திருப்பரங்குன்றம்: மண்ணைக் கவ்விய காவி கும்பல்!

‘முருக பக்தர்’ மாநாட்டு தோல்விக்குப் பிறகு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டாவது முறையாக காவி கும்பல் மண்ணைக் கவ்வியுள்ளது. தமிழ்நாடு மக்களின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வும், களத்தில் புரட்சிகர - ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டமும் மீண்டும் வென்றுள்ளது.

துரை திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து கலவரத்தைத் தூண்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் பல்வேறு வகைகளில் முயற்சித்து வருகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு – கோழி பலியிடுவது முருகன் கோவிலின் புனிதத்தைக் கெடுப்பதாகக் கூறி இந்தாண்டு தொடக்கத்தில் பிரச்சினையைக் கிளப்பியது. போலீசு, நீதிமன்றத்தின் துணையுடன் ஆடு – கோழி பலியிடுவதற்குத் தடையும் விதித்தது.

இந்நிலையில், திருக்கார்த்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் – தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றப் போவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் சி.காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிவித்தார்.

“ஆகம விதி”யின்படியே, முருகன் கோவிலின் கருவறைக்கு மேல் உச்சியில் இருக்கக்கூடிய மலை உச்சியில்தான் தீபம் ஏற்ற வேண்டும்.  அதனடிப்படையில், மலையிலுள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் திருக்கார்த்திகை அன்று ஆண்டுதோறும் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

ஆனால், அதற்கு கொஞ்சமும் தொடர்பற்ற சிக்கந்தர் தர்கா அருகே உள்ள நில அளவைக் கல்லை தீபத்தூண் என்று கூறி, அங்கு தீபமேற்ற வேண்டுமென காவி கும்பல் மதவெறி – பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. இதன் மூலம் சிக்கந்தர் தர்காவை மையப்படுத்தி தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்து வருகிறது.

இதனையடுத்து, “இந்து தமிழர் கட்சி”யைச் சார்ந்த ராம. ரவிக்குமார் எனும் சங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “1994 திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் மலை உச்சியில் தீபமேற்ற அனுமதிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபமேற்ற முடிவு செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல” என்று அப்பட்டமாக பொய்யுரைத்தார்.

உண்மையில், 27.12.1994 அன்று இந்துத்துவ அமைப்பினர் சிலர் தர்காவிற்கு சொந்தமான கொடிமரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியினை திருடி சென்று விட்டு, கொடிமரத்திற்கு அருகில் தீபம் ஏற்ற வேண்டுமென முயற்சித்தனர். மத கலவரம்  நடத்த முயற்சித்த இந்து அமைப்பினரை தடுத்து நிறுத்திய பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு (Crl.O.P.No.21192 of 1998) தொடரப்பட்டது. 30.11.1998 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், கொடிமரம் மற்றும் அதற்கருகில் உள்ள இடங்கள் தர்காவிற்கு சொந்தமானது; இஸ்லாமியர்களின் உரிமையை பாதிக்கும் வண்ணம் எந்தவித இந்து அமைப்புகளையும் தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தீபமேற்ற அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இத்தீர்ப்பையே மறைத்து 1994 வழக்கில் மலை உச்சியில் தீபமேற்ற அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதனை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை என்றும் பொய்யான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தது சங்கி கும்பல்.

டிசம்பர் 1 அன்று இவ்வழக்கை விசாரித்த சங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நில அளவை கல்லில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து சங்கிகளுக்கு ஆதரவாக அநீதியான தீர்ப்பை வழங்கினார். ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த நீதிமன்ற தீர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு, திருப்பரங்குன்றம் அர்ச்சகர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் வாக்குமூலங்களை ஏற்காமல், எந்தவொரு அடிப்படை ஆதாரமுமின்றி, சங்கிகளின் பொய் பிரச்சாரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இத்தீர்ப்பை வழங்கி சங்கி கும்பலின் கலவரத் திட்டத்திற்கு அடித்தளமிட்டார்.

கலவரத்தில் ஈடுபட்ட காவி கும்பல்.

இந்நிலையில், டிசம்பர் 3 அன்று திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தீபத்தூணில் தீபமேற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ராம. ரவிக்குமார் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.

இதனை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் நீதிமன்ற பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் சி.ஐ.எஸ்.எஃப். (CISF) வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பை முன்னரே அறிந்தது போல திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் காத்திருந்த காவி குண்டர் படை, “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கமிட்டு சி.ஐ.எஸ்.எஃப். படையை வரவேற்றது. அங்கு தமிழ்நாடு போலீசுக்கும் சி.ஐ.எஸ்.எஃப். படைக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தாலும் மலை உச்சியில் தீபம் ஏற்ற தமிழ்நாடு போலீசு மறுத்துவிட்டது. அறநிலையத்துறை சார்பாக வழக்கம் போல உச்சி பிள்ளையார் கோவிலில் தீபமேற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சங்கிக் கூட்டம் நடத்திய கலவரத்தில், போலீசு மூவரின் மண்டை உடைந்தது.

இது பாசிச கும்பலின் கலவரத் திட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திக் காட்டியது. திருப்பரங்குன்றத்தில் காவி கும்பல் மூட்ட விரும்புவது கார்த்திகை தீபமல்ல, கலவரத்தீ என்பதை தமிழ்நாட்டின் மக்கள் உணர்ந்துகொண்டு, காவி கும்பலுக்கு பலத்த அடியை கொடுத்துள்ளனர்.

சங்கிகளின் கலவரத்திற்கு அடித்தளமிட்ட நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனை பதவி விலக வலியுறுத்தி மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.

இதன் மூலம், ‘முருக பக்தர்’ மாநாட்டு தோல்விக்குப் பிறகு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டாவது முறையாக காவி கும்பல் மண்ணைக் கவ்வியுள்ளது. தமிழ்நாடு மக்களின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வும், களத்தில் புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டமும் மீண்டும் வென்றுள்ளது.

அதேசமயம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற அனுமதியளித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரி டிசம்பர் 4 அன்று தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு அம்மனுவை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றமும் மறுத்துவிட்டது.

மேலும், டிசம்பர் 4 அன்று மலை உச்சியில் தீபம் ஏற்றாதது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்த சங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை அடாவடியாக இரத்து செய்தார்; அன்றைய தினமே மலை உச்சியில் தீபமேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இருப்பினும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பில் தொடக்கம் முதல் இறுதிவரை நீதிமன்றங்களின் கரசேவை தொடர்ந்தது போல, திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் நீதிமன்றங்களும், ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் காவி கும்பலுக்கு பக்கபலமாக நிற்கின்றன என்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே, பாசிச கும்பலின் கலவரத் திட்டத்தை முறியடிக்க புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் களத்தில் ஒன்றிணைந்து போராட வேண்டும். திருப்பரங்குன்றத்திற்குள் இந்து முன்னணி உள்ளிட்ட சங்கப் பரிவார கும்பலை அனுமதிக்காமல் விரட்டியடிக்க வேண்டும்!


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க