SIR பயங்கரவாதம்! | பதிவு 9
இந்தியா முழுவதும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision) எனும் பாசிச நடவடிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மோடி அரசின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையின் மூலம் பீகாரில் மட்டும் 68 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அதேசமயம், எஸ்.ஐ.ஆர். என்பது மக்களின் வாக்குரிமையை பறிப்பதைத் தாண்டி, மறைமுகமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை (National Register of Citizens) அமல்படுத்தி குடியுரிமையை பறிப்பதற்கான சதித்திட்டத்தையும் கொண்டுள்ளது.
இச்சூழலில், பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில், நேரடியாகவே தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தி, இலட்சக்கணக்கான மக்களின் குடியுரிமையை பறித்து, அம்மக்கள் மீது பாசிச ஒடுக்குமுறைகள் தொடுக்கப்பட்டுவருவது குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
அசாமில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் 2019-இல் வெளியானது. இதில், 19 இலட்சம் மக்கள் “வெளிநாட்டினர்” என்று முத்திரை குத்தப்பட்டு நீக்கப்பட்டிருந்தனர். இவர்களில் கணிசமானோர் வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள் ஆவர்.
இம்மக்களில் பலர் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வெளிநாட்டு தீர்ப்பாயங்களில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவ்வழக்குகளில் வெளிநாட்டினர் என்று தீர்ப்பு வழங்கியும், வழக்கு நிலுவையில் உள்ள போதிலும், அம்மக்களை கைது செய்து, தடுப்பு முகாம்களில் (Detention camps) அடைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்து வருகிறது பாசிச அசாம் அரசு. இது அசாமில் இயல்புநிலையாக்கப்பட்டுள்ளது.
அதற்காக, 3,000 பேரை அடைத்து வைக்கக்கூடிய வகையிலான நாட்டிலேயே மிகப்பெரிய “மத்தியா தடுப்பு முகாம்”-ஐ (Matia detention camp) கடந்த 2021-ஆம் ஆண்டில் அசாம் அரசு செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இம்முகாமில், கடந்த செப்டம்பரில் 49 வயதான அம்சாத் அலி என்பவர் உயிரிழந்திருக்கிறார். இவர் இந்தாண்டு மே 28-ஆம் தேதி வெளிநாட்டவர் என்று கூறி போலீசால் கைது செய்யப்பட்டு முகாமில் அடைக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதத்தில் அம்சாத் அலிக்கு புற்றுநோய் இருப்பது உறுதியான நிலையில், அவரை மருத்துவ சிகிச்சைக்காக விடுவிக்கக்கோரி உறவினர்கள் அரசுக்கு கடிதங்கள் எழுதினர். ஆனால், அவர் விடுவிக்கப்படாமல் போலீசு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதே போன்று கடந்த ஏப்ரல் மாதத்தில் அப்துல் மாட்லெப் என்ற மற்றொரு இஸ்லாமியரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இம்முகாம்களில் மிக மோசமான, சுகாதாரமற்ற வகையில் மக்கள் அடைத்து வைக்கப்படுவதால் எளிதில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகின்றனர். மேலும், விலங்குகள் உண்பதற்குக் கூட தரமற்ற வகையிலான உணவுகளே இம்மக்களுக்கு வழங்கப்படுகின்றன. முக்கியமாக, நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சையை மறுப்பதன் மூலம் அவர்களை படுகொலை செய்து வருகிறது அசாம் அரசு.
மேலும், வங்க மொழி பேசும் இஸ்லாமிய குடும்பங்களில் அனைவரும் அல்லது பெரும்பாலானோரும் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இக்குடும்பங்களில் ஒருவரை மட்டும் கைது செய்து தடுப்பு முகாம்களில் அடைப்பது; குழந்தைகளிடம் இருந்து தாயை அல்லது தந்தையை பிரிப்பது; உறவினர்களை பார்க்கக்கூட அனுமதி மறுப்பது என அம்மக்களின் குடும்பங்களை சிதைத்து வருகிறது பா.ஜ.க. அரசு.
இத்தகைய பாசிச ஒடுக்குமுறைகள் மூலம், தாங்களோ அல்லது தங்களது உறவினர்களோ எப்போது வேண்டுமானாலும் போலீசால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டு படுகொலை செய்யப்படலாம் என்ற அச்ச உணர்விலேயே வாழும் நிலையை வங்க மொழி பேசும் இஸ்லாமிய மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது.
மறுபுறத்தில், வங்க மொழி பேசும் இஸ்லாமிய மக்கள் சட்டவிரோதமாக அசாமின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்கள் என்று கூறி, அவர்களின் வீடுகளையும் மசூதிகளையும் புல்டோசர் மூலம் இடித்து, அம்மக்களை தற்காலிக தங்குமிட முகாம்களுக்கு (Makeshift Shelter Camps) விரட்டியடித்துக் கொண்டிருக்கிறது அசாம் பா.ஜ.க. அரசு. நீல நிற தார்ப்பாயால் குடிசைகள் அமைக்கப்பட்ட, எந்த அடிப்படை வசதிகளுமற்ற இம்முகாம்களில் அம்மக்களும் வேறு வழியின்றி வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். இம்மக்கள் எந்த வகையிலும் கன்னியமாக வாழ்ந்துவிடக் கூடாது என்ற கொடூர சிந்தனையிலிருந்து இப்பாசிச நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா முதலமைச்சராக பதவியேற்ற 2021, மே மாதத்திலிருந்து 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலத்திலிருந்து 50,000 மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், சமீபத்திய மாதங்களில் புல்டோசர் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நடவடிக்கைகளின் மூலம், வங்க மொழி பேசும் இஸ்லாமிய மக்களை மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அடைத்து, எந்த உரிமைகளுமற்ற இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
மேலும், காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு “ஆபரேஷன் புஷ்பேக்” எனும் பாசிச நடவடிக்கையை தீவிரப்படுத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்க மொழி பேசும் இஸ்லாமியர்களை திடீரென கைது செய்து சட்டவிரோதமாக வங்கதேசத்திற்குள் விரட்டியடிக்கிறது.
வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து அசாமிற்குள் குடியேறிய மக்கள் மீதான ‘அந்நியர்’ வெறுப்பு அசாம் மக்களிடையே விதைக்கப்பட்டிருந்தது. இதனை இஸ்லாமிய வெறுப்புணர்வாக முனைவாக்கம் செய்ததன் மூலம், வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள் மீது பகிரங்கமாக பாசிச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது பா.ஜ.க. கும்பல்.
இந்நிலையில், அசாமை முன்மாதிரியாகக் கொண்டு நாடு முழுவதும் தடுப்பு முகாம்களை அமைப்பதற்கான பணியிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி, “குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணை, 2025”-ஐ மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, நாட்டின் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைப்பதற்கான தடுப்பு முகாம்களை கட்ட வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. மேலும், நாட்டின் தலைநகரான புது டெல்லியிலும், கர்நாடகா, கோவா, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏற்கெனவே தடுப்பு முகாம்கள் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் தடுப்பு முகாம்களை அமைப்பதற்கான அறிவிப்பை பாசிச மோடி அரசின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையுடனும், பா.ஜ.க. கும்பல் ஆளும் மாநிலங்களில் புல்டோசர் பயங்கரவாதம் நிலைநாட்டப்படுவதுடனும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், கடந்த நவம்பர் 22 அன்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘ஊடுருவல்காரர்’களையும், ‘சட்டவிரோத குடியேறி’களையும் கையாள்வதற்காக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு முகாம்களை அமைப்பதற்கு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் கொடுத்திருக்கிறார். அதாவது, எஸ்.ஐ.ஆர். மூலம் இஸ்லாமிய மக்களின் குடியுரிமையை பறித்து பாசிச கொடூரங்களை அரங்கேற்றுவதற்கு யோகி அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது.
எஸ்.ஐ.ஆர். மூலம் குடியுரிமை பறிக்கப்படும் பாசிச பேரபாயமானது இஸ்லாமிய மக்களை மட்டுமல்ல; தலித் மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், இந்துராஷ்டிரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரையும் எதிர்நோக்கியுள்ளது. அதேபோல், தற்போது பா.ஜ.க. அரசால் அமைக்கப்படும் இந்த தடுப்பு முகாம்கள் பிற்காலத்தில் ஹிட்லரின் வதை முகாம்களாக மாற்றப்படும் அபாயமும் உள்ளது.
![]()
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











