தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 18 ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தைப் பறித்துள்ளது தி.மு.க அரசு.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பு தலைமையின் கீழ் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அப்போராட்டங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அரசு உதவி பெறும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்வதற்கு ஏற்ப தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவது போன்ற கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையில் தி.மு.க அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 18-ஆம் தேதியன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பால் அச்சமடைந்த தி.மு.க அரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மூலம் வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் தொகுப்பூதிய ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், அன்றைய தினம் மருத்துவ விடுப்பு, தற்காலிக விடுப்பு தவிர வேறு எந்த விடுப்புக்கும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படாது என்றும் பணிக்கு வந்தவர்களின் விவரத்தை காலை 10:15 மணிக்குள் மனிதவள மேம்பாட்டுத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களை மிரட்டிப் போராட்டத்தை ஒடுக்குகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டது.
அதைப் பொருட்படுத்தாத ஆசிரியர்கள் அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தினால் ஆத்திரமடைந்த தி.மு.க அரசு, அன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டு ஆசிரியர்களைப் பழிவாங்கியுள்ளது. இதன் மூலம் தொடக்கக் கல்வித் துறையில் 29 ஆயிரத்து 755 பேர், பள்ளிக் கல்வித் துறையில் 19,967 பேர் என 49 ஆயிரத்து 722 ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தைப் பறித்துள்ளது.
தி.மு.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் “திமுக ஆட்சி அமைந்த பிறகு நான்கரை ஆண்டுகளாக முதலமைச்சரிடமும் துறைசார்ந்த அமைச்சர்களிடமும் கோரிக்கைகளை வைத்தோம். ஆனால் ஒரு சில கோரிக்கைகளைத் தவிர எங்களது வாழ்வாதார கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 13 ஆம் தேதி மாவட்ட அளவிலான ஒரு நாள் உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். 27ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும். ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.
எனவே, தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடுகின்ற ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டு அரசுத் துறைகளை கார்ப்பரேட்மயமாக்கும் தி.மு.க அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். மேலும், ஜனவரி 6 ஆம் தேதியன்று தொடங்குகின்ற அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பள்ளி கல்லூரி மாணவர்கள், ஜனநாயக சக்திகள் உள்ளிட்டோர் ஆதரவளிக்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










