவர் போராட்டங்களுக்கு முடிவு கட்டிவிட்டதாக மனப்பால் குடித்த பல்கலை நிர்வாகத்திற்கு எஞ்சியது ஏமாற்றமே?

சுயமரியாதையும், உரிமைக் குரலும் ஒரு மனித இயல்பு, பேராற்றல் கொண்டது. அணைபோடவும், அடக்கி வைக்கவும் முடியாது. பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பாடம் எடுத்தனர் மாணவர்கள்.

பெண்களுக்கு விடுதி இல்லாத பல்கலைக்கழகத்தின் அவல நிலையைக் கண்டித்து, உடனடியாக விடுதியை உறுதிப்படுத்து என சட்டப் பல்கலைக்கழக மாணவிகளின் முழக்கம், 2025 கல்வியாண்டை பறையோசையாய் வரவேற்றது. இரவு முழுவதும் போராட்டம் உறுதியாகத் தொடர்ந்தது. நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்வதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆனாலும், மாற்று ஏற்பாடு செய்து தருவதாகத் தெரிவித்த நிர்வாகம் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் இருப்பதைக் கண்டித்து மாணவிகள் மீண்டும் முறையிட்டனர். ஆனால் போலீசு பல்கலைக்கழக வளாகத்திற்குள் குவிக்கப்பட்டு, போராட்டம் அடக்குமுறை செலுத்தி ஒடுக்கப்பட்டது.

அடுத்த நாளே போலீசின் அத்துமீறலையும், அடக்குமுறையையும் கண்டித்து போலீசு நிலைய முற்றுகை போராட்டத்தை அறிவித்து மாணவிகளின் போராட்டத்திற்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் வலு சேர்த்தனர்.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பல்கலைக்கழகத்தில் இணைந்த மாணவர்களுக்கு 3 ஆண்டுகளாக விடுதி வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வந்தனர். பலமுறை நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. அதன்பின் சில மாணவர்கள் மாணவர் அமைப்பு தோழர்களின் துணையோடு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியர் விடுதி வேண்டி நடைபெற்ற போராட்டத்திற்குப் பின் பத்து நாட்கள் கழித்து இப்போராட்டம் நடைபெற்றது. அப்போதும் பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது. அதுமட்டுமின்றி போராடிய மாணவர்களின் குடும்பத்தினரை அழைத்து மிரட்டினர். பயந்த குடும்பத்தினரின் அழுத்தமும் சேர்ந்து சிலர் படிப்பை நிறுத்திவிட்டு ஊருக்குச் சென்றுவிடலாம் என்ற ஆபத்தான முடிவுக்குத் தள்ளப்பட்டனர்.

நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து RSYF, SFI, TSF ஆகிய மாணவர் அமைப்புகள் இணைந்து பல்கலைக்கழகத்தின் வாயிலில் போராட்டம் நடத்தினர்.

கல்வியாண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே ஒன்றன்பின் ஒன்றாக ஒரு அலைபோல் எழுந்த மாணவர்கள் போராட்டம் பல்கலை நிர்வாகத்தின் கனவுகளைத் தவிடுபொடியாக்கியது. பொறுத்துக்கொள்ள முடியாமல் அடக்குமுறையின் இரண்டாவது கட்டத்தை அடிப்படை நேர்மையின்றி வெறிபிடித்த முறையில் தொடுத்தனர்; தொடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் பழிவாங்கும் படலம்:

2025 – கல்வியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு போராட்டத்தில் முன்னணியில் இருந்த மாணவர்கள் குறிவைக்கப்பட்டு பல்வேறு உப்பு சப்பு இல்லாத காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தற்போது உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கும் ஒன்பது மாணவர்களில் 4 பேர் 60 நாட்களுக்கும் மேலாக இடைநீக்கம் செய்யப்பட்டுதான் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். விசாரணைக் கமிட்டிகள் அமைத்து விசாரணை என்ற பெயரிலும், விளக்கக் கடிதங்கள் கேட்டும் துன்புறுத்துவதன் மூலம் மன ரீதியாகவும் தாக்கப்படுகின்றனர்.

அக்டோபர் மாத தொடக்கத்தில் தொடர்ச்சியாகத் துன்புறுத்தப்படும் மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பல்கலை நிர்வாகம், வெறி தலைக்கேறி போராட்ட முன்னணியில் இருந்த ஒன்பது மாணவர்களைக் குறிவைத்து, அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டு இருப்பதாகக் கூறி (ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுக்கு எதிரான போராட்டத்தை இந்த ஒன்பது பேரும் சக மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி திரித்து இணைத்தனர்) விசாரணை கோரினர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் மிகவும் இழிவான பொய்க் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அவர்களே மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தனர். இந்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டதும், விசாரணைகளும் திட்டமிட்டே இந்த கல்வியாண்டின் முதல் பருவத் தேர்வுகள் தொடங்கும் காலத்தில் முன்தள்ளப்பட்டது. இவையெல்லாம் முழுக்க முழுக்க ஒன்பது பேரையும் தேர்வு எழுத விடாமல் இறுதி நேரத்தில் நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாமல், போராடவும் முடியாமல் வாயடைக்கப்பட்டு கைகளும் கட்டப்பட்டு, கழுத்தறுப்பது போல் இடைநீக்கம் செய்வதற்கான திட்டம்.

ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுக்கு எதிராக என்று சொல்லிக்கொள்ளப்பட்டு 2024 – ல் அமைக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் விஜயலட்சுமி தலைமையிலான விசாரணைக் கமிட்டியின் அறிக்கை ஒரு ஆண்டுக்குப் பிறகு இப்போது சிங்காரவேலர் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் தாக்குதலுக்குத் துணையாக வெளியிடப்பட்டது. (உதவிப் பேராசிரியர் ஒரு நபர் ஆணையத்தின் குறுக்கு விசாரணையின் போது, தான் விசாரணைக் கமிட்டியின் அறிக்கையை 2024 -ஆம் ஜீன் மாதமே துணைவேந்தரிடம் ஒப்படைத்துவிட்டதாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது) அந்த அறிக்கையும் உண்மைகளைக் குழி தோண்டி புதைத்துவிட்டு வெறும் பொய்யால் கட்டமைக்கப்பட்ட அறிக்கை.

இறுதியாக அவர்கள் திட்டமிட்ட முறையில் ஒரு நபர் ஆணையம் அக்டோபர் மாதம் கூடியது. ஒன்பது மாணவர்களும் வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களின் தலைமையில் புகைப்படம் மற்றும் எழுத்துப்பூர்வமாக இருந்த ஆதாரங்களை ஒப்படைத்து தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

இவர்களுடைய ஆதாரங்களும், கருத்துக்களும் செவிடன் காதில் சங்கூதியது போல் காற்றில்தான் கலந்துள்ளது என்ற கசப்பான உண்மை ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை வெளிவந்தவுடன் புரிந்தது.

இந்த பழிவாங்கும் படலத்தில் ஆர்.எஸ்.எஸ் சங்கியான முன்னால் துணைவேந்தரின் ஆணைக்கிணங்க மாணவர்களுக்கு எதிராக வினையாற்றிய உதவிப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நபர் ஆணையம் – ஒரு நபரும் சங்கி!
ஆணையத்தின் அறிக்கை – ஆர்.எஸ்.எஸ் குப்பை!

மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலரின் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையானது உண்மைக்குப் புறம்பான பித்தலாட்டம் நிறைந்த, ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு சங்கியின் குமுறல் ஆகும்.

இந்த பித்தலாட்டம் நிறைந்த அறிக்கை ஒன்பது மாணவர்களின் மீதான பொய்க் குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்துவதாகவே உள்ளது.

சான்றாக,

ஒன்பது பேரும் சக மாணவர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பொய்யை அறிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஏ.பி.வி.பி ஒன்றும் ஒரு தடைசெய்யப்பட்ட மாணவர் அமைப்பு கிடையாது தேசிய அளவில் இருக்கிறது என்று கூச்சல் எழுப்புகிறது.

வெளியிலிருந்து வந்த நபர்கள் (ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள்) அட்மிஷனுக்காக உள்ளே வந்து மாணவர்களிடையே பேசியதாகத் தெரிந்த உண்மையை மறைத்து திரிக்கிறார்கள். (உதவிப் பேராசிரியர் விஜயலட்சுமி தலைமையிலான கமிட்டியின் அறிக்கையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான ஆவணங்கள் அந்த குண்டர்களின் கையிலிருந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது)

ஆர்.எஸ்.எஸ் குண்டர்களில் ஒருவர் விவேகானந்தர் புகைப்படம் வைத்திருந்தாக அறிக்கையில் சொல்லப்படுகிறது. விவேகானந்தர் புகைப்படம் வைத்திருப்பவருக்கும் நியாயம் கற்பிக்கப்பட்டு, கூடுதலாக விவேகானந்தர் வரலாறும் விரிவாக அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

“குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஏன் உங்களை இடைநீக்கமோ, பல்கலைக்கழக மாணவர் பட்டியலிலிருந்து நிரந்தர நீக்கமோ செய்யக் கூடாது” என்று விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.

ஒருதலை பட்சமான ஜனநாயக விரோதம் நிறைந்த ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் அதிகாரத் திமிரில் ஒன்பது மாணவர்களுக்கு நோட்டீஸ் என்ற பெயரில் மிரட்டல் விடுத்துள்ளது.

அடக்குமுறைக்குப் பணியாமல் களத்தில் மாணவர்கள்;
நாம் என்ன செய்வது?

மாணவர்களின் உரிமைகளுக்காகவும், பறிக்கப்படும் பல்கலைக்கழக ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நிர்வாக அடக்குமுறைக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் இருக்கும் ஒன்பது மாணவர்களையும் இறுதியாக தேர்வு எழுத விடாமல் முடக்கும் பல்கலைக்கழகத்தின் சதியை எதிர்த்துத்தான், சட்ட ரீதியாகவும், களத்தில் உண்ணாநிலை போராட்டத்தையும் தற்போது மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். மாணவர்களின் போராட்டத்திற்குப் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி இறுதிவரை துணைநிற்கும்.

பல்கலைக்கழக நிர்வாகம், உதவிப் பேராசிரியர்கள் சிலர் மற்றும் பதிவாளர் கெளரி ரமேஷ், டீன் பாலாஜி இவர்களால் அமைக்கப்பட்ட சிங்காரவேலர் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், முன்னால் துணைவேந்தர் சந்தோஷ் குமார், போலீசு என ஒருங்கிணைந்த முறையில் நடத்தப்படும் இந்த தாக்குதல் என்பது ஒன்பது மாணவர்களுடைய உரிமைகளின் மீது மட்டும் நடத்தப்படும் தாக்குதல் அல்ல!

இடதுசாரி, அம்பேத்கரிய – பெரியாரிய மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு எதிரான தாக்குதல்; தலித் மற்றும் இஸ்லாமிய மாணவர்களுக்கான மிரட்டல்.

தமிழ்நாட்டின் அரசியல் தலைநகரத்தில் இருக்கும் ஒரு முதன்மையான சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடிக்கும் கொட்டாரம், பெரியார் மண் என்று மார்தட்டிக்கொள்ளும் தமிழ்நாட்டிற்கு விடப்பட்ட சவால்; ஓர் எச்சரிக்கை.

உயர்கல்வியையும், பல்கலைக்கழகங்களையும் கைப்பற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சவுக்கடி கொடுக்க,

மாணவர்களே, வழக்கறிஞர்களே, ஜனநாயக சக்திகளே ஒருங்கிணைந்து குரல் எழுப்புவோம்.

தமிழ்நாடு அரசும், சட்டத்துறை அமைச்சரும் உடனடியாக இதில் தலையிட வேண்டும்.

  • டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்குவதை அனுமதியோம்!
  • மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலர் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் ஒரு தலைப்பட்சமான அறிக்கையைக் கண்டிக்கிறோம்!
  • உண்ணாநிலை போராட்டத்தில் இருக்கும் ஒன்பது மாணவர்களையும் உடனடியாக தேர்வெழுத அனுமதித்திடு!
  • அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகமே ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுக்குத் துணைபோகாதே!
  • சாதி, மத ரீதியாக மாணவர்களைப் பிளவுபடுத்தும் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பைத் தடை செய்!
  • சட்டப் பல்கலைக்கழக ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நீதிக்காகவும் தமிழ்நாடு அரசே உடனடியாக தலையிடு!


இவண்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர-மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க