மேற்குவங்க மாநிலம் பஸ்சிம் பர்தமானில் உள்ள தொழில்துறை நகரமான ஆண்டாளிலுள்ள அனைத்து மீன் மற்றும் இறைச்சிக் கடைகளை அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சத் பூஜை பண்டிகையையொட்டி மூடுமாறு பா.ஜ.க. குண்டர் படை கடை உரிமையாளர்களிடம் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த உத்தரவு நகரத்தில் உள்ள மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. இந்த மிரட்டல் இருப்பினும் கடைக்காரர்கள் கடைகளைத் திறந்து வைத்துள்ளனர்.
இதற்கு முன்பு ஒருமுறையும் ஜெகநாதர் கோவில் திறப்பு விழாவிலும் திகா மற்றும் நபத்வீப் சந்தைகளில் உள்ள இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும் என பா.ஜ.க.வால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நாட்களில் யாரும் இறைச்சி உண்ணக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. ஏன்? ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கூட ஹோலி பண்டிகையின் நபத்வீப் நகராட்சியில் அனைத்து அசைவ கடைகளையும் மூன்று நாட்களுக்கு மூடுமாறும் அந்நாட்களில் யாரும் இறைச்சி உண்ணக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தது. திரிணாமுல் காங்கிரஸின் இந்த உத்தரவு என்பது காவி கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியானதையே வெளிப்படுத்துகிறது.
அக்டோபர் 25 (சனிக்கிழமை) ஆம் தேதி பா.ஜ.க.வின் இராணிகஞ்ச் மண்டல் – 4 இன் தலைவரான ராகல் சந்திர தாஸ், கட்சியின் லெட்டர்பேடில் ஆண்டாள் போலீசுக்கு சத் பூஜையின் போது சந்தையில் இறைச்சி விற்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இதில், சத் பூஜை பக்தர்கள் தமோதர் ஆற்றுக்குச் செல்வதற்கு சந்தையின் குறுகிய பாதைதான் பயன்படுத்தப்படுவதாகவும் இறைச்சிக் கடைகளால் அவர்களுக்கு சங்கடம் ஏற்படக் கூடாது எனவும் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த கடிதம் வெளியான பிறகு, அக்டோபர் 26 (ஞாயிற்றுக்கிழமை) ஆம் தேதி மாலை ஆண்டாள் வடக்கு மற்றும் தெற்கு சந்தைகளுக்கு சென்ற பா.ஜ.க. குண்டர் படை அங்குள்ள இறைச்சி கடைக்காரர்களிடம் கடைகளை மூடுமாறு மிரட்டல் விடுத்தது.
“காவி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று கடைகளை உடனடியாக இழுத்து மூடுமாறு மிரட்டினர்” என ஜவுளிக் கடை உரிமையாளர் ஒருவர் கூறினார்.
ஆண்டாள் கொல்கத்தாவிலிருந்து 185 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு சமூக, மொழி பேசும் மக்கள் அனைவரும் பல தசாப்தங்களாக வசித்து வருகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக தெற்கு சந்தையில் மசூதியும் அமைந்துள்ளது. அதேபோல், சத் பூஜைக்கு தேவையான பொருட்களை விற்கும் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அங்கு உள்ளன.
படிக்க: மகாராஷ்டிரா: பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக மூடப்பட்ட கால்நடை சந்தைகள்
“நாங்கள் அனைவரும் ஒருமித்து வியாபாரம் செய்கிறோம். எங்களுக்குள் கடைகளை நடத்துவது தொடர்பாக எந்தவிதமான குழப்பங்களும் இதுவரை வந்ததில்லை. இதில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்” என வடக்கு சந்தையில் கடை நடத்தும் மனோஜ் குப்தா என்பவர் தெரிவித்தார்.
உள்ளூர் தொழிலதிபர்கள் கூறுகையில், “சத் பக்தர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன சடங்குகளுக்காக அருகிலுள்ள சிங்கரான் நதிக்குச் செல்வார்கள். அந்த சில மணி நேரங்களுக்கு இறைச்சிக் கடைகள் எப்படியும் திறந்திருக்காது. அதேபோல், தெற்கு சந்தையின் சாலை குறுகிய அளவில் எல்லாம் இல்லை. அகலமாகவே உள்ளது. ஆனால், இதனை பா.ஜ.க.வினர் ஏற்கவில்லை. அவர்கள் அக்டோபர் 25, 26 ஆகிய இரண்டு தேதிகளில் கடைகளை மூட நிர்ப்பந்திக்கின்றனர்” என தெரிவித்தார்.
“ஞாயிற்றுக்கிழமை மாலை பா.ஜ.க.வினர் எனது கடைக்கு வந்து கடையை மூடுமாறு மிரட்டல் விடுத்தனர். நான் இதற்கு மறுப்பு தெரிவித்தேன். ஆண்டுதோறும் சத் பூஜை நடைபெறுகிறது. ஆனால் இறைச்சிக் கடைகளை மூடக் கோரி இதுவரை கோரிக்கை வந்ததில்லை என தெளிவாகக் கூறிவிட்டேன். சத் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பவர்கள் அவற்றை வாங்குகின்றனர். அதற்கு எந்த சிரமமும் இல்லை. நீங்கள், ஏன் இறைச்சிக் கடைகளை மூடச் சொல்கிறீர்கள் என கேட்டேன்” என அஜய் மண்டல் என்கிற கடை உரிமையாளர் தெரிவித்தார்.
தெற்கு சந்தையில் துணிக்கடை உரிமையாளரான அகில் அகமது, “ஆண்டல் பகுதியில் பல தசாப்தங்களாக மதநல்லிணக்கம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சத் பூஜையின்போது, இஸ்லாமியக் குடியிருப்பாளர்கள் ஆற்றுப் படுகையைச் சுத்தம் செய்கிறார்கள். இதனால், பக்தர்கள் மதச் சடங்குகளை அங்கேயே செய்ய முடிகிறது. இந்த பண்டிகை அனைவருக்குமானதாக ஆண்டாளில் கருதப்படுகிறது. இதுபோன்ற உத்தரவு மக்களை அவமதிப்பதாகும்” எனத் தெரிவித்தார்.
பண்டிகைகளை கலவர நோக்கத்தோடு பயன்படுத்தும் காவிக் கும்பல் மேற்கு வங்கத்தில் தற்போது சத் பூஜையின் போது இறைச்சிக் கடைகளை மூடக் கோரியும் அதன்மூலம் கலவரத்தைத் தூண்டவும் முயன்று வருகிறது. மேலும், 2026-ஆம் ஆண்டில் வரவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தலில் ஒரு மாநிலமாக இருக்கும் மேற்கு வங்கத்தில் இந்து முனைவாக்கத்தை தீவிரப்படுத்துவதற்கு பண்டிகைகளை கலவரம் செய்யும் கெடு நோக்கோடு பயன்படுத்தத் துடிக்கிறது. ஆனால், சங்கி கும்பலின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்குப் பதிலாக அவர்களது நிகழ்ச்சி நிரலுக்குப் பலியாகி சங்கி கும்பல்களின் நிகழ்ச்சி நிரலைக் கையிலெடுத்து வருகிறது திரிணாமுல் காங்கிரஸ். மேற்கு வங்க மரபிற்குச் சற்றும் தொடர்பில்லாத இராம நவமிக்கு பேரணி செல்வது, ஹோலி பண்டிகையில் இறைச்சி தடை விதிப்பது என திரிணாமுல் காங்கிரஸின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
![]()
உமர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











