22.11.2025

சென்னைப் பல்கலை நிதி நெருக்கடியை அம்பலப்படுத்திய தோழருக்கு
போலீசு மிரட்டல்

அன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே!

டந்த அக்டோபர் 11 அன்று “தி இந்து” ஆங்கில செய்தித்தாளில் “மூன்று ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிடுவதற்கு நிதி இல்லை” என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. அக்கட்டுரையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மதிப்பெண் அறிக்கைகள் (Marksheet) மற்றும் தற்காலிகச் சான்றிதழ்களை (Provisional certificate) அச்சிட்டு விநியோகிக்கவில்லை. இதற்குக் காரணம்: எழுதுபொருட்களை வாங்கி அச்சிட்டு விநியோகிப்பதற்கு நிதி இல்லாதது” என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து கடந்த நவம்பர் 3-ஆம் தேதி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர் அறிவு, காணொளி ஒன்றைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், மூன்று ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்காததால் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியாமலும் வேலையில் சேர முடியாமலும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்பதை அம்பலப்படுத்திப் பேசினார். மேலும், இது ஒன்றிய-மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட செயற்கையான நிதி நெருக்கடி என்பதை அம்பலப்படுத்தியதுடன், தமிழ்நாடு அரசு சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு முறையாக நிதி ஒதுக்க வேண்டும்; சிறப்பு நிதி ஒதுக்கி பல்கலைக்கழகத்தை உடனடியாக நிதி நெருக்கடியிலிருந்து மீட்க வேண்டும்; போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை அச்சடித்து வழக்க வேண்டுமென்று புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக வலியுறுத்தினார்.

இந்நிலையில், நவம்பர் 20 அன்று இரவு சென்னை அண்ணா சதுக்கம் டி-6 போலீசு நிலையத்திலிருந்து பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் தீரனின் கைப்பேசி எண்ணிற்கு அழைப்பு வந்தது. அழைப்பில் பேசிய போலீசு அதிகாரி மேற்குறிப்பிட்ட செய்தியைக் குறிப்பிட்டு, இது தொடர்பாக தோழர் அறிவிடம் பேச வேண்டும் என்று கூறி அவருடைய கைப்பேசி எண்ணைக் கேட்டுள்ளார். ஆனால், தோழர் அறிவின் தனிப்பட்ட எண்ணைத் தர முடியாது என்று தோழர் தீரன் மறுத்துவிட்டார்.

ஆனால், தொடர்ந்து கைப்பேசிக்கு அழைப்பு விடுத்த போலீசு, “பல்கலைக்கழக நிதி நெருக்கடி தொடர்பாக எந்த விதமான போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், போலீசிடம் முறையாக அனுமதி பெற்றே நடத்துவோம் என்று போலீசு நிலையத்திற்கு வந்து கடிதம் எழுதி கொடுங்கள்” என்று அச்சுறுத்தும் நோக்கத்தில் பேசினார். மாணவர்களின் போராட்ட உரிமையைப் பறிக்கும் இத்தகைய நடவடிக்கையைச் செய்ய முடியாது என்று தோழர் தீரன் மறுத்த போதும், அந்த போலீசு அதிகாரி தொடர்ந்து அழைத்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.

மாணவர்களின் கல்வியை, எதிர்காலத்தைப் பாதிக்கின்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதும் கண்டிப்பதும் அதற்கு எதிராகப் போராடி முறியடிப்பதும் மாணவர் சங்கங்கள், மாணவத் தலைவர்களின் தார்மீக கடமையாகும். ஆனால், அதனைக் குற்ற நடவடிக்கையைப் போலச் சித்தரித்து, போலீசு நிலையத்திற்கு வந்து கடிதம் எழுதித்தரச் சொல்வதானது மாணவர்களின் உரிமையை, சொல்லிக்கொள்ளப்படும் பேச்சுரிமை, எழுத்துரிமையைப் பறிக்கும் செயலாகும். தமிழ்நாடு போலீசின் இந்த மாணவர் விரோத நடவடிக்கையை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

உண்மையில், சென்னைப் பல்கலைக்கழக நிதி நெருக்கடி குறித்தும் அதற்கு பின்னாலிருக்கும் கார்ப்பரேட்மயமாக்க சதித்திட்டம் குறித்தும் மாணவர்கள் விழிப்புணர்வு அடைந்துவிடக் கூடாது என்பதே போலீசு மற்றும் ஆளும் தி.மு.க. அரசின் நோக்கமாகும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி ஒன்றிய-மாநில அரசுகளால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுக்குக் கீழ் இயங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது. தி.மு.க. ஆட்சியிலும் இந்த நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒன்றிய பாசிச மோடி அரசோ, தேசிய கல்விக் கொள்கையை ‘ஏற்காததைக்’ காரணம் காட்டி பல்கலைக்கழக மானிய குழு மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கான நிதியை நிறுத்தி வைத்திருப்பதுடன், மோசடியான காரணங்களைக் கூறி பல்கலைக்கழகத்தின் வரி விகிதத்தைக் கூட்டி நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகம் முறையாக வரி செலுத்தவில்லை எனக் கூறி வருமான வரித்துறை மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி நேரடித் தாக்குதலில் இறங்கியது.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் குறித்து துளியும் கவலைப்படாமல், பல்கலைக்கழகத்திற்கான நிதி – மானியங்களைத் துண்டித்து, ஒன்றிய-மாநில அரசுகள் பல்கலைக்கழகத்தைத் திட்டமிட்டே சீரழித்து வருகின்றன. இவையெல்லாம் பல்கலைக்கழகத்தை தனியார்- கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கத்திலிருந்து திட்டமிட்டே மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி தீவிர நிலையை எட்டிவிட்ட காரணத்தால், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் மாத மாதம் போராட்டம் நடத்தி ஊதியத்தைப் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது; நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி இக்கல்வியாண்டில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தியது; பல்கலைக்கழக மாணவிகளுக்கு சொந்தமாக விடுதிக் கட்டித்தர நிதி இல்லாததைப் பயன்படுத்திக்கொண்டு, பல்கலைக்கழக மாணவிகள் விடுதி அமைந்திருந்த சேப்பாக்கம் இராமானுஜம் வளாகம் தோழி விடுதி கட்டுவதற்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது என சென்னைப் பல்கலைக்கழகம் கொஞ்சம் கொஞ்சமாக செல்லரிக்கப்பட்டு வருவது இதனை நிரூபிக்கிறது.

இதனைத்தான் பு.மா.இ.மு. தோழர் அறிவு தனது காணொளியில் அம்பலப்படுத்தி இருந்தார். இதனால் மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு அடைந்து பல்கலைக்கழகத்தை தனியார் – கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கம் தடைப்படும் என்ற காரணத்தாலேயே போலீசு மூலம் தோழர் அறிவை அச்சுறுத்தி அவரை முடக்குவதற்கு அரசு முயல்கிறது.

ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக மாணவர்களின் நலனில் அக்கறையுடன் எந்தவொரு சமரசமுமின்றி களத்தில் போராடிவரும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியும் அதன் தோழர்களும் இதற்கெல்லாம் அஞ்சோம்!  சென்னைப் பல்கலைக்கழகத்தை சீரழித்து அதனை ஏழை – எளிய மாணவர்களிடமிருந்து பறிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பதுடன் களத்தில் நின்று போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாணவர் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கும் மாணவர் அமைப்புகள், தோழர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் தி.மு.க. அரசு, தமிழ்நாடு போலீசின் இந்நடவடிக்கையை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கண்டிக்கிறது. புரட்சிகர – ஜனநாயக சக்திகள், சக மாணவர் அமைப்புகள் இந்நடவடிக்கையைக் கண்டித்து குரல் எழுப்ப வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறது.


இவண்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர-மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க