SIR பயங்கரவாதம்! | பதிவு 2
ஒன்றியத்தில் மோடி – அமித்ஷா தலைமையிலான பாசிச கும்பல் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், தொகுதி மறுவரையறை ஆகிய பாசிச சட்டத்திட்டங்கள் மற்றும் தேர்தல் மோசடிகள் மூலம் பெயரளவிலான தேர்தல் ஜனநாயகத்திற்கு சவக்குழி வெட்டிக் கொண்டிருக்கிறது. அதன் உச்சமாக, தற்போது சிறப்பு தீவிர திருத்தம் (SIR – Special Intensive Revision) எனும் பாசிச பயங்கரவாத நடவடிக்கையை தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
முதல் கட்டமாக, கடந்த ஜூன் மாதத்தில் பீகாரில் “எஸ்.ஐ.ஆர்.” நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் என 68 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீக்கியும், மிகப்பெரும் அளவில் போலி வாக்காளர்களை சேர்த்தும் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கேற்ப வாக்காளர் பட்டியலை காவிமயமாக்கியது. இது, நடந்துமுடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், வரலாறு காணாத வகையில் பா.ஜ.க-வை வெற்றிபெறச் செய்தது.
இந்த அனுபவத்திலிருந்து எஸ்.ஐ.ஆர். பாசிச நடவடிக்கையை நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் அமல்படுத்தத் தொடங்கியிருக்கிறது.
அதன்படி, இரண்டாம் கட்டமாக 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்-ஐ நடைமுறைப்படுத்த உள்ளதாக கடந்த அக்டோபர் 27 அன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவை 51 கோடிக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகள் ஆகியவையாகும்.

இவற்றில் புதுச்சேரி தவிர்த்து தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகியவை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களாகும். 2026-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள இம்மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே அவசர அவசராமாக எஸ்.ஐ.ஆர்-ஐ நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது பாசிச கும்பல்.
மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலைக் காரணம்காட்டி எஸ்.ஐ.ஆர்-ஐ ஒத்திவைத்திருக்கும் தேர்தல் ஆணையம், கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள போதிலும் அங்கு எஸ்.ஐ.ஆர்-ஐ ஒத்திவைக்க மறுத்திருப்பது இச்சதியை வெளிக்காட்டுகிறது.
மறுபுறம், வாக்குரிமை சரிபார்ப்பு என்ற போர்வையில் எஸ்.ஐ.ஆர்-இன் மூலம் குடியுரிமை சரிபார்ப்பு நடவடிக்கையிலும் தேர்தல் ஆணையம் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. 2020-இல் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு (NRC) கோரப்பட்ட ஆவணங்களும் முன்மொழியப்பட்ட நடைமுறைகளும் எஸ்.ஐ.ஆர்-யிலும் ஏறக்குறைய அப்படியே பின்பற்றப்படுவது இதனை நிரூபிக்கிறது. மேலும், பீகாரில் எஸ்.ஐ.ஆர்-இன் போது, வெளிநாட்டவர் என சந்தேகிக்கப்படும் மக்கள் குடியுரிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நேரடியாக என்.ஆர்.சி-ஐ நடைமுறைப்படுத்தியுள்ள பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவிருந்தாலும், எஸ்.ஐ.ஆர்-லிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை இதனுடன் இணைத்து பார்க்க வேண்டும். அங்கு எஸ்.ஐ.ஆர்-க்கு பதிலாக, “சிறப்பு திருத்தம்” (Special Revision) எனும் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்தவர்களை நீக்குவது, திருத்தங்களை மேற்கொள்வது உள்ளிட்ட சாதாரண பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளது.
இவையெல்லாம், எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் குடியுரிமைக்கான சோதனை நடந்து வருவதையும், ஈழத்தமிழ் மக்கள், இஸ்லாமிய மக்களின் குடியுரிமை ஆபத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதையும் நிரூபிக்கிறது.
தமிழ்நாட்டு வாக்காளர்கள் நீக்கம்!
போலி வாக்காளர்கள் சேர்ப்பு!
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியான அக்டோபர் 27 அன்றிலிருந்தே தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் செல்லாததாக ஆக்கப்பட்டுள்ளது. மக்களால் உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிறகே, மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், 2002/2005-இல் தமிழ்நாட்டில் நடந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் (Intensive Revision) தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்களது அல்லது தங்கள் உறவினர்களின் விவரங்களோடு தங்களது படிவங்களை இணைத்துக் கொள்ளலாம்; அதற்கு பிந்தைய வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர். படிவங்களில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
ஆனால், 2002/2005 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பெரும்பாலான வாக்காளர்களுக்கு அச்சமயத்தில் தாங்கள் எந்த பகுதியில் வசித்தோம், எந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. வேலைகள் காரணமாக அடிக்கடி வீடு மாறிக் கொண்டிருப்பவர்கள், புலம்பெயர் மக்கள், 2007-ஆம் ஆண்டு எல்லை மறுவரையறைக்கு உள்ளாக்கப்பட்ட தொகுதிகளில் வசிப்பவர்கள் தங்களுடைய பெயர்களை 2002/2005 வாக்காளர் பட்டியலில் கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர். வாக்காளர் பட்டியல் இயந்திரத்தால் படிக்கக்கூடிய வகையில் (Non – machine readable) இல்லாததால், ஒரு வாக்காளரின் பெயரை கண்டறிய பல மணி நேரங்களும், சில சமயம் பல நாட்களும் செலவாகின்றன.
இதன் விளைவாக, தேர்தல் ஆணையத்தால் திட்டமிட்டப்படி எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவேற்றப்படவில்லை. எஸ்.ஐ.ஆர். படிவங்களை முழுவதுமாக நிரப்பாமலே பி.எல்.ஓ. பணியாளர்கள் மக்களிடம் இருந்து படிவங்களை பெற்றுக் கொள்வதாகவும், மலைப் பகுதிகளில் வாழும் மக்களிடத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, தாங்கள் அறிவித்த தேதிக்குள் எஸ்.ஐ.ஆர். பணிகளை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதற்காக, எஸ்.ஐ.ஆர். பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறி வருவதாக அப்பட்டமாக பொய்யுரைத்து வருகிறது.
மறுபுறம், தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்க்கும் மோசடியிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர். படிவங்களில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களுக்கான பட்டியலில், “01.07.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பீகாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதி” என்பது 13-வது ஆவணமாக சேர்க்கப்பட்டுள்ளது. பீகாரில் எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு அம்மாநிலத்தில் வாக்காளராக அங்கீகரிக்கப்பட்ட நபர், தமிழ்நாட்டிலும் வாக்காளராக பதிவு செய்யலாம் என்பதே இதன் அர்த்தம்.
அதாவது, ஆறு மாதங்களுக்கு முன்பு பீகாரில் வாக்களித்த ஒருவரால் தமிழ்நாடு தேர்தலிலும் வாக்களிக்க முடியும். இதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமாகவே போலி வாக்காளர்களை உருவாக்கும் வேலையில் தேர்தல் ஆணையம் களமிறங்கியுள்ளது (பிப்ரவரியில் நடந்த டெல்லி தேர்தலில் வாக்களித்த பலர் – மாநிலங்களவை உறுப்பினர் உட்பட – பீகார் தேர்தலிலும் வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது). மறுபுறம், தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலிலிருந்து பல லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.
இதனையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலுக்கு சாதகமான வகையில், இலட்சக்கணக்கான மக்களை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, போலி வாக்காளர்களை உள் நுழைப்பது என்ற நோக்கத்தில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் சதித்திட்டமும்
தி.மு.க-வின் பெயரளவிலான எதிர்ப்பும்
பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளை ஒட்டியுள்ள வட மாநிலங்களில், வெளிநாட்டினர் ஊடுருவுகிறார்கள் என்று பீதியூட்டி எஸ்.ஐ.ஆர். நியாயப்படுத்தப்படுகிறது. அதுபோல, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்; அவர்களை நீக்குவதற்கு எஸ்.ஐ.ஆர். அவசியம் என்று பா.ஜ.க – அ.தி.மு.க. கும்பலால் எஸ்.ஐ.ஆர். நியாயப்படுத்தப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் பா.ஜ.க. கும்பல் இலக்கு வைத்து வேலை செய்துவரும் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டத் தொகுதிகளில் வெற்றி பெறும் வகையிலும், மக்கள் அடித்தளத்தை விரிவுபடுத்துவதற்கு சாதகமான வகையிலுமே, எஸ்.ஐ.ஆர்-ஐ நடைமுறைப்படுத்த பாசிச கும்பல் திட்டமிட்டுள்ளது. இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது இதனை உறுதிப்படுத்துகிறது.
அதேபோல, அ.தி.மு.க. உள்ளிட்ட தன்னுடைய அடிவருடி கட்சிகளுக்கு சில தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்து கொடுப்பதன் மூலம், அங்கெல்லாம் மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள பாசிச கும்பல் திட்டமிடுகிறது. எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்பட்டால் தங்களுக்கும் சில தொகுதிகளில் வெற்றிகள் உறுதியாகும் என்ற அடிப்படையிலிருந்துதான் அடிமை அ.தி.மு.க-வும் எஸ்.ஐ.ஆர்-ஐ ஆதரித்து வருகிறது.
அதேசமயம், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்பட்டாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்களால் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற குறுகிய கண்ணோட்டத்திலிருந்தே தி.மு.க-வின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பது, அடையாளப் போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குள் தி.மு.க. தன்னை வரம்பிட்டுக் கொள்வது அதன் அடிப்படையிலேயே. மேலும், எஸ்.ஐ.ஆர்-ஐ காட்டி மக்களின் பா.ஐ.க. எதிர்ப்பு வாக்குகளை கவர்வதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இது பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கையை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு, தன்னை நம்பி வாக்களித்த மக்களை பாசிசத்திற்கு பலியிடும் துரோக நடவடிக்கையாகும்.
எதிர்க்கட்சிகளால் எஸ்.ஐ.ஆர்-ஐ
தடுத்து நிறுத்த முடியாதது ஏன்?
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் ஆளும் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்த்து வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் எஸ்.ஐ.ஆர்-ஐ “வாக்குத் திருட்டு”, “சதி” என்றும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வாக்காளர் பட்டியலை காவிமயமாக்குவதற்கான முயற்சி” என்றும் விமர்சித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நவம்பர் 11-ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றன. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இலட்சக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் பேரணிகளை நடத்தி வருகிறது.
மேலும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையானது அரசியலமைப்பு சட்டங்கள் 14, 19, 21, 325, 326 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளதாகக் கூறி எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றன. குறுகிய காலத்தில் செயல்படுத்தப்படும் எஸ்.ஐ.ஆர்-ஆல் இலட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிபோகும் அபாயம் உள்ளதாக தங்களுடைய மனுக்களில் விளக்கியிருக்கின்றனர்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்நடவடிக்கை எஸ்.ஐ.ஆர்- தடுத்து நிறுத்துவதற்கு போதுமானதாக உள்ளதா என்று கேள்வியெழுப்பினால், நிச்சயம் இல்லை. ஏனெனில், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், “எஸ்.ஐ.ஆர்-ஐ அமல்படுத்துவதில் எங்களுக்கு பிரச்சினையில்லை. தேர்தலுக்கு முன்னர், குறுகிய காலத்தில் அவசர அவசரமாக செயல்படுத்துவதே பிரச்சினை” என்றே கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
மாறாக, எஸ்.ஐ.ஆர் என்பது கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை, குடியுரிமையை பறிப்பதற்கான அப்பட்டமான பாசிச நடவடிக்கையாகும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் கொடுங்கனவான இந்துராஷ்டிரத்திற்கான முக்கியமான அடிக்கட்டுமானமாகும். இந்த அடிப்படையிலிருந்து எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதில்லை.
அதனால்தான், உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதுடன் தங்களுடைய கடமையை முடித்துக் கொள்கின்றன. ஆனால், பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இலட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது அம்பலமான போதிலும் அதற்கு தடை விதிக்க மறுத்து, தேர்தல் ஆணையத்திற்கு பக்கபலமாக இருந்த உச்சநீதிமன்றத்திடம் சென்று நிற்கின்றனர். இதன் மூலம் எஸ்.ஐ.ஆர்-யைத் தடுத்து நிறுத்திவிட முடியும் என்று எதிர்க்கட்சிகள் நம்ப சொல்கிறார்கள். ஆனால், தற்போதும் உச்சநீதிமன்றம் எஸ்.ஐ.ஆர்-க்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசக்கயிறு எவ்வளவுதான் இறுக்கினாலும், தங்களின் இறுதி மூச்சுவரை பாசிஸ்டுகளை ஜனநாயகப் பூர்வமாகத்தான் அணுகுவோம்; அவர்களை வீழ்த்த மக்களுடன் கைக்கோர்க்க மாட்டோம் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள். பீகார் தேர்தல் முடிவே இதற்கு சமீபத்திய சான்று. எதிர்க்கட்சிகளின் இந்த அணுகுமுறைதான் பீகாரில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு சாதகமாக அமைந்தது. இலட்சக்கணக்கான இஸ்லாமிய, பட்டியலின, பெண்களின் வாக்குரிமையை பறிக்க வழிவகுத்தது.
ஆகவே, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளானது எஸ்.ஐ.ஆர்-ஐ அமல்படுத்தி பாசிஸ்டுகள் தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே வழிவகுக்கும். அதன் விளைவாக, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். எதிர்க்கட்சிகளும் அதை ஏற்றுக்கொண்டு ‘வேறுவழியின்றி’ தேர்தலில் பங்கேற்பர். இறுதியில் பாசிசத்திற்கு பலியாவது மக்களே!
இனி, தேர்தல்கள் சடங்குத்தனமானவையே!
பீகாரைப் போலவே நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே எஸ்.ஐ.ஆர்-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. கும்பல் செயல்பட்டு வருகிறது. தாங்கள் ஆளும் மாநிலங்களில் வெற்றியை உறுதி செய்வது; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தங்களுடைய மக்கள் அடித்தளத்தைப் பொறுத்து தங்களுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர் பட்டியலை காவிமயமாக்குவதைப் போன்று, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நாடு முழுவதும் தொகுதி மறுவரையறையை நடத்தி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளையும் காவிமயமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாசிச கும்பல் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மற்றும் முதல்வர் வேட்பாளர்களாக பா.ஜ.க-வை சார்ந்த யார் முன்னிறுத்தப்பட்டாலும், அவர்கள் வெற்றி பெறும் வகையில் தேர்தல் கட்டமைப்பை பாசிச கும்பல் மறுவார்ப்பு செய்துக் கொண்டிருக்கிறது.
பாசிச ஹிட்லர் ஜெர்மனியில் தேர்தல் கட்டமைப்பை கலைத்துவிட்டு, அப்பட்டமான பாசிச ஆட்சியை நிறுவியது போலல்லாமல், இந்தியாவில் தேர்தல் கட்டமைப்பை சடங்குத்தனமாக மாற்றி, இந்துராஷ்டிர முடியாட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் செயல்பட்டு வருகிறது. அதன் அடிக்கட்டுமானங்களாகவே எஸ்.ஐ.ஆர்., தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பாசிச நடவடிக்கைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆகவே, எஸ்.ஐ.ஆர். என்பது தேர்தல் கட்டமைப்பை சடங்குத்தனமான மாற்றுவது; கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை மற்றும் குடியுரிமை பறிப்பது; தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மறைமுகமாக அமல்படுத்துவது; கோடிக்கணக்கான மக்களை அகதிகள் என்ற பெயரில் வதை முகாம்களில் அடைத்து படுகொலை செய்வது; இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை நிலைநாட்டுவதுடன் இணைந்தது ஆகும். இந்த அடிப்படையிலிருந்து தேர்தல் ஆணையம் – பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளை நாம் எதிர்க்க வேண்டும்.
2020-ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மோடி அரசு அமல்படுத்தியதற்கு எதிராக நாடு முழுவதும் கட்டியமைக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் ஷாகின்பாக் வடிவிலான போராட்டங்களும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் நெஞ்சுறுதிமிக்க போராட்டங்களும்தான் பாசிச மோடி அரசை பணிய வைத்துள்ளது என்பது வரலாறு. அத்தகைய போர்க்குணமிக்க, உறுதிமிக்க மக்களின் போராட்டங்களை எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக கட்டியமைக்கும் போதுதான் அதனை தடுத்து நிறுத்த முடியும். எனவே, அதற்கான பணிகளில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஈடுபட வேண்டும்.
![]()
அமீர்
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










