புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இரண்டு பேராசிரியர்கள் மாணவிகளிடம் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்த கொடூர சம்பவம் சமீபத்தில் பொதுவெளியில் அம்பலமானது.
இதில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளை பேராசிரியரான மாதவய்யா, அங்கு முதுநிலை பயின்றுவரும் மாணவி ஒருவருக்கு அருவருக்கத்தக்க வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியது, ஆபாசமாக புகைப்படங்களை அனுப்ப சொல்வது, அனுப்பாவிட்டால் உள் மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டுவது, மாணவியை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல் பதிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, சரிவர பாடத்தில் கவனம் செலுத்த முடியாமலும், பாலியல் வக்கிரம் பிடித்த மாதவய்யாவிற்கு பயந்து மூன்று வாரங்கள் பல்கலைக்கழகத்திற்கே செல்லாமலும் இருந்துள்ளார். இந்தப் பாலியல் குற்றவாளி சுதந்திரமாக உலாவும் வரை தன்னால் படிப்பை தொடர முடியாது என அம்மாணவி பெண் ஒருவரிடம் கூறியிருப்பது அக்குரல் பதிவுகளிலிருந்து தெரிய வருகிறது.
இன்னொரு பாலியல் குற்றவாளியான பேராசிரியர் பிரவீன், அடையாளம் தெரியாத பெண் ஒருவரிடம் பேசிய குரல் பதிவும் வெளியாகி இருக்கிறது. அதில் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும், தனிப்பட்ட உதவியாளர் துணைவேந்தரிடம் தெரிவித்து விட்டதாகவும், தன் பெயரும் குற்றப் பட்டியலில் சேர்ந்துவிடும் எனவும் பதற்றத்துடன் பேசியுள்ளான். அதற்கு பதிலளித்த அப்பெண், “நான் துணை வேந்தரிடம் பேசுகின்றேன். இப்பிரச்சினையை அப்படியே விட்டுவிடு. அதுவாகவே அடங்கிவிடும். நாம் இதைப் பற்றி பேசினால்தான் பெரிதாகும். இது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கும் சாதாரண நிகழ்வுதான். புதிது ஒன்றும் அல்ல” என பதிலளித்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இக்குரல் பதிவுகளின் மூலம் பேராசிரியர்கள் என்ற போர்வையில் சுற்றித்திரியும் பாலியல் வெறிப்பிடித்த மிருகங்களால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவிகள் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வந்ததும், பல்கலைக்கழக நிர்வாகம் அதனை மூடிமறைத்து வந்ததும் அம்பலமானது.
இந்நிலையில், மாதவய்யா, பிரவீன் ஆகிய இரண்டு பேராசிரியகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த அக்டோபர் 9 அன்று 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அறவழியில் போராடிவந்த மாணவர்களை புதுச்சேரி போலீசு பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, மாணவிகளின் முடியை பிடித்து இழுத்து கொடூரமாகத் தாக்கியது. ஆறு பெண்கள் உட்பட 24 மாணவர்களை இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தது.
மாணவிகள் மீதான பாலியல் வன்முறை குறித்து முறையான விசாரணை நடத்தி, பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது போலீசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவர்களின் நியாயமான கோரிக்கையாகும். ஆனால், போலீசின் துணையோடு மாணவர்களை கொடூரமாகத் தாக்கி, கைது செய்து இப்பிரச்சினையை மூடிமறைக்கும் வேலையை பல்கலைக்கழக நிர்வாகம் செய்துள்ளது.
மேலும், மாணவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் மீது செப்டம்பர் 30 அன்றே மூத்த நிர்வாகிகள் அடங்கிய பல்கலைக்கழகக் குழு காரைக்கால் கிளையில் விசாரணை நடத்தியதாகவும், அவ்விசாரணையில் குற்றம் நடந்ததற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அப்பட்டமாக குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
இதுகுறித்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பிரவீன் குமார் கூறுகையில், “கடந்த காலங்களில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பல வழக்குகள் எழுந்துள்ளன. ஆனால், நிர்வாகம் அதை மூடிமறைத்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மீது எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அம்பலப்படுத்தியுள்ளார். மேலும், பல்கலைக்கழகத்தின் உள் புகார் குழுவின் (Internal Complaints Committe – ICC) செயலற்ற தன்மையும் நிர்வாகத்தின் போக்கும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது.
இந்நிகழ்வுகளானது கல்லூரி – பல்கலைக்கழகங்களுக்குள் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதையும், பல்கலைக்கழக நிர்வாகமும், அரசும் இவ்விகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையிலுமே செயல்பட்டு வருகின்றன என்பதையும் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.
சமீபகாலமாகவே இந்தியா முழுவதுமே கல்லூரி – பல்கலைக்கழகங்களில் மாணவிகள் மீதான வன்கொடுமைகள் நிர்வாகத்தின் துணையுடன் அதிகரித்து வருகிறது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவிக்கு இன்னும் நீதி கிடைக்காத சூழலில், அக்டோபர் 12 அன்று, டெல்லி தெற்காசிய பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு படிக்கக்கூடிய மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் வலுக்கட்டாயமாக ஆடைகள் கிழிக்கப்பட்டு, போதை மாத்திரை வாயில் திணிக்கப்பட்டு பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே வருமாறு தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டியுள்ளனர். அதனை மறுத்த பெண்ணை வளாகத்திற்கு உள்ளே பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
கேட்பதற்கு பதைபதைப்பை ஏற்படுத்தும் இச்சம்பவம் குறித்து மாணவர்கள் விடுதி காப்பாளர்களான ரிங்கு குப்தா மற்றும் அனுபமா அரோராவிடம் மாணவி தெரிவித்துள்ளார். ஆனால், அனுபமா போலீசுக்கு புகார் தெரிவிக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணை குளித்துவிட்டு படுத்துத் தூங்க சொல்லியிருக்கிறார்.
விடுதி காப்பாளர் அனுபமா அரோரா குற்றவாளிகளை பாதுகாக்கும் விதமாக மாணவியின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மாணவிக்கு பேரச்ச தாக்குதல் (Panic attack) ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தன்னையே தாக்கிக்கொள்ள முயல்வதாகவும், அதனால் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பிக்குமாறும் கூறியுள்ளார்.
இவை மட்டுமின்றி, மேற்குவங்க மாநிலத்தில் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதியன்று இரவு இரண்டாமாண்டு மருத்துவம் படித்துவரும் மாணவி (23 வயது) ஒருவர் தனது நண்பருடன் உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு திரும்பியபோது, கல்லூரி அருகே கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். இதே மேற்குவங்கத்தில் கடந்த ஜூன் மாதத்தில் கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் தலைவர் உள்ளிட்டோரால் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
அதேபோல், பா.ஜ.க. ஆளும் ஒடிசா மாநிலத்தின் பாலசோரின் ஃபக்கீர் மோகன் தன்னாட்சி கல்லூரியில் மாணவி ஒருவர், துறை தலைவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். ஆனால், போலீசும் கல்லூரி நிர்வாகமும் தான் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததையடுத்து அம்மாணவி கல்லூரி வளாகத்திற்குள்ளேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
மேற்குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிலும் கல்லூரி – பல்கலைக்கழக நிர்வாகங்களும் போலீசும் அரசும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு எதிராகவும் குற்றவாளிகளை பாதுகாக்கும் விதமாகவுமே செயல்பட்டுள்ளது. அதிலும், மேற்குவங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, “மாணவிகள் இரவு நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்க கூடாது” என அப்பட்டமான பெண்ணடிமைத்தன வக்கிர கருத்தை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு கல்லூரி – பல்கலைக்கழகங்களில் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதை தனித்த நிகழ்வாக பார்க்க முடியாது. பார்ப்பனிய ஆணாதிக்கம், ஆபாச வெறியூட்டும் மறுகாலனியாக்க நுகர்வுவெறி, போதைக் கலாச்சாரம் ஆகியவை பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருந்தாலும், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு கல்வி வளாக ஜனநாயகம் பறிக்கப்படுவதும் முக்கிய காரணமாகும்.
பல்கலைக்கழகங்களை காவி-கார்ப்பரேட் மயமாக்கும் சதித்திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல், உயர்கல்வி நிறுவனங்களில் நிதி நெருக்கடியை ஏற்படுத்துவது, ஆர்.எஸ்.எஸ். பின்னணியைச் சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக நியமிப்பது, இந்துத்துவ பிற்போக்கு சடங்குகளுக்கும் நிகழ்வுகளுக்கும் அனுமதியளிப்பதுடன் முற்போக்கு கருத்துகளை பேசும் கூட்டங்களுக்கு தடை விதிப்பது, ஏ.பி.வி.பி. குண்டர் படைகளை சுதந்திரமாக சுற்றித்திரிய அனுமதிப்பது, பார்ப்பனிய, ஆதிக்கச் சாதிவெறி கொண்ட மாணவர்களுக்கு சுதந்திரமளிப்பதுடன், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கு ஏதுவாக கல்வி நிலைய ஜனநாயக வெளியை திட்டமிட்டே ஒழித்துக்கட்டி வருகிறது. முற்போக்கு – இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்குத் தடை விதிப்பது, மாணவர் சங்க தேர்தலுக்கு நெருக்கடி கொடுப்பது, முற்போக்கு மாணவர்கள் – மாணவர் அமைப்புகளை தாக்குவது, ஒடுக்குவது போன்ற நடவடிக்கைகள் அதன் அங்கமே ஆகும்.

இவ்வாறு மாணவர் இயக்கங்கள் ஒடுக்கப்படுவதானது மாணவர்கள், குறிப்பாக, ஒடுக்கப்பட்ட – சிறுபான்மையின மாணவர்கள், மாணவிகளின் குரலை நசுக்குகிறது. இப்பின்னணியில் இருந்தே பல்கலைக்கழகங்களில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளையும், தலித் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மாணவர்களின் மீதான ஒடுக்குமுறைகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். நீதிக்கோரி போராடும் மாணவர்கள் கல்வி நிலைய வளாகத்திற்குள்ளாகவே போலீசால் கொடூரமாகத் தாக்கப்படுவதையும் இந்த அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்.
எனவே, புதுச்சேரி தொடங்கி மேற்கு வங்கம் வரை பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாகவும் நிர்வாகங்களின் மாணவர் விரோத போக்கை கண்டித்தும், குற்றச்செயலில் ஈடுபட்ட பேராசிரியர்களை கைது செய்யக் கோருவதுடன், சிதைக்கப்பட்டு வரும் கல்வி வளாக ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை இடதுசாரி, அம்பேத்கரிய, பெரியாரியம் உள்ளிட்ட முற்போக்கு மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ள வேண்டும்.
![]()
ஆழி
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











