ஜம்மு – காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள சபர்வான் மலைகளின் (Zabarwan hills) உள்ள பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகளில் நூற்றுக்கணக்கான கனால் நிலங்களை (கனால்: வட இந்தியா, பாகிஸ்தான் போன்ற பகுதிகளில் நிலங்களை அளக்கும் அளவு முறை) துணை இராணுவப் படைகளுக்கு ஒரு புதிய தளத்தை அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்படுவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (National Green Tribunal) அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சனை அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர்வாசிகள், தங்களது இருப்பிடம் மற்றும் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “பசுமை மண்டல” (green zone) பகுதியில் நிலப் பயன்பாட்டு முறையை மாற்றுவது என்பது மேற்கு இமயமலையில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய மலைகளை (eco-fragile hills) பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
சபர்வான் மலையில் உள்ள பிரைன் (புறநகர் கிராமங்கள் இணைந்த பகுதி) உள்ளூர்வாசிகள் ஜம்மு – காஷ்மீர் நிர்வாகத்தைத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கையை நிறுத்த நிர்ப்பந்திக்குமாறு கோரியுள்ளனர். இந்த மலைப்பகுதி அருகில் புகழ்பெற்ற முகலாய தோட்டம் (Mughal Gardens) மற்றும் தால் ஏரி (Dal Lake) அமைந்துள்ளது.
ஆளும் தேசிய மாநாட்டு (National Conference) அரசாங்கம் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய ரிசர்வ் படைகளின் 61, 79, 117, மற்றும் 132 படையணிகளுக்கான தளத்தை அமைப்பதற்காக, ஒரு பெரியளவு பசுமை மண்டலப் பகுதி வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் கிராம மக்கள், தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ ஆவணங்களின் படி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று சி.ஆர்.பி.எஃப் (CRPF) அதிகாரிகளுக்கும் ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகத்திற்கும் நடந்த கூட்டத்தில் பிரையினில் உள்ள நில அளவை எண் 2744 படி 1,324 கனால் நிலங்கள் ‘படையணியின் முகாம்’ அமைப்பதற்கான பகுதியாக அடையாளம் காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி, சி.ஆர்.பி.எஃப் 79-வது படையணியின் கமான்டண்ட் அதிகாரியான கிஷோர் குமார், ஸ்ரீநகரின் துணை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், நிலப்பகுதியின் வருவாய் பதிவுகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த பதிவுகள் கிடைத்த பின், சாலை அமைக்கும் பணி செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்த வழக்கில் முக்கிய மனுதாரராக உள்ள குலாம் மொஹியுத்தின் ஷா, சபர்வான் மலை அடிவாரங்களில் 49 குடும்பங்கள் இருப்பதாக தீர்ப்பாயத்திடம் தெரிவித்தார். மேலும், இந்த பகுதி டச்சிகாம் தேசியப் பூங்காவின் நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் வருகிறது. இது பாதுகாக்கப்பட்ட காப்புக்காடு ஆகும். அங்கு கட்டுமானம் மற்றும் பிற மனிதச் செயல்பாடுகள் 1972 ஆம் ஆண்டின் விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1988 ஆம் ஆண்டின் தேசிய வனக் கொள்கை, ஸ்ரீநகர் மாஸ்டர் திட்டம் – 2035 மற்றும் பிற சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதலின் படி தடைசெய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
டாச்சிகாம் பூங்கா: காஷ்மீர் ஹங்குலின் இல்லம்
டாச்சிகாம் பூங்கா என்பது அழியும் தறுவாயில் உள்ள காஷ்மீர் ஹங்குல் (Kashmir Hangul) என்கிற மானின் வாழிடமாகும். காஷ்மீர் ஹங்கும் மட்டுமே தற்போது ஆசியாவின் சிவப்பு மான் இனத்தின் துணை இனமாக வாழ்ந்து வருகிறது. பல ஆயிரமாக இருந்த இவை, கடந்த சில ஆண்டுகளில் வாழிடம் அழிவு மற்றும் காலநிலை மாற்றத்தால், சில நூற்றுக்கணக்கான அளவிற்குச் சுருங்கிவிட்டது.
இருப்பினும், அண்மைக் காலங்களில் காஷ்மீர் ஹங்குல்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. டாச்சிகாம் பூங்கா, ஓவேரா வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் தான் கருப்பு கரடிகள், கஸ்தூரி மான்கள் மற்றும் சிறுத்தைகளும் வாழ்கின்றன.
முகாம் அமைத்தால் “மீட்க முடியாத சேதத்தை” ஏற்படுத்தும் என்றும், நடந்து கொண்டிருக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மனுதாரரான குலாம் ஷா கோரிக்கை விடுத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்துக்குச் சமீபத்தில் சென்றிருந்த குடியிருப்பாளர்கள் எடுத்த புகைப்படங்களில் பசுமையாக இருக்கும் காடுகளின் நடுவே பெரிய பாறைகளில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு இருந்துள்ளது.

மற்றொரு மனுதாரரான முகமது ரம்சான் ஹபீஸ், ஆரம்பத்தில் சி.ஆர்.பி.எஃப் 124 கனால் நிலத்தைப் பெற முன்மொழிந்ததாகவும், தற்போது அது 1,324 கனால் நிலங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“ஒருவேளை நிலம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டால், நாளை அவர்கள் 5,000 அல்லது 10,000 கனால் நிலங்கள் கேட்பார்கள். நாங்கள் அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. நாங்கள் பாதுகாப்புப் படைக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், அவர்கள் வனப்பகுதியை அழித்தால் அது சுற்றுச்சூழல் பேரழிவை உண்டாக்கும்” என்று ஹபீஸ் கூறினார்.
எங்களது சொர்க்கம் நரகமாக மாறிவிடும்!
கடந்த ஆண்டு, 49 பிரைன் குடியிருப்பாளர்கள் இந்த திட்டத்தால் தங்களது நிலமும் வாழ்வாதாரமும் பறிக்கப்படும் என பயந்து ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த திட்டம் எங்களது அடிப்படை உரிமையான சட்டம் 14, 21 மற்றும் 300A ஆகியவற்றை மீறுவதாகவும் இந்த திட்டம் எந்தவிதமான சுற்றுச்சூழல் அல்லது சமூக பாதிப்புகள் குறித்து முறைப்படி ஆய்வு செய்து மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
உயர்நீதிமன்றத்தில் நிலத்தைக் கையகப்படுத்த மாட்டோம் என சி.ஆர்.பி.எஃப் தெரிவித்த பிறகு மனு திருப்பி வாங்கப்பட்டது. இருப்பினும், சிவப்பு நிறக்குறிகள் (red markings) மக்களிடத்தில் நிலம் பறிக்கப்படும் என்கிற நிரந்தர அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.
“சி.ஆர்.பி.எஃப் முகாமிற்கு அரசு வேறு இடங்களைக் கண்டுபிடிக்கலாம்; ஏன் காட்டை அழிக்க வேண்டும்? இதுபோன்ற கொள்கைகளால் தான் காலநிலை மாற்றம் நடைபெறுகிறது. இதுபோன்று அரசின் நடவடிக்கை இருந்தால், எங்களது சொர்க்கம் நரகமாக மாறிவிடும்” என குலாம் ஷா கூறினார்.
குலாம் ஷா மற்றும் பிறர் தாக்கல் செய்த மனு, நவம்பர் 24 ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதில் அரசு நில அதிர்வு சார்ந்த மதிப்பீடு மற்றும் கார்பன் உமிழ்வின் தாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்யாமல் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
படிக்க: ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பு: தீவிரமடையும் சூழலியல் நெருக்கடி!
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம், பீர் பஞ்சால் மற்றும் கிரேட் இமயமலைகள் இடையில் அமைந்துள்ள துணை மலைத்தொடரின் வரிசையான சபர்வான் மலைத்தொடரின் மையப்பகுதியில் உள்ளது. சமீப மாதங்களில் இது காஷ்மீரில் புதிய ‘தீவிரவாத’ மையமாக மாறி வருகிறது. உளவுத்துறை அமைப்புகளின் கூற்றுப்படி, ஆயிரக்கணக்கான கனால்களில் பரந்து விரிந்துள்ள அடர்ந்த தாவரங்கள் மற்றும் பெரிய பாறைகள் கொண்ட சபர்வான் மலைப்பகுதியை, தென் காஷ்மீரிலிருந்து ஸ்ரீநகருக்கு நகர்வதற்கான பாதையாக போராளிக் குழுக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்கள், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சபர்வான் மலைப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த குறுகிய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஆட்சியில் உள்ள தேசிய மாநாட்டின் பேச்சாளர் இம்ரான் நபி தார் கூறியதாவது, “புதிய முகாம் டச்சிகாம் தேசிய பூங்காவையும் அருகிலுள்ள சுற்றுலா இடங்களையும் பாதுகாப்பதே நோக்கமாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்காக நான்கு பட்டாலியன்கள் முகாமிடத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சகம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, சுற்றுலாத் தலங்களும் சூழலியல் பகுதிகளும் பாதுகாப்பாகவும் இருக்க உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜா முஸாபர் பட் கூறியதாவது, “கடந்த இருபது ஆண்டுகளில் அரசின் அடுக்குமாடி திட்டங்களால் ஜம்மு மற்றும் காஷ்மீரில் காடுகள் பெருமளவில் குறைந்துவிட்டன. பரிந்துரைக்கப்பட்ட தளத்திற்காக அதிக மரங்கள் வெட்டுப்பட்டு வனப்பகுதிகள் அகற்றப்படுகிறது. இது வனவிலங்குகளின் இருப்பிடமாகும். இவ்வளவு சூழலியல் ரீதியாக நுண்மையான பகுதியில் கட்டமைப்பை எப்படி அமைக்க முடியும்?” என்றார்.
“உண்மையில், இந்த முன்மொழியப்பட்ட முகாம் பாதுகாப்பற்றதாக இருக்கும்; ஏனெனில் சபர்வான் மலைப்பகுதிகள் திடீர் வெள்ளப்பெருக்கும் மண் சரிவுகளும் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. அரசு இதற்காக வேறு ஏதாவது நிலத்தை தேர்ந்தெடுப்பது மேல்” என்றும், “பாதுகாப்புப் படைகள் இத்தகைய முகாம்களை அமைப்பதில் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் பொருட்களை ஆராய வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
2023 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் “ஸ்பிரிங்கர்” இதழில் வெளியிடப்பட்ட மதிப்பாய்வுச் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், டச்சிகாம் பூங்கா 1965 முதல் 2020 வரை சுமார் 8 சதவீதம் வனப்பரப்பை இழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு, டச்சிகாம் நிலப்பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய கடுமையான எச்சரிக்கையை வெளிப்படுத்தியது.
முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட சிவில் சமூக அமைப்பான, “கன்சர்ண்டு சிட்டிசன்ஸ் குழு (The Group of Concerned Citizens)” இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் வனத்துறையின் முன்னாள் தலைமை பாதுகாவலராக பணியாற்றிய மன்சூர் அகமது தாக் கூறியதாவது, “இந்த தளம் ஸ்ரீநகர் மாஸ்டர் திட்டத்தின் படி ‘பசுமை மண்டலம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, திட்டத்தையும் நகர்ப்புற சட்டங்களையும் திருத்தாமல் அதன் பயன்பாட்டை மாற்ற முடியாது. இது சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் உணர்திறனுள்ள பகுதி, அரசு இந்த திட்டத்தை முன்னெடுத்தால் அது பேரழிவை ஏற்படுத்தும்” என்றார்.
இஸ்லாமிய வெறுப்பாலும் ஜம்மு – காஷ்மீரில் உள்ள இயற்கை வளங்களை சூறையாடி அதானி அம்பானிக்களுக்காக தாரை வார்க்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் மோடி – அமித்ஷா கும்பல் பல்வேறு தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இதில் உச்சக்கட்ட தாக்குதல் தான் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு, கடுமையான திறந்தவெளி சிறைச்சாலையாக, ஜம்மு – காஷ்மீர் மாற்றப்பட்டது. அங்கு நடக்கும் மக்கள் போராட்டங்கள் வெளியில் வராத வண்ணம் பலமுறை இணைய முடக்கம், ஊடக முடக்கம், பத்திரிகை முடக்கம் என அடக்குமுறைகளை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து அமைக்கப் போகும் இராணுவ முகாம் என்பது ஜம்மு – காஷ்மீர் பகுதியில் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்த எத்தனிக்கும் நடவடிக்கைதான்.
நன்றி: தி வயர்
![]()
உமர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











