108-ஆம் ஆண்டு ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் வாழ்த்துகள்!

உள்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்தவும், ஏகாதிபத்தியத்திற்கு சவக்குழி தோண்டும் நமது சர்வதேச கடமையை நிறைவேற்றவும் இந்நவம்பர் புரட்சி நாளில் சூளுரைப்போம்!

108-ஆம் ஆண்டு
ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் வாழ்த்துகள்!

வாசகத் தோழர்கள் அனைவருக்கும் எமது 108-ஆம் ஆண்டு நவம்பர் 7 ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்டமைப்பு நொறுங்கி விழுந்து கொண்டிருப்பதையும் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி போராட்டங்கள் புத்துணர்ச்சி பெற்று வருவதையும் நாம் இன்று பார்த்து வருகிறோம்.

அமெரிக்கா தொடங்கி இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் என பல ஏகாதிபத்திய நாடுகளில் நெருக்கடி முற்றிவரும் நிலையில், தங்களை மீட்பர்களாக முன்னிறுத்திக் கொண்டு பாசிச சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருகின்றன. இதன் விளைவாக, உலகம் முழுவதும் கட்டற்ற சுரண்டலும் உழைக்கும் வர்க்கம் மீதான தாக்குதலும் தீவிரமடைந்து வருகிறது.

குறிப்பாக, அமெரிக்காவில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள டொனால்டு டிரம்ப் தலைமையிலான பாசிச கும்பல், இனவெறி இஸ்ரேலுடன் இணைந்து காசாவில் இன அழிப்புத் தாக்குதலை நடத்தி மக்களை கொன்று குவித்து வருகிறது. தனது நெருக்கடியைத் தீர்த்துகொள்ள உலக நாடுகள் மீது வரி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதுடன், புதிய போர்முனைகளை திறப்பதற்கான முயற்சியிலும் ஈடுபடுகிறது.

இந்தியாவில் ஆட்சியிலிருக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தனது இந்துராஷ்டிரக் கனவை அடைவதற்காக பாசிச சட்டத்திட்டங்களையும் மதவெறி தாக்குதல்களையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

அதேசமயம், உலகம் முழுவதும் மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பாசிச மோடி அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்கள், அமெரிக்காவில் பாசிச டிரம்புக்கு எதிராக “அரசன் வேண்டாம்” போராட்டம், தெற்காசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இளம் தலைமுறையினர் போராட்டம் என உலகம் முழுவதும் போராட்டத் தீ பற்றி பரவி வருகிறது.

இந்நிலையில், உள்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்தவும், ஏகாதிபத்தியத்திற்கு சவக்குழி தோண்டும் நமது சர்வதேச கடமையை நிறைவேற்றவும் இந்நவம்பர் புரட்சி நாளில் சூளுரைப்போம்! இக்கடமையை நிறைவேற்றுவதற்கு மக்கள் அடித்தளம் கொண்ட மார்க்சிய-லெனினிய கட்சியைக் கட்டியமைக்கும் பணியில் புரட்சிகர சக்திகள் விரைந்து முன்னேற வேண்டும்.

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க