
2018-ஆம் ஆண்டு டிசம்பரில் கர்நாடக மாநிலத்தில் கோயில் ‘பிரசாதத்தில்’ நஞ்சு கலந்து 17 பேரைக் கொன்ற கொலைகாரனான இளைய மடாதிபதிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுலூவாடி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாம்ராஜ் நகர் மாவட்டம் சுலூவாடியில் பிரபலமான மாரம்மா (மாரியம்மன்) கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை நிர்வகிப்பதில் ஏற்பட்ட அதிகாரப் பிரச்சினையில், பூசாரியும் இளைய மடாதிபதியும் 2018-ஆம் ஆண்டு திருவிழா பிரசாதத்தில் நஞ்சு கலந்து, குழந்தைகள், பெண்கள், ஒரே குடும்பத்தைச் சார்ந்தோர் என 17 பேரைப் படுகொலை செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலைகாரர்களான இளைய மடாதிபதி பட்டதா இம்மதி மகாதேவ சுவாமி உள்ளிட்ட ஏழு பேரை போலீசு கைது செய்தது.
இந்நிலையில், ஆறு ஆண்டுகளாகச் சிறையிலிருந்த முக்கியக் குற்றவாளியான சாலூர் மடத்தின் இளைய மடாதிபதி மகாதேவசாமி, உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகக் கூறி ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தான். இதனால் மனமுடைந்து போன கர்நாடக உயர்நீதிமன்றம் 17 பேரைக் கொன்ற கொலைகாரனுக்குக் கருணையுடன் சமீபத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சுலுவாடி கிராம மக்கள் கொலைகாரன் மகாதேவசாமியின் உருவ பொம்மையைக் கொளுத்தியும், உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உறவினர்களை இழந்த கிராம மக்கள், “ஆறு ஆண்டுகளைக் கடந்தும் பெருந்துயர் சம்பவத்திலிருந்து தற்போது மீளவில்லை” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
தனது அன்புக்குரியவரை இழந்த சூலவாடிக் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் “சாமியாருக்கு கிட்னி ஃபெய்லியர் ஆகிடுச்சுன்னு ஜாமீனில் விடுதலை செய்றீங்க. ஆனா 17 பேரை இழந்து மன வலியுடன் தவிக்கின்ற குடும்பங்களுக்கு யார் பதில் சொல்லுவாங்க? நீதிபதிக்கு 17 பேரைக் கொன்ற கொலைகாரனுக்கு ஜாமீன் வழங்க எப்படி மனசு வந்ததுன்னு தெரியல?” என்று நீதிமன்றத்தின் (அ)நீதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கொலைகாரன் மகாதேவசாமியின் ஜாமீனை இரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நீதியைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக, நீதிமன்றம் கொலைகார சாமியாருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், உறவினர்களை இழந்த மக்கள் நீதிக்காக வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய நீதிமன்றங்களின் நீதியாக உள்ளது, அதாவது இந்துராஷ்டிர நீதியாக உள்ளது.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram









