இலங்கையின் கிழக்கு கடற்கரையை நவம்பர் 28 ஆம் தேதியன்று கடந்த டித்வா புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாகும். தற்போது வரை 607-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் மாயமாகியுள்ள 214-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பது, பல பகுதிகளுக்குச் செல்லக் கூடிய சாலைகள் முற்றிலும் சேதமடைந்திருப்பது போன்ற காரணங்களால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
டித்வா புயல் காரணமாகப் பெய்த தொடர் மழையால் களனி, களு, மகாவலி உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இதன் காரணமாக தலைநகர் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் d மூழ்கின. குறிப்பாக, கொழும்புவின் வடக்குப் புறநகர் கிராம மக்கள் வெள்ள பாதிப்பை அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.
இது குறித்துப் பேசிய டெலிவரி டிரைவர் தினுஷா சஞ்சயா “இரண்டு அடி அளவுதான் வெள்ளம் வரும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு மணி நேரத்திற்குள் என் இரண்டு மாடி வீடு முற்றிலும் தண்ணீருக்குள் மூழ்கியது. வெள்ளம் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை,” என்று தெரிவித்தார். அவர் தற்போது வித்யாவர்தனா பள்ளிக்குள் உள்ள நிவாரண முகாமில் தஞ்சமடைந்துள்ளார். அங்கு அண்டை வீட்டார் உள்ளிட்டு குழந்தைகளும் உள்ளனர்.
மேலும் புயலால் வாழ்வாதாரத்தை இழந்த 44 வயதான தையல்காரர் நிருஷிகா “நான் ஒரு சிறிய தையல் தொழிலை நடத்தி பிழைப்பு நடத்தி வந்தேன். என்னுடைய இரண்டு தையல் இயந்திரங்களும் தொலைந்து போயின”என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இவரைப் போன்று லட்ச கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற ஏக்கத்தோடு பறி தவித்து நிற்கின்றனர். இன்னும் பலர் தங்களது குடும்பத்தினரையும் உறவினர்களையும் இழந்து பரிதவித்து வருகின்றனர்.
மேலும் பதுளை, கேகாலை, மாத்தளை, நுவரெலியா உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பல கிராமங்கள் முழுமையாகப் புதையுண்டு போயுள்ளன. இவற்றில் கண்டி மாவட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பேரழிவால் தங்களது வீடுகளை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் 1,275 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்., நிலச்சரிவால் சாலைகள் சேதமடைந்ததாலும், வெள்ளத்தில் தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதாலும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது ஆகிய பணிகளை பாதுகாப்புப் படையினர் செய்து வருகின்றனர். இந்தப் பேரழிவைச் சமாளிக்க இலங்கை அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது.
வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியவர்கள் படுகாயங்களுடனும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1,500 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. அதனால் மக்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என மக்களுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
புயலால் இலங்கையின் உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சுத்தமான நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அசுத்தமான நீரால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழலும் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே, பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மக்கள் மீளாத நிலையில், தற்போது டித்வா புயலால் அவர்கள் பெருந்துயருக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











