நவம்பர் 11 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தி.மு.க அரசை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை 75 சதவீதத்திற்குள் ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்தாயிரமும் அதற்கு மேல் ஊனமுடையவர்களுக்கு 2,000 ரூபாயும் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கி வருகின்றது. இதனை நம்பிதான் ஆயிரககணக்கான மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்க்கையை யாருடைய துணையுமின்றி நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் கிடைக்கக் கூடிய தொகையை வைத்து தங்களை பராமரித்துக் கொள்வதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எனவே மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் . அதன் நீட்சியாகத்தான் நவம்பர் 11 அன்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (Tamil Nadu Association for the Rights of All Types of Differently-Abled and Care-givers) தலைமையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
முக்கியமாக புதுச்சேரி ₹3,000 முதல் ₹4,800, ஹரியானா ₹3,500, தெலங்கானா ₹4,016 ரூபாய் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குகின்றன. மேலும் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ஆந்திரா குறைவான ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ₹6,000, கடும் ஊனமுடையவர்களுக்கு ₹10,000, படுத்த படுக்கையாக உள்ளவர்களுக்கு ₹15,000 என்று மாதாந்திர உதவித்தொகை வழங்கி வருகின்றது. ஆனால் பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது இடத்திலுள்ள தமிழ்நாட்டில் மட்டும் ஏன் உதவித்தொகையை உயர்த்தி வழங்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கேள்வி எழுப்பினர். எனவே ஆந்திராவைப் போன்று தமிழ்நாட்டிலும் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.
பல மாவட்டங்களில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை கலைந்து போகும்படி வலியுறுத்தி அரசு போராட்டத்தைக் கலைக்க முயன்றது. ஆனால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கலைந்து செல்லமாட்டோம் என்று மாற்றுத்திறனாளிகள் உறுதியாக இருந்தனர். ஆனால் அதனைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத தி.மு.க அரசு போலீசைக் கொண்டு அடாவடித்தனமாக அனைவரையும் கைது செய்துள்ளது. மறுபுறம் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மூலம் நவம்பர் 12 அன்று தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாற்றுத்திறநாளிகள் அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. இதனால் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக மாற்றுத்திறானிகள் அறிவித்துள்ளனர்.
சமூகநீதி ஆட்சி நடக்கிறதென்று பெருமை பீற்றிக்கொள்ளும் ‘திராவிட மாடல்’ அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஆனால் போராட்டம் நடத்தினால் போலீசைக் கொண்டு ஒடுக்குவது, பேச்சுவார்த்தைகள் நடத்தி போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது போன்ற நயவஞ்சக வேலைகளில் ஈடுபடும் என்பதே கடந்த கால அனுபவம். எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உறுதியாக போராட வேண்டும். இதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும், பொது மக்களும் ஆதரவளிக்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











